செத்தபின்பும்

வாதாபியை விழுங்கிய அகத்தியனின் தொப்பையாக..
ஆலகால விடத்தையுண்ட சிவனின் தொண்டைக்குழி போல
மேனி கறுத்து.. பகலை விழுங்கி ஏப்பம் விட்டபடி இருண்டு கிடந்தது இரவு.

ஆங்காங்கே சில்வண்டுகளின் சிங்கார ராகம்..
பாம்புகளின் ‘கிறிச்..கிறிச்’ சத்தம்.
ஊமத்தங்கூவைகளின் உறுமல் ஓசை..

அவள் தன் வாழ்நாளில் தனியாக இருளில் நடந்ததே கிடையாது.
இன்று…

தன்னந் தனிவழியே காட்டு நிலமேறி.. சுடலை வழிதாண்டி
குளங் குட்டை - கோயில் வெளி கடந்து
நின்று நிதானிக்க நேரமின்றி
வேகமாக… மிகவேகமாக குன்றுங் குழியும்
குறுக்கு வழியுமாக…
இத்தனை இடம் தேடியும் கண்ட பலன் ஏதுமில்லை.

குளக்கரையில் விழி அகலத் திறந்தாள்
சுற்றிலெங்கும் நோட்டம் விட்டாள்.
மருதமரத்தின் அடி முதல் முடிவரை பார்வையால்
புரட்டி எடுத்தாள்.

அருகிலொரு ஆலமரம்….
விழுதெறிந்த பெரிய மரம்
ஓவ்வொரு விழுதும் மண்ணை முட்டி மோதி
ராஜகம்பீரத்துடன் ..
மரத்துக்கும் மண்ணுக்கும் பாலமமைத்துக் கொண்டிருந்தன.

ஆலமரத்தில் தேவதைகள் முனிகள்
வாசம் செய்வதுண்டு என்ற சொல்லை
எப்போதோ கேட்டதாக ஒரு நினைப்பு.

கீழே பார்த்தாள்..மேலே பார்த்தாள்..எட்டிப் பார்த்தாள்
சுற்றிப் பார்த்தாள் எங்குமில்லை.
பற்றை..புல்பூண்டு பார்த்த இடத்திலெங்கும்
கண்ணிற் படவில்லை.

சாமம் தாண்டி ஒன்றைப் பன்னிரண்டு துரத்திப் பிடித்தது
ஊரார் நாய்களெல்லாம் அவளுக்குப் பின்னாலே…

சுடலை தாண்டி அவள் செல்லும் வேளையிலே
துருவும் பார்வையினால் துளாவித் தேடினாள்
எரிந்த கொள்ளிக்கட்டை.. எடுத்தெறிந்து பார்த்தாள்

அருகிலிருந்ததொரு பாழடைந்த வீடு
பாழடைந்த வீட்டின் முற்றம்.. சுற்றம்
எங்கு தேடியும் கண்ணிற் படவில்லை.

விக்கிரமாதித்தன் கதையது போல்
விடாமுயற்சியுடன் தொடர்ந்தாலும்
கையில் பலன் கிட்டவில்லையே…

அவளது கண்ணில் ஒருவகை பிரகாசம்
ஒளிமயமான பார்வை ஊடுருவியது
தேடி வந்ததை அடைந்தே தீர வேண்டுமென்ற வெறி
கண்ணில் தெரிந்தது.

கடற்கரை மணலில் நடந்தாள்..
முட்புதரில் கிடந்தாள்..
வலியின்றி வலியின்றி வழிநெடுக நடந்தாள்

கம்பிவேலி தாண்டி மூர்க்கமாக நடந்தாள்
அங்குமிங்கும் தேடினாள்…அருகிலெல்லாம் பார்த்தாள்…
வந்ததொரு வாடை சொன்னதொரு சேதி..

கும்மிருட்டு வேளையிலும் குறிதவறாது நடந்தாள்
வாடை வந்த திசைதனிலே வேகமாக முன்னேறினாள்

முந்தியென்றால் அவளுக்கு வயிற்றைக் குமட்டியிருக்கலாம்
வாந்தி எடுத்திருக்கலாம்.
இப்போது அவள் எதுக்கும் அசரவில்லை.

இரத்த வாடையோ பிணவாடையோ
நாற்றம் வந்த திசை நோக்கி
பூனையானாள்…மெதுவாக…
அடிமேல் அடி வைத்து மெதுவாக நடந்தாள்

அருகில் பெரிய பற்றை விலக்கி விரைவானாள்
சருகு மூடி மண்ணில் புதைந்து
மனிச உடலம்………….!!!

கண்ணில் ஊசி முனையை நிறுத்தி
கரிய இருளைக் குத்திக் கிழித்து
சருகை விலக்கி உற்றுப் பார்த்தாள்.

தேடித்தேடி அலைந்து திரிந்து
ஈற்றில் தன் உடலைக் கண்டதில் மகிழ்வு…மனநிறைவு.
இருந்தாலும் அவளுக்கு ஓர் வகையில் துன்பந்தான்

ஓன்றாக திரிந்து… ஒன்றாக இருந்து… ஒன்றாக வாழ்ந்த பின்னர்
உன்னத உயிரின் இழப்பு பேரிழப்புத்தானே…?

கல்லூரி வாழ்க்கையிலே ஒன்றாகத் திரிந்தவர்கள்
இருமனம் இணைந்து ஒருவராய் நின்றவர்கள்
செல் பட்டு மாளாமல் திரு-மணம் புரிந்தவர்கள்…

கைதாகி ஒன்றாக காவலில் இருந்தவர்கள்
சாவில் மட்டும்…
அவள்தானே முந்தி விட்டாள் என்பதாலும்
தனிப்பிணமாய் பற்றையிலே கிடப்பதனால்
மீண்டும் தவித்திருந்தாள்
ஆவியவள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)