இடுகைகள்

குறுங்கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்

படம்
சுதன் லண்டனில் இருந்து வந்து முன்று நாளாகியிருந்தது. ஏழு வருட லண்டன் வாழ்க்கை அவனை எவ்வளவோ மாற்றியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் தனது நண்பர்களைச் சந்தித்த சந்தோஷத்தில் அவர்களுடன் பீச்சு பார்க் என்று எல்லா இடமும் சுற்றினான். வகைவகையான வெளிநாட்டு உணவுகள், குளிர்பானங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினான். வீடு திரும்பும்போது மணி இரவு பத்தைத் தாண்டியிருந்தது. அவனின் வரவுக்காக தாய் விழித்திருந்தாள். “அம்மா பசிக்குது” “………………..” “அம்மா பசிக்குது சோறு இருக்கா…? ” “இரப்பு வாறன்” என்றபடி தாய் அடுப்படிக்கு ஓடினாள். இருந்த சோறு கறி எல்லாம் போட்டு குழைத்து திரணையாக்கி ஒரு உருண்டையாக கையில் கொடுத்தாள் தாய். “ ஆ… என்ன அருமை இப்பிடி ஒரு சாப்பாடு சாப்பிட்டு ஏழு வருஷமாச்சு… இப்பதான் சாப்பிட்டமாதிரி திருப்தியாக இருக்கு…” என்றான். அவனை லண்டன் வாழ்க்கை எவ்வளவோ மாற்றியிருந்தாலும் ஒரு தாயாக அவனிடம் எந்த மாற்றத்தையும் காணாது வியந்து நின்றாள்.

மனிதாபிமானம்

படம்
பேருந்தில் அந்த ஊனமுற்றவர் மிகவும் சிரமப்பட்டு ஏறி ஒவ்வொருவராக மன்றாடிப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. சிலர் பார்த்தும் பாராது போல் இருந்தனர். வேறு சிலர் முகத்தை வெளியே திருப்பி கண்ணாடி யன்னலூடாக வெளியே பார்த்து விறைத்திருந்தனர் இன்னும் பலர் காதில் வயர் மாட்டி கைப்பேசியில் பாடல் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருந்தனர். அந்த ஊனமுற்ற முதியவரோ ஏமாற்றத்துடன் எல்லோரையும் பார்த்தார். யாரும் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஈற்றில் வெறுமையான தன் பிச்சைப் பாத்திரத்தை ஒருதடவை பார்த்துப் பெருமூச்சு விட்டபடி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு... அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.........

பள்ளிக்கூடம்

படம்
“குட்மோர்னிங் சேர்… குட்மோர்னிங் ரீச்சர்…” என்றபடி பாடசாலை வளவினுள் பவ்யமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ரம்யா. சிறு வயது முதலே பள்ளிக்கூடம் போவது என்றால் ஒவ்வொருநாளும் பெரிய போராட்டம்தான். ஆனால் இன்று… வழமைக்கு மாறாக தானாக எழுந்து குளித்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு மடிப்புக் குலையாத உடையணிந்து … பார்க்கவே பெரிய அழகியாட்டம்…முதல் தடவையாக பள்ளிக்கூட ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடவுளை வேண்டிக்கொண்டு நிமிர “குட்மோர்னிங் ரீச்சர்…” என்றாள் ஒரு சிறுமி பதிலுக்கு “குட்மோர்னிங்” என்றபடி சிறு புன்முறுவலித்தாள் ரம்யா.

காணாமல் போனவன்

படம்
“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ” இது தினசரி புவனாவின் மகன் தினேஷ் கேட்கும் கேள்வி. “இந்தக் காலண்டர் முடிய அப்பா வருவாரடா” கண் கலங்க பதில் கூறுவாள் புவனா. “எப்ப அம்மா இந்தக் காலண்டர் முடியும்? ” ஒண்டொண்டாய் ஒவ்வரு நாளும் கிழிக்க எப்பாவது ஒருநாள் முடியும்” நாளுக்கு நாள் காலண்டர் பக்கங்கள் குறைந்து கொண்டு போனது… இப்போது பழைய இடத்தில் புதிய காலண்டர் “அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ” தினேஷின் அதே கேள்வி… “இந்தக் காலண்டர் முடிய வருவாரடா……..” கண் கலங்கினாள் புவனா.