நவம்பர் 29, 2009

சொற்சிலம்பம் - நான்கு


இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில்பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும்உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பலசொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.

''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.

(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)


இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்

முகம் மூஞ்சி

வடிவு அழகு

நித்திரை தூ க்கம்

சமிபாடு ஜீரணம்

வயிற்றுக்குத்து வயிற்றுவலி

தலையிடி தலைவலி

நோவு வலி

காய்ச்சல் ஜுரம், காய்ச்சல்

தடிமன் ஜலதேஷம்

சத்தி வாந்திநுளம்பு கொசு

நுளம்புத்திரி கொசுவத்தி

நுளம்பு வலை கொசு வலை

இலையான் ஈ

கொசு ஈ

மட்டத்தேழ் பூரான்

பூரான், தேழ் தேழ்

நட்டுவக்காலி, கொடுக்கான் கருந்தேழ்

மயிர்க்கொட்டி கம்பளிப்பூச்சி


இன்னும் வளரும்.....


நவம்பர் 25, 2009

நானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )

சிறுகச்சிறுகச் சேர்ந்த சொந்தங்களே வணக்கம்.
யாவரும் நலந்தானே!

நான் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கற்பித்து ஆதரவு நல்கி என்னையும் உங்களில் ஒருவனாக வலையுலகில் இணைத்துக் கொண்டமைக்கு மனந்திறந்து நான் கூறும் முதல் வணக்கம் இது.

“யாவரும் நலம்” சுசி யின் அழைப்பினை ஏற்று, நான் வலையமைப்புக்கு வந்த விதத்தினை எழுத நினைத்தபோதுதான் ஞாபகம் வந்தது இது எனது 150 வது இடுகை என்பது. அதனால் இந்த இடுகையிலேயே எனது வலையுலகப் பிரவேசம் பற்றிச் சொல்லிவிடுவது சிறப்பென நினைத்தேன். அதனால் விளைந்ததே இந்த இடுகையாகும்.

நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992இல் நான் 9வது படிக்கும் போதுதான் முதன்முதலில் கவிதை எழுதியதாக ஞாபகம். அதன்பின் பல கவிதைகளை எழுதினேன். இருந்தாலும் 1999இல் “சரிநிகர்” சஞ்சிகையில் வந்த எனது முதல்ச் சிறுகதைதான் எனது (அப்போது வேறு பெயரில் எழுதினேன்) கலையுலகப் பயணத்துக்கான அத்திவாரமாக அமைந்தது.

அதன்பின்னர் “இடி” , “தமிழ்கேசரி” , “வீரகேசரி” , “சுடரொளி” , “தினக்குரல்” , “வெளிச்சம்” முதலான பல சஞ்சிகைகளிலும் இன்னும் பல நினைவு மலர்கள், சிறப்பு வெளியீடுகளிலும் பல கவிதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால்… எட்டாக்கனியாக இருந்த இணையம் சமாதான (2003) காலத்தின் பின்னர்தான் எங்களை வந்தடைந்தது.

அதன் பின்னர்கூட எனக்கு இணையம் பற்றிய சிந்தனை வரவில்லை. எழுதவேண்டும் என்றும் தோன்றவில்லை. இதற்கிடையில் நான் 14 வருடங்களாக எழுதிச் சேர்த்து ஆவணப்படுத்தி வைத்திருந்த அனைத்து ஆக்கங்களையும் தூரதிஸ்டவசமாக 2006ஆம் ஆண்டு இழக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

அதன்பின்னர்தான் இணையத்தின் முக்கியத்தை உணர்ந்த நான் முதலில் கீற்று.கொம், கலகம்.கொம், யாழ்.கொம் போன்றவற்றில் எழுதினேன். ஓரளவுக்கு எந்தத் தமிழ் எழுத்துருவாயினும் என்னால் எழுத முடிந்தமையால் எனக்கு வலையில் எழுதுவது அவ்வளவு கடினமானதாகத் தெரியவில்லை. அதனால் நிறைய எழுதினேன். ஆனால் என் தூரதிஸ்டம் மீண்டும் என்னைத் துரத்தியது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக கலகம்.கொம் நிறுத்தப்பட்டபோது மீண்டும் எனது இரண்டுவருடப் படைப்புகளில் பலவற்றை நான் இழந்தேன்.

இதன் பின்னர்தான் எனக்கென நான் எழுதிய அனைத்ததையும் இனியாவது சிதையாமல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானபோதுதான் “தியாவின் பேனா பேசுகிறது” என்ற வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஆரம்பம் முதலே பலர் என்னைத் தட்டிக்கொடுத்து ஆதரவு நல்கி வருகின்றீர்கள். இன்றுவரை எல்லோரும் சொந்தக்காரர்கள் போல நல்லதையும் கெட்டதையும் சொல்லி வருகின்றீர்கள். நல்ல நண்பர்களாகவும் இருந்து வருகின்றீர்கள்.

என்னினிய உறவுகளே!

இதுவரைநாளும் நான் உங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது கருத்துக் கூறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். அத்துடன் எனது அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்கப்படுத்திவரும் உங்கள் அனைவரையும் இந்தநாளில் நான் நன்றியுடன் நினைவு கூருகிறேன். இன்றுபோல் இனிவரும் நாட்களிலும் உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களின் மூலம் என்னைத் தூக்கி நிறுத்துங்கள். நாளும் நல்ல நண்பர்களாக இருப்போம்.

நான் இத் தொடரை எழுதும்படி யாரையும் அழைக்கப்போவதில்லை. உறவுகளே நீங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்களின் வலைபுகு படலம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

நிலைபெற்ற நம் வாழ்வினிலே என்றும்
தலைபெற்று வந்தவர்கள் நீங்கள்
கலையுலகில் என் ஆக்கங்களைக் கண்டு – உங்கள்
வலைதனிலே வாழ்த்தெழுதி மகிழ்வித்தீர்

கல்வியிலே பல திறத்திலுள்ளோர் கூடி
சொல் பொறுக்காச் சோர்விலராய் நின்று
பல் கருத்துக் கூறி உங்கள் - மனந்திறந்து
நல்லாசிகள் தந்தமைக்கு நன்றி.


நவம்பர் 24, 2009

இருப்புமொழி புரியாத

புதிய பட்டிணத்தில்

வழிதவறி மாட்டிக்கொண்ட

இருப்பின் வேதனை

முகமிழந்து வாழும்

மனிதரிடையே

என்னை நான் தொலைத்தபடி

மீண்டும் மீண்டும் தேடுகிறேன்


நவம்பர் 23, 2009

இருட்டிலிருந்து...இருளின் மத்தியில்

இரைச்சல் மிக்க வாழ்வு...

முட்கள் நிறைந்த

நெடுவழிப் பயணம்...

சிதளூறும் ஊமைக் காயங்கள்...


உள் வலியெடுக்கும்

நினைவழியாப் பொழுதுகள்...

மனதுள் பூட்டிய மௌனவலி

உடலினுள் பரவும்

கொடுந்தீயாகிச் சுடுகிறது...


மாட்சிமை மிக்க

என் உறவுகளே

என் சிதைக்குத் தீ மூட்டியாவது

நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....


நவம்பர் 22, 2009

ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )

இடப்பெயர்வு அனுபவங்களும் போர்க்காலச் சித்திரிப்பும்
1995ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வானது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக அப்போதைய காலத்தில் இருந்த ‘பூட்றஸ் பூட்றஸ் காலி’ கூடக் கண்டிக்குமளவிற்கு மிகவும் கொடுமையானதாக அமைந்திருந்தது. 1996ஆம் ஆண்டு ஏப்றல் 18இல் தென்மாராட்சி மீது மேற்கொள்ளப்பட்ட ‘சூரியக்கதிர்-2’ தாக்குதல் மூலம் , அதன் விளைவாக , இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்ற மக்களின் இடப்பெயர்வு அனுபவங்களினையும் புதிய பண்பாட்டுச் சூழலில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலையினையும், வாழ்வில் ஏற்பட்ட இடர்பாடுகளினையும் அவற்றினைக்கூடச் சுகமென எண்ணி மனநிறைவு காணும் தன்மையினையும் நின்மதியாக வன்னி மண்ணில் கிடைத்த சுகவாழ்வு அனுபவங்களினையும் , சுதந்திர உணர்வுச் சித்திரிப்பினையும் , இராணுவச் சூழலில் நின்று விடுபடத் துடிக்கும் மக்களின் அவல நிலையினையும் இக்காலக்; கதைகள் பதிவு செய்தன.
அவலங்களுக்கும் அழிபாடுகளுக்கும் மத்தியிலே சிக்குண்டு சித்தம் கலங்கித் தடுமாறிப்போன மக்களின் அவலம் நிறைந்த , அகதி வாழ்வினை அவர்களின் கண்ணீர்க் கதையினை, போர்க்களத்திலே இராணுவத்திடம் சிக்குண்ட மக்களின் அவலம் நிறைந்த வாழ்வின் மத்தியில் இராணுவத்திடம் கஞ்சிக்குக்கூட வரிசையில் நிற்கும் அகதி வாழ்வின் அந்தர நிலையினைப் பல கதைகள் மிகவும் தத்துரூபமாக வடித்துக் காட்டின.
இடப்பெயர்வினால் பல இன்னல்களினை அனுபவித்து வந்த மக்களில் ஒரு பகுதியினர் சமகாலத்தில் இராணுவத்திடம் சிக்கி அன்றாட வாழ்வில் சொல்ல முடியாத பல இன்னல்களினையும் சொல்ல முடியாத பல துன்பங்களினையும் அனுபவித்து விரக்தியின் விளிம்புக்கே சென்று நியமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அல்லது நியமங்கள் அறுந்த நிலையில் வாழ்வில் வெறுப்புக் கொண்டு ‘அட இவ்வளவுதானா?’ என வாழ்க்கையைப் பார்த்தே கேட்பது போலவும் சில கதைகள் அமைந்துள்ளமையை நோக்க முடிகின்றது. அன்றாட வாழ்வின் அவலநிலை, கைது, சித்திரவதை, காணாமல் போதல் , கொலைகள் போன்ற வாழ்க்கைச் சித்திரங்களையும் காணாமல் போனவர்களின் பெற்றோர் படும் அவல நிலையையும் பல எழுத்தாளர்கள் தாங்கள் அனுபவித்து எழுதினர். இதைவிட வேறுசிலர்: இராணுவத்துக்கு ஆதரவளித்து அவர்களின் எச்சில் காசுக்காக குடை பிடிக்கும் அரச அதிகாரிகளின் மறுபக்கத்தையும் இடையிடையே அழகான முறையில் சித்திரித்துக் காட்டியுள்ளனர். போராட்டஉணர்வின் வெளிப்பாடும் விளைவும்
போராட்ட உணர்வுகள் கவிதைகளில் வெளிப்பட்ட அளவுக்கு சிறுகதைகளில் வெளிப்படவில்லை. எனினும் அதன் விளைவுகள் ஓரளவுக்காவது யதார்த்தப் பாங்குடன் வெளிப்படுத்தப் பட்டன. 1995இன் பின்னர் ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் வடிவிலும் கவிதைகள் வெளி வந்தன. இவற்றை ‘அவசரப்படைப்புகள’; எனவும,; ‘வெறும் பிரசாரத் தன்மையும் சொற் செறிவும் மிக்க வரிகள’; எனவும், விமர்சிக்கப்பட்ட நிலையில் மக்களின் குரலாகச் சிறுகதைகளினை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.
போராட்ட சூழலில் படைப்பாளிகள் வாழ்ந்தமையினால் போராட்ட உணர்வும், தேசியப்பற்றும், அதன் விளைவுகளும் மேலோங்குவது தவிர்க்க முடியாதுபோக இக்காலத்து எழுத்தாளர்களுடைய படைப்புக்களிலும் இத்தகைய பார்வை இழையோடுவது யதார்த்தமானதுதானே. எனவே “இலக்கியம் நிகழ்கால உலகின் கண்ணாடி” என்ற கூற்றுக்கு அமைய இக்காலத்தில் தோன்றிய அனேகமான சிறுகதைகளில் மேற்படி பண்புகள் இயல்பாகவே அமைந்து விளங்கக் காணலாம்.
1996இல் வன்னிக்கு இடம் பெயர்ந்த மக்கள் கிளாலி கடந்த போது எங்கு போவது? எப்படி இருப்பது? எனப் புரியாது தவித்து, மாறிமாறி அலைந்து ஓர் நிலையான இடத்தில் தரித்த போதிலும் உணவு, வருமானம் இன்றிப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தமையினால் மாறிமாறிப் பல துன்பங்களினை அனுபவித்தனர்.
வன்னியில் யாழ்ப்பாண மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பல இளைஞர் யுவதிகள் இயக்கத்துக்கு உந்தித் தள்ளப்பட்டனர். இதனால் அவர்களின் பெற்றோர், உறவுகள் மேலும் பல துன்பங்களினை அனுபவிக்க வேண்டி இருந்தது. தனது பிள்ளையின் சாவுச்செய்தி எந்த வேளையில் வருமோ? என ஏங்கியவாறு பெற்றோர் இருக்கும் நிலையும், அலைச்சல் மிக்க வாழ்வின் சித்திரிப்பும் மிகவும் தத்துரூபமாகப் பல கதைகளில் வடிக்கப்பட்டுள்ளன. போராளிகளையும் இராணுவத்தினரையும் நேரடியாகச் சுட்டாமல் குறியீடு மூலம் உருவகித்து கதையை நகர்த்திச் செல்லும் பண்பை இக்காலத்தில் எழுந்த பல கதைகளில் அவதானிக்க முடிகின்றது. இறுக்கமான சூழலில் இருந்துகொண்டு கதைகள் எழுதப்பட்டமையினால் இத்தகைய உத்தி முறைமையை எழுத்தாளர்கள் கடைப்பிடித்திருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்கலாம்.
போராட்டத்தில் ஈடுபடும் மற்றும், ஈடுபட்டு மரணித்த இளைஞர்கள் ஒருபுறம் இருக்க அவர்களின் பெற்றோர் படும் அவலம்மிக்க வாழ்வையும் கதைகளினுடாக எடுத்துக் காட்டினர். மகனைப் போர்க்களத்தில் பலியிட்ட அன்னையின் மனக் குமுறலையும் பிறரின் முகத்தில் தன் மகனின் ஒளிவதனம் தேடும் அவல நிலையினையும் காட்டி, மகனைப் பற்றிய நினைவில் வாழும் தாய் ஒருத்தி மகனைப் பற்றிய நினைவினால் உருவாகின்ற பிரமை காரணமாக அவனது கல்லறைக்கே அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் போதும், மாவீரனான தன் மகனின் கல்லறைக்கு மலர் தூவும் போதும் மகன் தன்னுடன் ‘அசரீரி’யில் உரையாடுவதாக எண்ணி மனம் நெக்குருகும் பிரிவாற்றாத நிலையினையும் ஒருசில சிறுகதையில் வெளிப்படுத்துகின்றனர்.