பிப்ரவரி 27, 2010

மானம்



நகரமயமாதல்

விண்ணுயர்ந்த கட்டிடங்கள்
வீதியோர கடைகளின் பின்னால்
கூனிக்குறுகித் தன்னை
மறைக்கிறது(மறைகிறது)சேரி

மானம்

கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…

முரண்

கூட்டிய குப்பை
ஒருபுறம்
கூட்டாத குப்பை
மறுபுறம்
எதை முதலில்
விலக்குவது?
விளக்குமாறு
கேட்கிறது
விளக்குமாறு…

பிப்ரவரி 17, 2010

சென்னையில் சில நாள்.....

கூவம் ஆறும் அடையாறும்
சென்னையின் சொத்து
செத்த பிணங்கூடப்
பல நாளாகி அப்படி
நாறி நான் கண்டதில்லை

பிச்சைக்காரர் தெருநீளம்
நிறைந்திருப்பர்….

சைக்கோவும் பைத்தியமும்
வழியோரம் படுத்துறங்கி
ஓய்வெடுப்பர்
ஆனாலும் சிங்காரச் சென்னை
அழகானதுதான்.......

மேம்பாலங்கள் மேலே
நம் பயணம் தொடர்கிறது
அதன் கீழே பல குடும்பம்
சீவியம் நடக்கிறது....

குப்பைகளால் நிறைந்த
தெருக்கள்

நடைபாதையெல்லாம்
மூக்கை நீட்டும் கடைகள்

விதிகளை
மீறிய வாகனங்கள்
இவை எல்லாம்
சென்னையின் அடையாளங்கள்

வீதிகள் தோறும்
சேரிகளின் அணிவகுப்பு
தெருவோரம் மலிந்திருக்கும்
பூக்கடைகள்

வாய்திறந்து விரிந்திருக்கும்
கழிவுநீர் கால்வாய்கள்
ஒண்டுக்கும் ரண்டுக்கும்
வீதியெல்லாம் இலவசமாய்
விளம்பரங்கள்

பேருந்தில் நிறைந்த கூட்டம்
பழஞ்சோற்றில் ஈயாக

கட்சித் தலைவர்களை
தூக்கிச் சுமக்கும் மதில்கள்

வீதிகள் எல்லாம்
பிரச்சார முழக்கம்
கட்டவுட்டும் விளம்பரமும்
கண்கொள்ளாக் காட்சி
ஆனாலும் சிங்காரச்
சென்னை அழகானதுதான்

பிப்ரவரி 14, 2010

நானும் நிகேயும் நம் காதலும்


இன்றுடன் எங்கள் காதலுக்கு பத்து வருஷம்
கல்யாணத்துக்கு நான்கு வருஷம்
ஆம் 2000ம் ஆண்டில் நாம் இருவரும் பல்கலைக்கழகத்தில்
சந்தித்து நண்பர்களானோம்.
பின்னர் நான் என் ஊருக்கும் நிகே தன் ஊருக்கும் பல்கலைக்கழகம்
முடிந்து 2004ல் சென்று விட்டோம்
2006ல் இரண்டு வீட்டிலும் கல்யாண பேச்சு எடுத்தபோது இதே பெப்ரவரி 14ல் தான் எங்கள் இருவரின் வீட்டிலும்,
எங்கள் நட்புடன் 6ஆண்டுகளாக கட்டி வளர்க்கப் பட்ட காதலைப் பற்றி சொன்னோம்.
இரு வீட்டு சம்மதத்துடன் 2006 ஜூன் ல் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.


என் மனைவி நிகே வேற யாருமில்லைங்க நம்ம மழைச்சாரல் http://mazhaichsaaral.blogspot.com நிகேதானுங்க.

இப்போ எங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு எண்களின் காதல் - கல்யாணப் பரிசாக இருக்கிறாள்.



பிப்ரவரி 05, 2010

சிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்

அடையாறும் கூவமும் வருநாளில்
அழகாகத் தெரிந்திட்டால்
மடை பாயும் வெள்ளமென
மக்கள் கூட்டம் நிறைந்திடுமே

பூந்தோட்டம் நாட்டிடுவர் - பின்பு
புதுப் பொலிவு பண்ணிடுவர்
காண்போரை வியக்க வைக்க
கண்காட்சி நடத்தி நிற்பர்

மூக்கைப் பிடித்து முன்னர்
வீதியிலே சென்றவர்கள்
நாக்கில் சுவையூற
வேர்க்கடலை கொறித்து நிற்பர்

நாளை வருநாளில் நல்ல
புதுச் சேதி கொண்டு வரும்
வாளை விராலுடனே நதி
நல்லழகு பெற்று விடும்

பார்க்கும் இடமெங்கும் கூவம்
புதுப் பொலிவு பெற்றுவிடில்
நோக்கும் உலகம் இந்தச்
சிங்காரச் சென்னை தனை