5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது.

மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன.

மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினால் கட்டுண்ட தமிழ்ச் சமூக அமைப்பில் நிலவிய கூட்டுக்குடும்பம் உடைந்து சின்னாபின்னமாகிய வேளையில் நவீனத்துவம் என்ற பெயரினால் கல்வியிலும் பண்பாட்டிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட தமிழிலும் உரைநடை படிப்படியாக வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வியின் விருத்தி காரணமாக ஆங்கில நாவல்களை கற்ற பலர் அதனால் உந்தப்பட்டு தமிழிலும் நாவல்களைப் படைத்தனர்.

‘Pயசடநல வாந pழசவநச’ என்னும் ஆங்கிலக் கதையின் மொழிபெயர்ப்பாக ‘ஹன்னாமூர்’ (ர்யnயொ அழசந) என்ற பெண்மணியால் 1856இல் யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிடப்பட்ட ‘காவலப்பன் கதை’யே தமிழில் தோன்றிய முதல் நாவல் எனப் பலர் கூறினாலும் இன்றுவரை, 1879 இல் (1876 என்றும் கூறுவர்) மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரமே தமிழின் முதல் நாவல் எனக் கொள்ளப்படுவது வரலாறாகி விட்டது.

இத்தகைய பின்புலத்தில் நின்று கொண்டுதான் ஈழத்து தமிழ் நாவல் வரலாற்றினை நாம் நோக்க வேண்டியுள்ளது. இவ்வகையில் ஈழத்து தமிழ் நாவல்களின் வளர்ச்சிப் போக்கினை தெளிவாக அறிய வேண்டுமாயின்,

1. தொடக்க காலம் முதல் 1960 கள் வரையான ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி
2. 1960 களின் பின்னைய ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி

என இருநிலைப்பட்ட தன்மையில் அவற்றின் போக்குகளை இனங்காண வேண்டும்.



5.4.1. தொடக்க காலம் முதல் 1960 கள் வரையிலான ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கு

ஈழத்தில் நாவல் இலக்கியம் தோன்றியது முதல் 1960 கள் வரையிலான காலகட்டத்தினை நுணுகி ஆராய முற்படுவோர் அவற்றினை உள்ளடக்கம், மண்வாசனை, பிரதேச உணர்வு, போன்ற நிலைகளில் நின்று ஆய்வுக்குட்படுத்தியமை புலனாகின்றது. இவ்வகையில் தான் இலங்கையில் 1850 களின் பின்னர் நாவல் இலக்கியத்துக்கான களம் ஆரம்பிக்கத் தொடங்கியது. எனினும் 1914 இல் தோன்றிய ‘நொறுங்குண்ட இருதயம்’ நாவல்தான் ஈழத்தின் மண்வாசனைப் பண்புடன் ஒன்றியமைந்த முதல் நாவல் என்ற பெருமையைப் பெறுகின்றது.

1856 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘காவலப்பன் கதை’யே ஈழத்தின் முதலாவது நாவல் ஆகும். 1891 இல் திருகோணாமலை இன்னாசித்தம்பி எழுதிய ‘ஊசோன் பாலந்தை’ என்ற கதையும் வெளிவந்தது. அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை இதனைப் பதிப்பித்து வெளியிட்டார். இது ‘ழுசளழn யனெ ஏயடநவெiநெ’ என்ற போத்துக்கேய மொழிக் கதையின் தழுவலாகும். ‘ஊசோன், பாலந்தை’ என்ற இரு போத்துக்கேயச் சகோதர இளவரசர்களின் கதையைக் கூறுவதே இந்நாவலின் பிரதான நோக்கம் எனினும் மேற்சொன்ன இரண்டு நாவல்களும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

சைவ-கிறிஸ்தவ போட்டி நிலைமை தனித்த ஒருபகுதியாக இயங்கிக் கொண்டிருக்க மறுபுறத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சிச் சிந்தனையை உள்வாங்கிய முகமது காசிம் சித்திலெப்பை மரக்காயர் 1885 இல் ‘அஸன்பேயுடைய சரித்திரம்’ என்ற தழுவல் நாவலை எழுதினார். மத்திய கிழக்கையும் இந்தியாவையும் கதைக் களமாகக் கொண்டே இந்நாவல் படைக்கப்;பட்டுள்ளது. அஸன் அரச குடும்பத்தில் பிறந்தவன். ஜகுவா என்பவன் அவனைக் கடத்தி வளர்க்க பெரியவனானதும் ஜகுவாவிடம் இருந்து தப்பி ஓடிய அஸன் ஆங்கில தேசாதிபதியின் ஆதரவுடன் கல்வி கற்று ‘பே’(டீயல) என்ற விருதினைப் பெற்று பாளினாவை மணம் முடித்து வீரனாக விளங்கினான். என்ற செய்தியை இக்கதை தருகின்றது.

1895 இல் தி.த.சரவணமுத்துப் பிள்ளையினால் எழுதப்பட்ட ‘மோகனாங்கி’ நாவல் தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறாகும். இந்நிலையில்தான் ஈழத்தில் தோன்றிய மேற்படி நான்கு நாவல்களிலும் ஈழத்துக் கதைக்களம், மண்வாசனை, இடம்பெறவில்லையாயினும் அவை ஈழத்தவர்களினால் அல்லது ஈழத்தில் எழுதப்பட்டன என்ற நிலையிலேயே ஈழத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றன.

இலங்கையைக் கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட முதலாவது நாவலாக சி.வை.சின்னப்பிள்ளையின் ‘வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம்’(1905) விளங்குகின்றது. இது வீரதீர சாகசங்கள் நிறைந்து சன்மார்க்க போதனையையும் கொண்டதாக விளங்குகின்றது.(38) யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு, திருகோணமலை, எனப் பல பிரதேசங்களினூடாக நாவலின் கதை நகர்கின்றதெனினும் வரலாற்றுப் பண்பில் நின்று விடுபடாத தன்மையுடன் சாதாரண மக்களின் கிராமிய வாழ்வு-பழக்க வழக்கம் போன்றவற்றை அணுக முற்பட்டு சமூக நடப்பியலோடு பொருந்தாத வீரசாகசப் பண்பு வாய்ந்த கதையாகவும் இது அமைந்துள்ளது. ‘இரத்தினவாணி’(1915), ‘இரத்தினசீலம்’(1916) போன்ற இவருடைய ஏனைய நாவல்களும் ஈழத்தைக் களமாகக் கொண்டு அமையவில்லை.(39)

மங்களநாயகம் தம்பையா என்ற பெண்மணி எழுதிய ‘நொறுங்குண்ட இருதயம்’(1914) நாவலே ஈழத்துக் கள அமைப்புடன் பொருந்தக் கூடிய முதலாவது நாவலாக அமைகின்றது. ‘சன்மார்க்க சீவியத்தின் மாட்சிமையை உபதேசத்தால் விளக்குவதிலும், உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக்கதையை எழுதத் துணிந்தேன்’(40) என்று அவர் எழுதிய நூன்முகத்தில் தானே குறிப்பிடுவதிலிருந்து கதை எழுதப்பட்ட நோக்கத்தினை அறிய முடிகின்றது.

ம.வே.திருஞானசம்மந்தபிள்ளை சைவசமயப் பின்னணியில் நின்றுகொண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களை எதிர்த்தவர் என்பதை அவரது ‘காசிநாதன் நேசமலர்’(1924), ‘கோபால நேசரத்தினம்’ ஆகிய நாவல்களில் இருந்து அறிய முடிகின்றது. கிறிஸ்தவ பாடசாலையில் பயிலும் சைவச் சிறுவர்கள் எவ்வாறு மதம் மாற்றப்பட்டனர் என்பதற்கு ‘கோபால நேசரத்தினம்’ சான்றாகின்றது. சிறுவனான கோபாலனை மதம் மாற்ற எண்ணிய குட்டித்தம்பிப் போதகர் தனது மகள் நேசரத்தினத்தை அவனுடன் பழகவிட இருவரும் வளர்ந்து வலுப்பெற்ற காதலராகி கோபாலன் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற மறுக்க அவள் சைவத்துக்கு மாறி திருமணம் செய்கிறாள் என முடிகிறது கதை.(41) சீதனம், மதுப்பழக்கம், சாதி ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் இவருடைய நாவல்களில் அதிகம் காணமுடிகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய சைவ-கிறிஸ்தவ ‘பனிப்போரின்’ பிளைவுகளையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சீதனம், குடிப்பழக்கம் போன்றவற்றினால் வரும் விளைவுகளையும் விதேசிய கலாசாரத்தின் தாக்கத்தையும் கூறுவதாக தமிழில் தோன்றிய ஆரம்ப கால நாவல்கள் அமைந்திருக்க, அவற்றிலிருந்து சற்று மாறுபட்ட போக்கில் சமயக் கருத்துக்களுக்கு முதன்மை தராது சமூகத்தை முதன்மைப் படுத்தியனவாக சாதிப் பிணக்குகள் நிறைந்தனவாக அரசியலும் கலந்து நாவல்கள் படைக்கும் சூழல் ஒன்று பிற்காலத்தில் வந்தது.

எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின் ‘அழகவல்லி’ (1926), இடைக்காடரின் ‘நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ (1925), எச்.செல்லையாவின் ‘காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி’ (1937), எம் செல்வநாயகத்தின் ‘செல்வி சறோஜா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி’ (1938) ஆகிய நாவல்கள் சாதிக்குள் சாதி பார்த்தல், சாதிய ஒடுக்குமுறை போன்ற சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கின.(42)

1930கள் வரையிலான ஈழத்தமிழ் நாவல் இலக்கியப் போக்கில் சமூக நிலைப்பட்ட யதார்த்தப்பண்பு மேலோங்கவில்லை. அற்புதக் கதைகளையும் சமூக அறிவியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டனவாக ஆரம்ப காலத்தில் நாவல்கள் படைக்கப்பட்டிருக்க, முப்பதுகளின் பின்னர் ஓரளவுக்குச் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பனவாக நாவல்கள் தோன்ற முற்பட்டன.

காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகள் முதன்மைப் படுத்தப்பட்டு குடும்பப் பாங்கான பண்புடன் 1950 கள் வரையான நாவல்கள் எழுதப்பட்டிருப்பினும் அவற்றில் ஒருவிதமான மர்ம-துப்பறியும் பண்பு உள்வாங்கப் பட்டிருப்பதனால் அவையும் பக்குவப்படாத எழுத்துக்களாகவே தெரிகின்றன. இராசம்மாள், ஏ.சி.இராசையா, வே.க.நவரத்தினம், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோரின் கதைகள் இதற்கு நல்ல சான்றுகளாகும்.

தேசபக்தன்(1929), தினத்தபால்(1930), வீரகேசரி(1930), ஈழகேசரி(1930), தினகரன்(1932) போன்ற தமிழ்ப் பத்திரிகைகளின் பெருக்கம் காரணமாக அரசியல், சமூக விழிப்புணர்வு நிலை படிப்படியாகத் தோன்ற ஆரம்பித்தது. பத்திரிகைகளில் தொடர்கதைகள் பல எழுதப்பட அதற்கான வாசகர் வட்டமும் பெருகத் தொடங்கியது. மர்மச்சுவை கொண்ட பல நாவல்கள் பத்திரிகைகள் மூலம் தொடராக வெளிவந்தன. இவ்வகையில் ‘நெல்லையா’ தனக்கென ஒரு வாசகர் கூட்டத்தையே உருவாக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.(43)

முப்பதுகளில் சமூக ரீதியில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்வு நிலை படிப்படியாகக் கூடி நாற்பதுகளில் மண்வாசனை, தேசிய உணர்வு என்ற எல்லைகளைத் தாண்டி நவீன இலக்கியச் சிந்தனைத் தளத்தினூடே நகரத் தொடங்கிய போது அவற்றின் தாக்கம் கணிசமான அளவில் நாவல்களிலும் பிரதிபலிக்கத்தொடங்கின. கனக-செந்தில்நாதன், அ.செ.முருகானந்தன், சொக்கன், வ.அ.இராசரத்தினம் எனப் பலரும் இக்கால கட்டத்தில் நாவல் எழுதத் தொடங்கினர். இவர்களுடைய நாவல்களில் தனிமனித உணர்வுகளும் மண்வாசனையும் நகைச்சுவை உணர்வும் மேலோங்கி காணப்பட்டன. தழுவல் நாவல்களும் கணிசமான அளவில் இக்காலகட்டத்தில் தோன்றின. மறுமலர்ச்சி இலக்கியக் குழுவும் இதற்கு உறுதுணையாக இருந்தது.

சுதந்திரத்தின் பின்னர் தமிழ் நாவல் இலக்கியம் புதியதொரு பரிமாணத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரின் தோற்றமும் இதற்கு காரணமாக அமைந்தது. 1956 களில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் தேசிய உணர்வுநிலை, சமூகப் பிரச்சினைகள், பிரதேசப் பண்புகள் கொண்ட நாவல்கள் என உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட ஈழத்து மக்களின் வாழ்வியல்ச் சிக்கல்கள் நாவல்களினூடே முதன்மைப்படுத்தப்பட்டன. இதனால் சமூக நடப்பியல்போடு கூடிய படைப்புக்களாக நாவல்கள் வெளிவரத் தொடங்கின.



5.4.2. 1960 க்குப் பின்னரான ஈழத்து நாவல் இலக்கியச் செல்நெறி

நவீன இலக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்த போது பரந்த அளவில் சாதியத்துக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களும் நடக்கத் தொடங்கின. இதற்கிடையில் முற்போக்குவாதமும் தேசிய முதலாளித்துவமும் சமகாலத்தில் வளர்ச்சியடைய அக்கால நாவல்களும் அவற்றினைப் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததாகியது. இளங்கீரன், டானியல், தெணியான், செ.கணேசலிங்கன், தி.ஞானசேகரன், செங்கைஆழியான், அருள் சுப்பிரமணியம், உட்படப் பலர் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் நின்றுகொண்டு முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் முகமாக நாவல்களைப் படைத்தனர்.

எழுபதுகளின் பின்னர் பிரதேச ரீதியான நாவல்கள் படைக்கப்படத் தொடங்கின. அவ்வப் பிரதேசங்களுக்குரிய வாழ்வியல் அம்சங்கள், பேச்சு வழக்கச் சொற்கள், நாட்டாரியற் கூறுகள் என்பன நாவல்களினூடே பிரதிபலிக்கத் தொடங்கின. கணேசலிங்கனின் பெரும்பாலான நாவல்கள் , டானியலின் நாவல்கள் போன்றன யாழ்ப்பாணத்துக்கே உரிய சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன.

அ.பாலமனோகரனின் ‘நிலக்கிளி’(1976), ‘கனவுகள் கலைந்தபோது’(1977), செங்கை ஆழியானின் ‘காட்டாறு’(1977), ‘மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’(1989) போன்ற நாவல்கள் வன்னிப் பிரதேசத்தையும் , ஜோன்ராசனின் ‘போடியார் மாப்பிள்ளை’(1976), வ.அ.இராசரத்தினத்தின் ‘கிரௌஞ்சப் பறவைகள்’(1973) என்பன கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தி வெளிவந்தன.

சி.வி.வேலுப்பிள்ளையின் ‘இனிப்பாட மாட்டேன்’(1984), ‘வீடற்றவன்’(1981), தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ (1974), பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’ (1968) போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டன. இதேவேளையில் பொலநறுவை, கொழும்பு, தென்மேற்கு, தென்னிலங்கை, சிலாபம் போன்ற பகுதிகளில் இருந்தும் பல நாவல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன.

சொக்கன், டானியல், செ.கணேசலிங்கன், தெணியான், செங்கை ஆழியான், செ.யோகநாதன் போன்றோர் யாழ்ப்பாணத்தின் எரியும் சிக்கலாக விளங்கிய சாதிப் பிரச்சினையை முன்னிறுத்தி நாவல்களினைப் படைத்தனர். சொக்கனின் ‘சீதா’(1974), செங்கை ஆழியானின் ‘பிரளயம்’(1975), செ.யோகநாதனின் ‘காவியத்தின் மறுபக்கம்’(1977) போன்றன தீண்டாமைக்கு எதிரான நாவல்களாக இருப்பினும் இவற்றில் ஒருவகையான நழுவல் போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

செ.கணேசலிங்கன் ‘சடங்கு’(1966), ‘செவ்வானம்’(1967), ‘தரையும் தாரகையும்’(1968), ‘போர்க்கோலம்’(1969), ‘நீண்ட பயணம்’(1994), போன்ற 25 க்கு மேற்பட்ட நாவல்களை எழுதி அவற்றினூடாக சாதிப்போராட்டம், பெண்ணியம், சிறுவர் துஸ்பிரயோகம், நகர்ப்புற நாகரிகத்தின் அதீத மோகமும் கேடும், இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மை போன்ற பல விடயங்களினை வெளிப்படுத்தி தன்னையும் தீவிர இடதுசாரிப் பண்புடைய ஒரு எழுத்தாளராக இனங்காட்டிய வகையில் முக்கியம் பெறுகின்றார்.

1961 இல் வீரகேசரி வார வெளியீட்டில் ‘நெடுந்தூரம்’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த நாவலுடன் டானியலின் பணி தொடங்குகின்றது.(44) ‘பஞ்சமர்’(முதலாம் பாகம் 1972), ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’(1975), ‘பஞ்சமர்’(இரு பாகங்களும் 1982), ‘கோவிந்தன்’(1982), ‘அடிமைகள்’(1984), ‘கானல்’(1986), ‘தண்ணீர்’(1987), ‘பஞ்சகோணங்கள்’(1993) என்பன அவரது பஞ்சமர் வரிசை நாவல்கள் ஆகும்.(45) இவ்வாறாக 25 க்கு மேற்பட்ட நாவல்களினை எழுதி அடிநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் முற்போக்குத் தன்மையுடன் ஜனரஞ்சகமான நடையில் எழுதியமையினால் பெருந்தொகையான வாசகர் வட்டத்தினைத் தன்பால் ஈர்த்து தனக்குரிய இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டார்.

முற்போக்கு அணியினரின் படைப்பு முயற்சி தீவிரம் அடைந்த போது அனைத்துக்கும் சோஸலிச புரட்சியின் மூலமே தீர்வு காணமுடியும் என்று எண்ணினர். இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவிய தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினைகள், சுரண்டல்கள், வீடின்மை, குடியுரிமைச் சிக்கல் போன்றவற்றையும் நாவல்கள் பேசத் தொடங்கின.(46)கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சைகள்’, பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’, சி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் பாடமாட்டேன்’, செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு பல இடர்பாடுகளை முன்னிலைப்படுத்தி எழுந்தன.

1970 இன் பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பெண்கள் பற்றிய விழிப்புணர்விலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் இக்காலப் பகுதியில் தோன்றிய பெரும்பாலான நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், சீதனக் கொடுமைகள், ஒழுக்கப் பிறழ்வுகள், பொருந்தா மணத்தினால் ஏற்படும் விளைவுகள், திருமணம் தடைப்படுதல், முதிர்கன்னி, பாலியல் சுரண்டல்கள் போன்ற சிக்கல்கள் அவற்றின் நிறங்களுடன் அப்படியே தீட்டப்பட்டன.

மேற்படி விளைவுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் பெண்களே என்பதனால் பெண்ணியம் சார்பான எழுத்தாளர்களின் தொகையும் பெருக ஆரம்பித்தது. சந்திரா தியாகராசா, கோகிலா மகேந்திரன், கோகுலம் சுப்பையா, கவிதா, நஜுமா ஏ.பஜுர், அருள் சுப்பிரமணியம், ஜுனைதா ஜெரீப், போன்ற பலரை இவ்வாறு சுட்டிக் காட்டலாம். ஈழத்தில் பெண்கள் தொடர்பான நாவல்கள் என்று எவையும் தனியாக வந்தது போல் தெரியவில்லை.(47) எனினும் ஏதோ ஒரு வகையில் இக்காலப் பகுதியில் வெளிவந்த பெரும்பாலான நாவல்களில் ‘பெண்ணியம்’ சார்பான சிந்தனைகள் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றமை விசேடமானது.

இந்த நிலையில் எண்பதுகளின் பின்னர் தமிழில் நாவலின் பொருட்பரப்பு மேலும் விரிவுபெற்றுச் செல்லத் தொடங்கியது. ஆயுதப் போராட்டமும், இனத்துவ முரண்பாடுகளும் உச்சக் கட்டத்தினை அடைந்த போது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போரின் தாக்கம் ஏற்பட அதன் விளைவாக வசதி படைத்த பலர் புலம் பெயர்ந்தனர். இன்னும் சிலர் உழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர். போரும், nளிநாட்டுப் பணவரவும், புலம் பெயர் வாழ்வும் மணமகன்களுக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்தன. இதனால் ‘சீதனம்’ என்ற உச்சப்பட்ச எதிர்பார்ப்பு மணமகன் வீட்டாரிடம் எழ ‘சீதனக் கொடுமை’ சமூகத்தின் பெரும் பிரச்சினையாக மாறியது. இதன் பிரதிபலிப்பை எண்பதுகளுக்குப் பின் எழுந்த நாவல்களில் அதிகம் காணமுடிகின்றது. செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ நாவல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

போரின் விளைவாகப் பல குடும்பப் பெண்கள் விதவைகள் ஆகினர், இன்னும் பலர் கணவனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடினர், கற்புச் சூறையாடப்பட்ட நிலையில் பலர் பெண்மையை இழந்து நின்றனர். இதனால் இக்காலத்தில் தோன்றிய நாவல்கள் இவற்றையும் பதிவு செய்யத் தவறவில்லை. இந்நிலையில், இக்காலத்தில் எழுந்த கவிதைகள், சிறுகதைகள் போல் நாவல்கள் அவ்வளவு தூரம் போராட்டச் சூழலை உள்வாங்கவில்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது.

ஈழத்தில் தமிழ்ச் சமூக வரலாற்றை அவ்வக் காலத்தில் நின்று படம்பிடித்துக் காட்டுவனவாக ஏராளமான நாவல்கள் காலத்துக்குக் காலம் தோன்றியிருக்கின்றன. பன்முகத் தன்மையான சமூகத்தைச் சித்திரிப்பதற்கான சமுதாயக்களம் ஈழத்தில் பெரியளவில் இருந்தமையினால் தனிமனித துயரங்கள், வருத்தங்கள், வறுமைகள் என்பன பற்றிப் பேச நாவல்கள் பெரிதும் துணை புரிந்தன எனினும் தமிழ் நாட்டில் நாவல் இலக்கியம் வளர்ந்தது போல இலங்கையில் இன்னும் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் நாவல் இலக்கியம் ஆங்கிலத்தில் பெரு விருட்சமான நிலையில் தமிழில் சிறிதளவாவது வேரூன்றி விட்டதா? என்ற வினாவும் விமர்சகர்களிடையே நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி