ஆகஸ்ட் 30, 2009

இருள் - மெழுகுவர்த்தியிடம்


உன்னைக் கரைத்து
உன்
உடலை உருக்கி
என்னை
ஓளிரவைக்க
அழுகிறாயே
நீ என்ன
என்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?

ஆகஸ்ட் 24, 2009

கனவுகள் வாழ்கின்றன.

வாழ்க்கை - 1

தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது.
தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன்.
இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது.

நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன.
மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம்.

மூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது.
எந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன்.

இப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால் நரம்புகள் அனைத்திலும் மின்சார வேகம் பாய்ந்ததாய்ப் புத்துணர்வு பெற்று மீண்டுகொண்டிருக்கிறேன்.

செம்மண் கிரவல் வீதியில் ஆங்காங்கே புற்கள் முளைவிட்டிருந்தன. சேறும் சகதியுமாக பள்ளங்கள் நிரம்பியிருந்தன.
பல பழைய மனிதர்களை ஊரில் காணமுடியவில்லை. ஒருவேளை முதுமையின் சீற்றத்தில் அவர்கள் மாண்டிருக்கலாமோ என்னவோ…
ஊரில் புதிதாக யாரும் வேலிகள் போட்டதற்கான சுவடுகள் தென்படவில்லை. எல்லாரும் சகிப்புத்தன்மை பெற்றவர்களாகி
புதுப்பிறப்பெடுத்திருப்பதா��
�் என்னால் உணரமுடிந்தது

வாழ்க்கை - 2

எனக்குச் சின்ன வயதிலிருந்து புத்தகங்கள் என்றால் உயிர். ஒரு நல்ல புத்தகம் பத்து நண்பர்களுக்கு நிகரானது என்ற சீரிய கொள்கையுடையவன் நான்.
சிறு வயதிலிருந்து சேர்த்து வைத்த புத்தகங்கள் அனைத்தையும் பார்க்கும் ஆவலுடன் கதவை மெதுவாகத் தள்ளித் திறந்தேன்…

சிலந்திவலைகள் முகட்டுக்கும் - யன்னலுக்கும்: கதவுக்கும் - அலுமாரிக்கும் இடையில் கோலங்கள் போட்டிருந்தன. கூரைத் தகடுகளினூடாக
உள்விழும் சூரியஒளி அமாவாசை இருளின் நட்சத்திரப் புள்ளிகள் போல் நிலத்தில் விழுந்து பிரகாசித்தன.

கரப்பான்இ தட்டான் பூச்சிகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இரண்டொரு சுண்டெலிகள் தாத்தாவின் பாழடைந்துபோன
படத்தின் மேல் பாய்ந்தோடி விளையாடுவதைக் கண்டேன்.

வீட்டுக்குள் காலடியெடுத்து வைப்பதற்கே பயமாக இருந்தது. சிறுவயதில் ஒளித்துப்பிடித்து விளையாடிய எங்கள் வீடு…
இன்று மரண பயத்தைத் தந்தது எனக்கு.

இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ என்ற பீதியுடன் உள்ளே மெதுவாக காலடியெடுத்து வைக்கிறேன். என் கால்வழியே ஏறி தலைவரை சென்று
உச்சிமோந்து தடவிப்பார்த்தது ஒரு கரப்பான்பூச்சி.

சாமிப்படத் தட்டில் பல்லிகளும்இ ஓரிரு பூரன்களும் உலாவரக் கண்டேன்.

“சிலவேளை பாம்புகள் இருந்தால்க்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை”

என்ற எச்சரிக்கையுடன் நிதானமாகச் செயற்படத்தொடங்கினேன்.

வாழ்க்கை - 3

இப்போது விழித்திருக்கும்போதுகூட என்னால் கனவு காண முடிகின்றது. கனவுகள் அற்புதமானவை… அழகானவை…
என்னால் காணப்பட்ட கனவுகளை நான் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்தரங்கமானவை. நிராசைகள்இ வலிகள்இ வேதனைகள்,
நிறைவேறாத ஆசைகள் என்பன கனவுகளாக உருமாற்றம் பெறுகின்றன.

அண்மைக்காலமாக நிறைவேறாத ஆசைகள் பலவற்றை என் ஆழ்மனதில் பூட்டிவைத்துவிட்டு தனிமையில் மௌனியாகி இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.
என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தூக்கத்தில்… அரைத்தூக்கத்தில்… விழித்திருக்கும்போதுகூட கனவுகள் வந்துதொலைக்கின்றன.
அண்மைய நாட்களில் அடிக்கடி என் கனவில் என் ஊர்… என் வீடு… இன்னும் எனக்கேயுரிய எல்லாம் வருகின்றன.

இப்போது நான் என் சொந்த ஊரில்… என் வீட்டில் இருக்கிறேன். கரப்பான்பூச்சிகள், தட்டான்கள், சிலந்திகள், பல்லிகள், தேழ்கள்,பூரான்கள் , கொடுக்கான்கள்… இன்னும் பாம்புகள்… எதுவாயினும் என் இருப்பிடத்தில் குடியிருக்கக்கூடும்.

“கடவுளே இந்தக் கனவு முடிவதற்குள் நான் அவைகளை விரட்டியாக வேண்டும். அதன்பின் சிறிது நேரம் என்
வீட்டுத் திண்ணையில் படுத்து ஒரு நல்ல கனவு காணவேண்டும்”.

காதலின் மொழி புரிந்தபோது

என் செல்ல சிங்காரியே
உன் பின்னால்
அலைந்து திரிந்த
அந்தக் காலத்து
அன்பான நினைவுகள்
உள்மனதில் நின்று
ஊமைக் காயமாய்
வலிக்கிறது
என் கண்ணுக்கும்
கவி பாடத்
தெரியும் என்ற
வித்தையை
சொல்லித் தந்தவளே
மொழிகள் அற்ற
உலகில் நாங்கள்
தனித்தனி
தீவுகளாக
உலா வந்தபோது
பேசமுடியாது தவித்த
காதலின் மொழியை
இப்போது
உன்னோடு
பகிர்ந்து கொள்வதில்
எத்தனை இன்பமடி
எனக்கு

காதல் கடிதம்

அன்பே
உனக்கொரு
காதல் கடிதம்
எழுத எண்ணி
மடித்துப் போட்ட
வெற்றுத்தாளை
விரித்து வைத்தும்
எழுத முடியவில்லை
உனக்கொரு கடிதம்
என்னவளே
விரித்து வைத்த
வெற்றுத் தாளில்
உன் முகவிம்பம்
விழுந்து தொலைக்கிறதடி
பேனாமுனை குத்தி
காயப்படுத்த
நான்
விரும்பவில்லை.

ஆகஸ்ட் 18, 2009

மூன்று கவிதைகள்

இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள்.

சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர்
பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின்
தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே
"
(கலித்தொகை - முல்லை - 13)

நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின்
சாயலைக் காணமுடிகின்றது.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவினில்
அலையோர வெண்மணலில்
நாம் பதித்த கால்த்தடங்கள்
இல்லாத இடங்களில்லை.
இற்றைத் திங்கள்
அதே வெண்மணலில்
என் கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை……
…………………………
………………………….
"

எனத் தொடர்கின்ற விஜயலட்சுமி சேகர் எழுதிய கவிதையில் சங்க காலத்து தொடர்ச்சியாக இன்றும்
கவிதைகள் படைப்பதைக் காணமுடிகின்றது. காட்சிகள் மாறவில்லை. களங்கள் மாறியுள்ளன.
பொருள் மாறவில்லை. நடை மாறியுள்ளது. வடிவம் மாறவில்லை. வாழ்க்கை மாறவில்லை.
அன்றும் இழந்தோம் இன்றும் இழந்தோம். கையறுநிலையே வாழ்க்கையாகி கவிப்பொருளாகி காலங்காலமாக
தொடர்கின்றது.

இதோ இதே பொருளில் அமைந்த, அண்மையில் மறைந்த படிமக் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின்(சு.வி) ஒரு கவிதை.

"பறம்புமலை
பாரி மறைந்து
பருதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வெண்றெறி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றிலே
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினு}டே
பாரிமகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
தானும் தளர்நடை நடந்தது நிலவும்
தள்ளாத வயதின் கபிலர் துணைபோல

நடந்து, இளைத்து, தேய்ந்து
நுரைவிழுந்து போனது
வெண்ணிலவம்தான்
கபிலரும்தான்
பாரிமகளிரும்தான்
பறம்புமலை வாழ்வும்தான்…

பாவம்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
பறம்பு மலைக்குன்றும்,
வென்றெரி முரசும்
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
ஏதிரொலிக்கின்றனவே
"

என்று முடிகின்றது சு.வி யின் கவிதை. சு.வி ஒரு யதார்த்தக் கவிஞன், படிமக் கவிஞன் என்ற
எல்லைகளைக் கடந்து தன்னை ஒரு தொன்மக் கவிஞனாகவும் நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு
இக் கவிதை பேருதவியாக இருந்திருக்கிறது

ஆகஸ்ட் 10, 2009

இது கதையல்ல

சொந்த மண்ணின்
பெருமைகளை
சுவையுடனே சொல்ல
என் நா
எப்போதும் தடுத்ததில்லை

கிட்டிப் புள்ளடித்து
கிளித்தட்டு மறித்து
எட்டியெட்டி நின்று
கெந்தித்தொட்டு விளையாடி
எம்
செம்மண் பூமியிலே
பட்டகதை சொல்லிடவா?

கன்னியம்மன் கோயிலிலே
காரிருள் பூசைவேளையிலே
எம்
சுட்டிப் பருவமதில்
கள்ளன் பொலிஸ்
விளையாடி
விழுந்துடைபட்ட கதை
சொல்லிடவா?

அகதியாகி
அல்லல் பட்டு
அலைந்த போது
அரை றாத்தல் பாணுக்கு
அஞ்சு மணிநேரம்
வரிசை கட்டி நின்ற
சோகக்கதை சொல்லிடவா?

புழுத்த பயற்றையும்
உழுத்த உழுந்தையும்
சோற்றுக் குதவாத
அரிசியையும்
அகதிக்கென்று தந்திடவே
அதை
கை கட்டி நின்று
வாங்கியுண்ட
கதை சொல்லிடவா?

செம்மணி தாண்டி வந்து
கிளாலிக் கரையினிலே
மழை நீரை
குடைபிடித்து
மடிச்சீலை
அதில் நனைத்து
அடிநாக்கில்
பிழிந்து விட்டு
தாகம் தணித்த அந்த
தவிப்புக் கதை
சொல்லவா?

வண்ணத்துப் பூச்சிகள்

வண்ணத்துப் பூச்சிகள்
அழகானவை
பள்ளிப் பருவமதில்
துள்ளித் திரிகையிலே
அதன் சிறகினை ரசித்து
சிறு
நூலினில் முடித்து
பெரு
வானிலே விட்டு
விளையாடியதாய்
ஞாபகம்...

முற்றிய மரக்கிளை
வற்றிய குளக்கரை
மூலை முடுக்கெல்லாம்
வண்ணத்துப் பூச்சிகள்

சித்திரை மாத
பெரு வெயில்
கடந்து
கதிர்காம யாத்திரையின்
பாதியிலே
மூச்சிரைத்துயிர் விட்டதாக
நினைவு... ஆனாலும்
வண்ணத்துப் பூச்சிகள்
அழகானவைதான்...

விடியலின் ராகம்

நெற்கதிர்கள்
குனிந்து நின்று
நிலம் பார்க்கும்
வௌ்ளெலிகள் புற்றெடுத்து
விளையாடும்
பன்றியும் அகளானும்
படையுடனே நடை பயிலும்

நிறை குளம் பெருக்கெடுத்து
அருவி பாயும்
பாலியாறும் பறங்கியாறும்
கைகோர்க்கும்
ஊர் கூடியிருந்து உறவுடனே
உண்டு மகிழ்ந்த
எங்கள் அன்னை மடி
முறுவலிக்கும்

வற்றாப்பளை ஆச்சியும்
பன்றித் தலைச்சியாளும்
பங்குனியில்
பொங்கலிடும்
மாமாங்கேஸ்வரமும்
மாவிட்டபுரமும்
மறுபடியும் குதுகலிக்கும்
கன்னியாயை
காங்கேசன்துறை
கரம் பிடிக்கும்
கேதீச்சரமும்
கோணேஸ்வரமும்
கொடியேறும்

வல்லை வெளியும்
முல்லை மண்ணும்
சங்கமிக்கும்
மீன்பாடும் தேனாடும்
திருமலை நகரதுவும்
வன்னியுடன்
கைகோர்க்கும்
குருவிகள் மீண்டும்
இசைமழை பொழிந்து
குதுகலிக்கும்
சேவல்கள் வாழ்த்த
விடியலின் ராகம்
எதிரொலிக்கும்.

சித்திரைத் தமிழ் மகள்

சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...
மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்

நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...

எப்போதும் போலவே
அந்த நினைவுகள்
வந்தெம் மனத்திரை
ஊசலாடுகின்றன...
முகமில்லா உருவங்களுக்கும்
நிசப்தமான வார்த்தைகளுக்கும்
உரிமை கொண்டாடியபடி
நீண்டு கொண்டிருக்கிறது
எம் இரவுகள்...

சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
மருதடி சேர்ந்து
மகிழ்ந்திருந்த அந்தக்காலம்
மலையேறி விட்டது...

அப்பு வன்னியிலே
ஆச்சி வல்லையிலே
தம்பி லண்டனிலே
தவமிருந்து பெற்ற தனையன்
சூரிச்சிலே...
கொள்ளிக் குடமெடுக்க
ஊரிலே யாருமில்லை

இந்த லட்சணத்தில்
வந்த வரிசத்தை
ஆர் நினைப்பார்
இந்த வேளையிலே...
ஆனாலும் நித்திரை விட்டு
விரைவாக எழுந்திடுவோம்
அன்றேல்...
நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...
சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...

ஊழிக்கூத்து

பட்டிப் பசு
முலை சுரந்து

பால் சொரியும்
தொட்டியடி

தண்ணீரினால்
நிலம் நனைக்கும்
முற்றத்து பலாவினிலே
குயிலினங்கள் கீதமிடும்
குலையுடனே நுங்கிறக்கி
இளநீரால் தாகம் போக்கி
முற்றத்து நிலவினிலே
கூடி மகிழ்ந்திருந்தோம்…
மல்வத்து மாகாளி
உக்கிரங் கொண்டு
ஊழிக்கூத்து
ஆடியவேளையில்
அனல் பறந்தது…
என் முற்றத்து பலாமரம்
வேலியோர கிளுவை
கன்றுடன் பட்டிப்பசு
எல்லாமே மாண்டுபோயின
கூடவே என் வசந்தமும்…

மௌனப்பூதங்கள்

வெறிச்சோடிய வீதி
இதயத்தின் ஓரத்தில்
ஒருவித படபடப்பு…
சலனமற்ற வானம்
பல்லை இழிக்கும்
கூரிய முட்கள்;…
பற்களை தீட்டிய
மௌனப்பூதங்கள்
எல்லாம் ஒன்று சேமி
வரைவாக சேர்ந்து
ஓடஓட விரட்டின…
கலங்கிய மூளையினுள்
மீன்கள் நீச்சலடித்தன…

பல்லியாய் மனிதர்கள்…

தடங்கள் பதிகின்றன
நடந்த கால்கள்
வலிப்பெடுத்தன…
சொந்த வீடு
சாய்ந்து படுத்த திண்ணை
ஓலைக் குடிசைகள்
எதுவுமே இப்போது இல்லை…

மரத்தடியில்………………
மழை இன்றி
வரண்டு கிடந்தன மரங்கள்
இலைகளைக் காணோம்
நிழலுக்கும் பஞ்சம்…

சுவரில் ஒட்டிய பல்லியாய்
மனிதர்கள்…
மடித்துப் போடப்பட்ட
காகிதத் தாள்கள்
காற்றில் பறந்தன…

நான் மட்டும் நீயின்றி...

வெம்பி புழுங்கி கழியும் இரவை
அமாவாசை அள்ளித் தின்று
மூன்று நாட்கள்
ஆகியிருந்தது

மூன்றாம் பிறை பார்த்து
முந்தானையில் முகம் புதைத்து
கண்கள் குளமாகி
சிவந்து போயின

நேற்றும் இன்றும்
நினைவுடனே..

என் கணவன்
காணாமல் போய்
இன்றுடன்
மூன்று நாட்கள்…
யாருமில்லா அந்தரத்தில்
நான் மட்டும்
நீயின்றி
கண்ணீரும் தனிமையுமாக…

பேய் மழை…

அடை மழைப் பொழிவு
விண்ணதிரும் இரைச்சல்
நாய்களின் குரைப்பொலி
வேலியோரம் மழையில்
நனைகிறது வெள்ளாடு
இருளைக் கிழித்து
இரு கூறாக்கி
வேலி போட்டது மின்னல்
இடியின் பேரோசை
சன்னமாய் காதினில்…

விடிவின்றி நீண்டு கிடந்தது
பகலும் இரவாக..

கிழக்கின் திசையை
அறிய முடியாமல்
தோற்றுப் போனது மனசு…

கோடை வெயிலின்
வெப்பம் தணிய
கொட்டித் தீர்த்தது
பேய் மழை…

வெட்டவெளிகள்
நீரில் மூழ்கின
பற்றைக் காடுகள்
பதுங்கிக் கொண்டன
சதுப்பு நிலத்தில்
சப்பாத்துக் கால்கள்
கோலம் போட்டன…

முடியும் இடம்தேடி

கன்று போட்ட மாடு
துவாலையடித்தது
கோழி கனகூழை
கிண்டியபடி...
முகமிழந்தும் மனிதர்களாக…
ஊசி முள்ளாய் குத்தியது
இதயத்தில் பெருவலி
கண்களில் அந்தி
வானச் சிவப்பு
உடல்களைத் தூக்கி நிறுத்தி
தாங்கிப் பிடித்த கால்கள்
தளர்நடையாக…
சுட்டிய திசையில்
நடைப் பயணம்…
தாகம் பெருந்தாகம்
தீர்க்க யாருமில்லை
விடத்தல் முட்கள் கிழித்து
உடும்பு வேட்டையாடிய
காடுகள் தாண்டி…
இன்னும் தொடரும்
எங்கள் நடைப் பயணம்
முடியும் இடம்தேடி
மீண்டும் மீண்டும்…

எங்கள் அன்னைமடி

உச்சியிலே விரல் கோதி

நெற்றியிலே

திலகமிட்டு

முறத்தால் புலிவிரட்டி

மறத்தால் தலை நிமிர்ந்து

தனித் திறத்தால்

வளர்ந்து நின்று

வந்தோரை வாழவைத்த

அன்னைமடி எங்கள் வன்னி மடி…


நிறை குளங்கள்

பெருக்கெடுத்து

அருவி பாய

வாளை விரால்

துள்ளிவந்து

தாளம் போட…


வாழை பலா கமுகுடனே

வானம் பார்க்க

நெற்கதிர்கள் குனிந்து

மண்ணில் கோலம் போட…


மோதி விழும் காற்று

நல்ல வாசம் வீச

வண்டினங்கள் வந்து நின்று

கீதம் பாட…

இன்பமாக என்றும் நாங்கள்

வாழ்ந்த பூமி

கண்கலங்கி நிற்பதென்ன

முறையோ ஐயா…

ஆகஸ்ட் 09, 2009

ஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்


உள்ளடக்கம்



வாழ்த்துரை
அணிந்துரை
முன்னுரை

இயல் - 1
ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில் துறை தொடர்பான அறிமுகமும்

1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்
1.2. ஈழத்தின் ஆரம்ப கால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்

இயல் -2
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்

2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்
2.2. இலக்கியங்களின் சிறப்பியல்புகள்

இயல் -3
போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம்

3.1. இலக்கியங்கள்
3.2. பிரபந்தங்கள் அதிகம் தோன்ற சாதகமான காரணிகள்
3.3. இலக்கியப் பண்புகள்
3.4. தமிழறிஞர் சிலர் பற்றி…

இயல் -4
19 ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்

4.1. இலக்கிய வகைகள்
4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்
4.3. ஆறுமுக நாவலரின் இலக்கியப் பணிகள்
4.4. ஆங்கிலேயர் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள்
4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…

இயல் -5
நவீன இலக்கியங்களின் செல்நெறி

5.1. நாடகங்கள் தோன்றி வளர்ந்தமை
5.1.1. சுதந்திரத்துக்கு முன்னைய நாடக வளர்ச்சிப் போக்கு
5.1.2. 1950 களின் பின்னைய நாடக வளர்ச்சிப் போக்கு
5.1.3. அண்மைக்கால நாடக இலக்கிய முயற்சிகள்

5.2. தமிழ்க் கவிதை வளர்ச்சி
5.2.1. மரபு வழிப்பட்ட நிலை
5.2.2. சுதந்திரத்துக்கு முன்னைய சமூக மறுமலர்ச்சிப் போக்கு
5.2.3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி
5.2.4. அண்மைக்கால கவிதைப் போக்கு

5.3. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
5.3.1. 1950 கள் வரை ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி
5.3.2. 1950 களின் பின்னரான ஈழத்து சிறுகதை வளர்ச்சிப் போக்கு

5.4. தமிழில் நாவல் வளர்ச்சி
5.4.1. தொடக்க காலம் முதல் 1960 கள் வரை நாவல் வளர்ச்சி
5.4.2. 1960 களின் பின்னைய நாவல் இலக்கிய வளர்ச்சி

5.5. தமிழில் திறனாய்வு வளர்ச்சி

துணைநூற் பட்டியல்

பின்னிணைப்பு – கட்டுரை
ஈழத்தில் குழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் சவாலும்

இயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) என்றும் பொருள்படும்.

இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்கள் பலர் அரசியலின் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இலக்கியங்களை எழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகத்தான் தோன்றுகின்றது என்ற உண்மையினையும் நாம் மறந்துவிடக்கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவிவிலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தை இனங்கண்டு கொள்ள முடிகின்றதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி விடுகின்றமை தவிர்க்க முடியாததாகின்றது.

இலக்கிய வரலாற்றுக்கு காலத்துக்கு காலம் தரப்பட்ட பல்வேறு பகுப்புக்களையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இலக்கிய வளர்ச்சி பற்றிய அறிவெல்லை விரிந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. பொதுவாகத் தமிழ் இலக்கியப்பரப்பினை பகுக்க முற்பட்டோர் அரசியலடிப்படையிலான இலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பினையே முன்வைத்துள்ளனர். எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் இத்தகைய அரசியல்சார் அடிப்படையில் பகுத்துக் கொள்வதே சிறப்பான தெரிவாக அமையும்.
1. தொடக்க காலம் ( கி.பி. 1216 வரை… )
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் ( கி.பி. 1216-1621 வரை)
3. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ( கி.பி. 1621-1796 வரை)
4. ஆங்கிலேயர் காலம் ( கி.பி. 1800-1948 வரை)
5. தற்காலம் ( 1948 இன் பின்… )

என்ற அடிப்படையில் பகுப்பாய்வினை அமைப்பதனால் மாணவர்கள் இலகுவான முறையில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்?

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாகக் காணப்படுகின்றது. ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் சங்க கால இலக்கியத்தில் வரும் ஒரு புலவர் ஆவார். இப்புலவர் சங்க இலக்கியங்களிலே நான்கு வகைப் பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

குறுந்தொகை 343, அகம் 88 - ஈழத்துப் பூதந்தேவன்
நற்றிணை 366 - ஈழத்துப் பூதந்தேவனார்
குறுந்தொகை 189, 360 - மதுரை ஈழத்துப் பூதந்தேவன்
அகம் 231, 307 - மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்

இவ்வாறு குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை நானூறு ஆகிய நூல்களில் வரும் ஏழு செய்யுள்களில் இருந்து ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்களினை அறியமுடிகின்ற போதிலும் இவர் ஈழத்தவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்நூல்களில் இடம்பெறவில்லை. ‘ஈழத்து’ என்ற அடைமொழியை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ஈழநாட்டினராக இருக்கலாம் எனக் கருதுவோரும் உள்ளனர். உண்மையில் இவர் ஈழ நாட்டினர் தானா என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எவையும் உள்ளனவா என்று தேட வேண்டியது அவசியமாகின்றது.

‘ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலும், ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலுமாக அழைக்கப்பட்ட இவர் இலங்கையர்தானா என்பதற்கான ஆதாரங்களினைத் தேடப் பலர் முற்பட்டுள்ளனர். சிலர் ஊகங்களின் அடிப்படையில் சில தரவுகளை முன்வைத்தனர். வேறுசிலர் ‘ஈழம்’ என்ற அடைமொழியின் அடிப்படையில் வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் தேட முற்பட்டு, இலங்கைக்கு வழங்கிவரும் பெயர்களில் இதுவும் ஒன்றாகையால் இவர் ஈழத்தவரே எனச் சுட்டிக் காட்டினர்.

இவர் ஈழத்தில் இருந்து மதுரையில் சென்று வசித்த காரணத்தினால் காலப்போக்கில் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. “இவர் ஈழ நாட்டில் நின்று மதுரையில் வந்து தங்கிய பூதன் மகன் தேவன் எனப்படுவார்”(3) என்று நற்றிணை நானூறுக்கு தெளிவுரை எழுதிய அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து கூறுகின்ற போது ஏடெழுதுவோருடைய பிழையினால் ‘ஏற்றத்துப் பூதந்தேவனார்’ எனவும் குறிப்புக்கள் காணப்படுவதாகவும் ஒரு சான்றினைத் தருகின்றார்.

மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் குறிஞ்சி, பாலைத் திணைகளுக்கான ஏழு அகப் பாடல்களைப் பாடியிருக்க, பூதந்தேவனார் என்ற புலவர் ஒருவர் மருதத் திணையைச் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. குறுந்தொகை 285, நற்றிணை 80 ஆகிய இரு செய்யுள்களும் இவரால் பாடப்பட்டிருக்கின்றன. மருதத் திணையைச் சிறப்பித்துப்பாடி, அகத்திணையிலே களவு நிகழ்ந்திருப்பதைக் கூறுவதாக இவருடைய பாடல்கள் காணப்பட, மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரோ “வாடை வீசும் குளிர் காலத்திலே தலைவியைப் பிரிந்து செல்வோன் மடமையுடையவன்” என்ற பொருள் பட குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். எனவே பாடல்களைத் திணை அடிப்படையில் நோக்குகின்ற போது இருவரும் வௌ;வேறு புலவர்கள் எனக் கருத இடமுண்டாயினும், மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவரே எனக் கொள்ளும் நாம் ‘ஈழத்து’ அல்லது ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழி இல்லாத காரணத்தினால் இவரை மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் அல்லர் என இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஈழத்துப் பூதந்தேவனார் கடைச் சங்கப் புலவராக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுவுடையதாக உள்ளது. “பசும்பூட் பாண்டியனை” பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இவர் பாடிய (அகம் 231) பாடல் ஒன்றின் மூலம் இவருடைய காலம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. பசும்பூட் பாண்டியனை பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர் முதலியோரும் பாடியிருக்கின்றனர். எனவே இவர்கள் எல்லோரும் சமகாலத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் பசும்பூட் பாண்டியனின் காலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் புதந்தேவனாரின் காலத்தை வரையறை செய்வதென்பதும் கடினமானதே. எது எப்படியாக இருப்பினும் இவர் பசும்பூட் பாண்டியனுக்குப் பிற்பட்டவர் அல்லது சம காலத்தவர் என்பது புலனாகின்றது. அதேபோல் ‘பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் ஆகியோர் சமகாலத்தவர் என்று கூறுவதும் பொருத்தமானதல்ல’(4)

ஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது. இதேவேளையில் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மன்னாரில் முசலி (முரஞ்சி) என்ற கிராமத்தவர்(5) எனவும் ‘ஈழ மண்டலப் புலவர் சரிதம்’ என்ற நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வணிக நிலைத் தொடர்பினை நாம் பட்டிணப்பாலையில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது. நீண்ட காலம் தொட்டு ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இடையறாத் தொடர்பு இருந்து வருவதனை அவ்வப்போது வரலாற்று, புவியியல் ஆய்வுகள் நிறுவியுள்ளமையினையும் மறந்துவிடக் கூடாது. எனவே நீண்ட காலமாக வணிக, பண்பாட்டு, மொழித் தொடர்புகளினால் பிணைக்கப்பட்ட தமிழகத்துக்கு இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவர் சென்று வாழ்வதென்பது இயலாத ஒன்றல்ல. அவ்வாறே ஈழத்துப் பூதந்தேவனாரும் மதுரையில் சென்று வசித்திருக்க முடியும். நிறுவன ரீதியாக (சங்கம்) புலவர்களை அனுசரித்துப் போற்றிய மதுரையில் இருந்து கொண்டு தனது இலக்கியப் பணியினை மேற்கொண்டிருக்கலாம் எனப் பல தளங்களினூடே இவரைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்க முடிகின்றது. இவ்வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவதே சிறப்பானதாக அமையும்.

1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்

ஈழநாட்டில் மகாசேனன்(கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில் சங்ககாலம் முடிவுறும் கட்டத்தினை நெருங்கி இருந்தமையினை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது. மகாவம்சம் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான செய்தியினை விரிவான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டது. இந்நிலையில் ஈழத்துப் பூதந்தேவனாருடன் (சங்க இலக்கியங்களுடன் ) ஈழத்து இலக்கிய முயற்சிகளும் தொடங்குவதாக எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்த காலகட்டமாக கி.பி.1216இல் தொடங்குகின்ற ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாண இராச்சிய) காலத்தையே கொள்ள முடிகின்றதெனில், கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை வரை ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையா என்ற ஐயப்பாடு எழுகின்றது. இந்த நீண்ட இடைவெளி இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தொடர்ச்சியின்றிக் காட்டுவதனால் ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு யாதென அறிய முடியாமல் உள்ளது.

கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பதுளைக் கல்வெட்டில் “தெமழன்டரடனா தென்தரு ஆவா நொதென இசா ………………”(6) என்ற செய்தியொன்று காணப்படுகின்றது. தமிழர்களுக்கு நாட்டின் தலைவர்களின் புதல்வர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்பதே இதன் கருத்தாகும். தமிழர்கள் அரசியல் மேலாதிக்கம் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய செய்திகள் பொறிக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் ஆதிமூலங்களைத் தேடுவதென்பதும் கடினமான பணியாகவே அமையும்.

வெள்ளம், தீ முதலிய இயற்கை அனர்த்தங்களினாலும், அடிக்கடி நிகழ்ந்த படையெடுப்புக்களாலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டமையினாலும், கறையான் முதலியவற்றினாலும், தொகுத்தல்-தொகுப்பித்தல் முயற்சிகள் இன்மையாலும், நிறுவன ரீதியிலான முயற்சிகள் இன்மையாலும் எனப் பல காரணங்களினால் அக்கால இலக்கியங்களைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போயிருக்கலாம். ஏனெனில் பழமை வாய்ந்த ஓர் இனம் தமக்கென ஒரு இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

மிகப் பழைய காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் ஈழ நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் பல நிறுவியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இத்தகைய சான்றுகள் பல ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத் தமிழரிடையே வழங்கிவரும் சடங்குகள், வழிபாட்டு மரபுகள், போன்றனவற்றின் ‘ஆதிமூலங்களை’யும் தமிழ்-சிங்கள மக்களிடையே நிலவி வரும் வாய்மொழிப் பாடல்கள் பற்றிய தொன்மங்களினையும் துல்லியமான முறையில் எடுத்து தொகுத்து ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமிடத்து இந்த இடைவெளி சிலவேளைகளில் நிரப்பப்படலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் ‘புத்ததத்தர்’ உட்படப் பல அறிஞர்கள் இலங்கையின் மகா விகாரையில் தங்கியிருந்து பாளி மொழியிலிருந்த நூல்களைக் கற்று தமிழில் உரை எழுதினர் எனத் தெரிகின்ற போதிலும் அவை எவையும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் நீண்ட காலமாக தமிழ் இலக்கியத்துடன் பௌத்த மதக் கருத்துக்கள் தொடர்பு படுவதை இதனூடாக அவதானிக்க முடிகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் இலக்கியத் தொடர்புகள் இருந்தன என்பதற்கு தேவாரங்கள் சான்றாக உள்ளன. இலங்கையின் புகழ் பெற்ற சிவத் தலங்களான திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்பன மீது திருநாவுக்கரசரும் திருஞான சம்மந்தரும் தேவாரங்கள் பாடியமை மூலம் இத் தொடர்பு நிலை நிறுவப்பட்டது.

மும்முடிச் சோழ மண்டலங்களில் ஒன்றாகச் சோழர்கள் இலங்கையை அரசு புரிந்த வேளையில் புலத்தி நகரில் (பொலநறுவையில்) இருந்து கொண்டு சோழர்கள் தமிழை வளர்த்தனரா என்பதையும், சோழர் காலப் புலவர்கள் யாராவது இலங்கைக்கு வந்தனரா என்பதையும் அறிய முடியாத நிலையில் அக்காலக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றார்(7) என மரபுவழிக் கதை ஒன்று நிலவி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

பொலநறுவைக் காலக் கல்வெட்டுக்களில் வெண்பா, விருத்தம் முதலிய தமிழ்ப் பாவினங்களின் செல்வாக்கினை அவதானிக்க முடிவதுடன், அக்காலத் தமிழ் உரைநடைக்கான இடத்தினையும் ஓரளவு ஊகித்து அறிய முடிகின்றது. அனுராத புரத்தின் வடபகுதியில் இந்து சமயக் கட்டிட அழிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட நான்கு நாட்டார் கல்வெட்டும் கி.பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பட்ட நிலையில் அதன் இறுதியில் காணப்படும் வெண்பா வருமாறு
“ போதி நிலமமர்ந்த புண்ணியன் போலெவ்வுயிர்க்கும்
நீதி லருள் சுரக்குஞ் சிந்தையா – னாதி
வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை
யொரு தர்ம பாலனுளன் ”
இவ் வெண்பா அக்காலச் செய்யுள் யாப்பின் உன்னத நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளதுடன், அனுராதபுரப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாகவும் இதனைக் கொள்ள முடிகின்றது.

நிஸங்க மல்லன் (கி.பி.1187-1196) என்பவன் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மிகச் சிறப்பான ஆட்சி புரிந்தான். இவனுடைய காலத்துக் கல்வெட்டு ஒன்று விருத்தப் பாவினால் பொறிக்கப் பட்டுள்ளது. அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இராச்சியங்களிலே தமிழ் மொழி வழக்கில் இருந்தமைக்கு மேற்படி கல்வெட்டுக்களில் உள்ள வெண்பா, விருத்தம் முதலிய தமிழ் யாப்பு வடிவங்கள் கையாளப் பட்டு செய்திகள் பொறிக்கப் பட்டமை சான்றாகின்றன. இதேபோல கேகாலையில் கோட்டகம என்ற இடத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் ஈழத் தமிழர்களின் இலக்கியப் பாரம்பரியத்தையும் அவர்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்ற செய்தியினையும் அறிய முடிகின்றது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறு இலங்கையிலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளினால் தெளிவு பெறவேண்டியுள்ளது. இதில் இலங்கைத் தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற குறைபாடும், கிடைத்த சில சான்றுகள்கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குறைபாடும் நியாயமான குற்றச்சாட்டாகவே தெரிகின்றது. இந்த வகையில் சரசோதிமாலை என்ற நூலின் தோற்றத்துக்கு முன்னதான தமிழ் இலக்கியம் பற்றிய உதிரியான சில தகவல்களைத் திரட்டி அவற்றினூடே அக்காலத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஊகித்தறிய வேண்டிய அல்லது நிறுவ வேண்டிய கடப்பாடும் மேலெழுகின்றது.

இயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1621)

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பெரியதொரு இராட்கியத்தை நிறுவி கட்டிக்காத்தனர். வடக்கே நிலைமை இவ்வாறிருக்க சமகாலத்தில் நாட்டின் திசையெங்கும் தமிழர் செறிந்து வாழ்ந்தனர். மன்னர்களான செயவீரசிங்கனும் எதிர்மன்னசிங்கனும் புலவர்களாக விளங்கியதுடன் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் கட்டிக் காத்தனர்.

பதினெட்டு தமிழ் மன்னர்கள் மாறிமாறி ஆட்சி செய்த அக்காலமானது ஈழத்து இலக்கியத்தின் பொற்காலமாக விளங்கியதனையும் அவதானிக்க முடிகின்றது. தாம் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்த போதிலும் தமிழகத்தில் இருந்து வந்த புலவர்களை ஆதரித்து, இருப்பிடம் வழங்கியும் கௌரவித்தனர். “சரஸ்வதி பண்டாரம்”(5) என்ற நூல் நிலையத்தினை யாழ்ப்பாணத்தில் அமைத்து தொண்டாற்றினர். இது பின்னர் போத்துக்கேயரினால் தீக்கிரையாக்கப் பட்டது.

2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்

யாழ்ப்பாண மன்னர் கால இலக்கியங்களினை பொருள், வடிவ, பண்பு என்ற நெறிகளுள் எதனடிப்படையில் ஆராய்வதென்பதில் பலரும் பல்வேறு சிக்கல்களினை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் ஆய்வு வசதி கருதி ‘பண்பு’ அடிப்படையில் பின்வருமாறு பகுத்து ஆராயலாம்.
1. சமய சார்புடைய நூல்கள்
2. சோதிட நூல்கள்
3. வைத்திய நூல்கள்
4. தழுவல் நூல்கள் ஃ காவியம்
5. வரலாறு சார்புடைய நூல்கள்

2.1.1. சமய சார்புடைய நூல்கள்

யாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்னுமளவிற்கு இந்துசமயச் செல்வாக்கானது நிலைபெற்றிருந்ததனை அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசோச்சிய மன்னர்களும் மக்களும் மதப்பற்று மிக்கோராகவும் கோயிற் பண்பாட்டுடன் ஈடுபாடுடையவர்களாகவும் விளங்கினர். ஆலயத் தொண்டர்கள் ஆலயங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். ஆட்சிப் பரப்புக்குள் ஆலயங்களும், வழிபாட்டு மரபுகளும் நன்கு வேரூன்றி இருந்தமையினால் சமயச் சார்புடைய இலக்கியங்களும் தோற்றம் பெற்றன.

அக்காலத்தில் எழுந்த சமயச் சார்புடைய இலக்கியங்களினை இரண்டு பிரிவுகட்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடிகின்றது.
1. கற்றோரை மையமாகக் கொண்டெழுந்தவை.
2. அடிநிலை மக்களை மையமாகக் கொண்டவை.
3.
என்பனவாம்: எனினும் இன்றுள்ளவற்றுள் அடிநிலை மக்களுக்குரியனவான இலக்கியங்களினைக் காண முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் அடிநிலை மக்களுக்குரிய இலக்கியங்கள் பலவும் வாய்மொழி மரபினவாக இருந்தமையே எனலாம்.

அ. தக்கிண கைலாய புராணம்
ஆ. கதிரமலைப் பள்ளு
இ. கண்ணகி வழக்குரை
ஈ . திருக்கரைசைப் புராணம்
என்பன சமயச் சார்புடைய நூல்களாகும்.

அ. தக்கிண கைலாய புராணம்

தக்கிண கைலாய புராணத்தின் ஆசிரியர் யாரென்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
1. ஐந்தாம் செகராச சேகரன்(செயவீரசிங்கை ஆரியன்) இதை எழுதினான், என கா.சிதம்பரஐயர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் போன்றோர் கூறினர்.
2. பண்டிதராசனால் எழுதப்பட்டதென பு.பொ.வைத்தியலிங்க தேசிகர், சி.கணேசையர் போன்றோர் கூறினர்.
3. தனது குருவாகிய சைவராச பண்டிதர் வேண்டியதால் ஐந்தாம் செகராச சேகரன் தக்கிண கைலாய புராணத்தைப் பாடினான் என அரசகேசரி தனது சிறப்புப் பாயிரச் செய்தியில் கூறியுள்ளார்.(6)

இவ்வாறான சிக்கல்கள் இருப்பினும் இது யாழ்ப்பாண இராச்சிய கால நூல் என்பதில் ஒருமித்த கருத்ததையே எல்லோரும் கொண்டுள்ளனர். 7சருக்கங்களினையும் 635செய்யுட்களினையும் கொண்டு கோணேச்சரப் பெருமான் சமேத மாதுமை அம்மையை வாழ்த்திப் பாடிய தல புராணமாக விளங்குகின்றது. கற்பனை நயம் செறிந்த இந்நூல் சிறந்த நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக்காட்டாகவுள்ளது.


ஆ. கதிரமலைப் பள்ளு

கதிரையப்பர் பள்ளு என்று அழைக்கப்பட்ட இப் பிரபந்தமானது எமக்குக் கிடைத்த காலத்தால் முற்பட்ட பள்ளு இலக்கியமாகும். 1906 ஆம் ஆண்டில் முதன்முதலாக இது நூலுருப்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த தா.கைலாசபிள்ளை என்பவரே அப்பணியைச் செய்தார்.

இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முள்ளியவளையில் எழுந்தருளியுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. இதற்கும் ஓர் காரணம் உண்டு. கதிர்காம யாத்திரிகர்களின் நடைப் பயண வழியில் காட்டு விநாயகர் ஆலயம் அமைந்திருப்பதே அதுவாகும். பன்றிப் பள்ளு, குருவிப் பள்ளு வரிசையில் கதிரமலைப் பள்ளும் இப்பகுதிக்குரியதாக இருக்கலாமோ? என்ற ஐயம் வலுவுடையதாகவுள்ளது.


இ. கண்ணகி வழக்குரை

ஐந்தாம் செகராச சேகரனால் எழுதப்பட்ட நூல் கண்ணகிவழக்குரை ஆகும்.(7) இதன் பதிப்பாசிரியர் வீ.சி.கந்தையா, ‘காங்கேயன்’ என்பவர்தான் நூலாசிரியர் என்று கூறியுள்ளார். கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை என்ற இரு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இந்நூலின் ஆசிரியரை இனங்காண ஆரியர் கோன், அதியரசன், தேவையர்கோன், காங்கேயன், சகவீரன்; போன்ற பெயர்கள் நூலில் அகச் சான்றுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயரால் சிறைப் பிடிக்கப்பட்ட ‘வெற்றிவேற் சட்டம்பியார்’ இதைப் பாடினார் என்ற கருத்தும் வலுவுடையதாகவுள்ளது. இந்நூல் இரண்டு கதைப் பதிப்புக்காளாக வெளிவந்தமையினால் ஒரே நோக்கில் அவற்றை நோக்குவது பயனுடையதாகும்.

கோவலனார் கதை கண்ணகி வழக்குரை

1. கோவலர் கண்ணகை அம்மன் 1. வரம்பெறு காதை
அ. கோவலனார் பிறந்த கதை
ஆ. அம்மன் பிறந்த கதை

2. தூரி ஓட்டம் 2. கப்பல் வைத்த காதை
அ. மீகாமன் கதை
ஆ.தூரியோட்டு
இ. கப்பல் வைத்தல்

3. கடலோட்டுக் காதை 3. கடலோட்டு காதை
அ. வெடியரசன் போர் அ. வெடியரசன் போர்
ஆ. நீலகேசரி புலம்பல் ஆ. நீலகேசி புலம்பலும்
வீரநாராயணன் கதையும்
இ. வீரநாராயணதேவன் போர் இ. மணி வாங்கின கதை
ஈ . விளங்கு தேவன் போர் ஈ . விளங்கு தேவன் போர்

4. மணமாலை 4. கலியாணக் காதை

5. அரங்கேற்றுக் காதை 5. மாதவி அரங்கேற்று காதை

6. கோவலரைப் பொன்னுக்கு - 6. பொன்னுக்கு மறிப்புக் காதை
மறித்த காதை அ. பொன்னுக்கு மறிப்பு
ஆ. இரங்கிய காதல்

7. சிலம்பு கூறல் 7. வழிநடைக் காதை
அ. வயந்தமாலை தூது
ஆ. வழிநடை

8. உயிர் மீட்சிக் காதை 8. அடைக்கலக் காதை

9. வழக்குரை-மதுரை தகனம் 9. கொலைக் களக் காதை
அ. சிலம்பு கூறல்
ஆ. கொலைக் களக் கதை
இ. அம்மன் கனாக்கண்ட கதை
ஈ . உயிர் மீட்புக் கதை



10. குளிர்ச்சி 10. குளிர்ச்சிக் காதை
அ. குளிர்ச்சி
ஆ. வழக்குரைக் காவியம்

என இரண்டு பதிப்பும் வைப்பு முறையில் மாறுபாட்டுடன் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஏட்டு வடிவில் பேணப்பட்டு வரும் இந்த நூலானது பெரும்பாலும் சிலப்பதிகாரக் கதையினைப் பின்பற்றி அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது.

ஈ . திருக்கரைசைப் புராணம்

திருகோணமலையின் வெருகல் ஆற்றங்கரையிலுள்ள ‘கரைசை’ என்னும் இடத்தில் குடிகொண்ட சிவனைப் பாடும் தலபுராணமே இதுவாகும். இந்நூலை யார் பாடினார் என அறிய முடியவில்லை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் பொழிப்புரையுடன் திருகோணமலை வே.அகிலேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்புராணத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக பாயிரத்தில் 14 செய்யுட்கள் உள்ளன. அதைவிட நான்கு சருக்கங்களிலும் மொத்தம் 155 செய்யுட்கள் காணப்படுகின்றன.

சிலேடையணி மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வர்ணனை மிகுந்து விளங்கும் இந்நூலில் விருத்தப்பாவே பயன்படுத்தப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ‘மாவலி’ ஆற்றினை “அகத்தியத் தாபனம்” என்ற சிறப்புப் பெயரினால் இந்நூல் சுட்டுகின்றமை விசேடமானது.

2.1.2. சோதிட நூல்கள்

நாட்டு வளத்தைப் பேணுவதற்கும் அரச கருமங்களினை நாள், கோள், நிமிர்த்தம் பார்த்துத் தொடங்கவும் அக்கால மன்னர்கள் சோதிடக் கலையினைப் பேணி வந்திருக்கலாம். என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் மன்னர்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தவும் இக்கலை பெரிதும் உதவியதனை அறிய முடிகின்றது.

இந்நிலையில்;: சரசோதிமாலை, செகராசசேகரமாலை ஆகிய இரு சோதிட நூல்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றது.

அ. சரசோதி மாலை

தம்பதெனியாவில் அரசு புரிந்த நாலாம் பராக்கிரமபாகுவினுடைய அரச சபையில் கி.பி.1310இல் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை(8) என்னும் காலத்தால் முந்திய சோதிட நூலானது தேனுவரைப்பெருமாள் என அழைக்கப்பட்ட போசராச பண்டிதரால் இயற்றப்பட்டது என்பதற்கும் அவரது குலம், அரங்கேற்றம் நிகழ்ந்த இடம் எது என்பதற்கும் தகுந்த ஆதாரங்களை இந்நூலின் இறுதிச் செய்யுள் வழங்குகின்றது.

ஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன.

ஆ. செகராசசேகர மாலை

யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் இதுவாகும். உவமை, சிலேடை, உருவகம் என்பன நிறைந்து இலக்கிய நயம் தோன்ற இந்நூல் பாடப்பட்டுள்ளது.

படலம் என்னும் பகுப்பு முறைக்கமைவாக மகளிர் வினைப் படலம், மைந்தர் வினைப் படலம், மணவினைப் படலம், கூழ் வினைப் படலம், வேந்தர் வினைப் படலம், கோசரப் படலம், யாத்திரைப் படலம் என்னும் 7படலங்களும் பொருட் பகுப்புக்கு ஏற்ப அடுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

வாக்கிய பஞ்சாங்க ஆசான் கொக்குவில் சி.இரகுநாதஐயர் இதற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். செகராசசேகரனின் புகழ் இந்நூலில் ஆங்காங்கே விளித்துக் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமண குலத்தினர் என்பதற்கு இந்நூலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு வேண்டிய நற்கருமங்களை ஆற்றவேண்டிய நாள், கோள் தொடர்பான கருத்துக்களும் இதில் நிறைய உண்டு.

2.1.3. வைத்திய நூல்கள்

ஈழத்தில் மருத்துவ நூல்களின் தொடக்கத்தினை ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து அறிய முடிகின்றது. செகராசசேகரம் பரராசசேகரம் ஆகிய இரு நூல்களுமே தொடக்க காலத்து வைத்திய நூல்களாக இனங்காணப்பட்டன. இவை இரண்டும் வடமொழி ஆயுர்வேத நூல்களைத் தழுவி எழுந்தன என்றும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் இலங்கையில் மருத்துவ அறிவு பரவியிருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.(9)

அ. செகராசசேகரம்

இந்நூல் நோய்களையும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும் கூறுகின்றது. 15 வகையான சுரம் பற்றியும், 13 வகையான சன்னி பற்றியும், 85 வகையான வாத வகைகளினையும், 21 வகையான மூல வியாதிகளினையும் அவை எல்லாவற்றுக்குமான மூலிகைகளினையும் இந்நூலில் விரிவாகக் காண முடிகின்றது.

ஆ. பரராசசேகரம்

40 வகையான சன்னி, 40 வகைப் பித்தரோகம், 64 வகைச் சுரம், 96வகைச் சிற்பனரோகம், 40 வகை மேகரோகம், 108 வகை உதரரோகம், 13வகை மூலரோகம் போன்றவற்றையும் அவற்றுக்கான ஆயுர்வேதக் குறிப்புக்களையும் இதில் காணமுடிகின்றது. நீரிழிவு, கரப்பான், பிளவை, கிரந்தி, விக்கல், வலி, கசம், வாந்தி போன்ற வியாதிகளுக்கும் இதில் தீர்வு கூறப்பட்டுள்ளது.

2.1.4. தழுவல் நூல் அல்லது காவியம் அல்லது மொழிபெயர்ப்பு நூல்

ஈழத்தில் முதல் காவியத்தைச் செய்த பெருமை ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் வந்த நீர்வேலி அரசகேசரிக்கே உரியது. யாழ்.நல்லூரில் பிறந்த இவர் 1616இல் இக்காவியத்தைப் பாடினார் என்பர். வடமொழியில் காளிதாஸ மகாகவியினால் எழுதப்பட்ட இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பே அரசகேசரியின் காவியமாகும்.

இரகுவம்சம்


திலீபமகாராசா காமதேனுவை வழிபட்டு ‘இரகு’ என்பவனைப் புத்திரனாகப் பெற்ற கதையும், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் போன்றோரின் குல வரலாறும் இக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என முக்காண்டங்களை உடைய இக்காவியம் முறையே 16, 6, 4 படலங்களை ஒவ்வொரு காண்டத்துக்கும் உரியதாகக் கொண்டு காப்புச்செய்யுள், பாயிரச்செய்யுள் உட்பட 2444பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது.

சொல்லணி, பொருளணிகள் மிகுந்து அரிதான சொற்கள் பயின்று வருவனவாக இதன் செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளமை அரசகேசரியின் புலமைக்குச் சிறந்த சான்றாக உள்ளது. நாவலரின் மருமகனான வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளை இக்காப்பியத்தை கி.பி.1887இல் பதிப்பித்து வெளியிட்டார். வித்துவான் சரவணமுத்து அவர்கள் இதற்குப் பொழிப்புரை எழுதினார்.

இக்காப்பியத்தினை ஆதாரமாகக் கொண்டு சுன்னாகம் அ.குமாரசுவாமி புலவர் அவர்கள் ‘இரகுவமிச கருப்பொருள்’ ‘இரகுவமிச சாராமிர்தம்’ என்ற இரண்டு வசன நூல்களினை எழுதினார்.

2.1.5. வரலாற்று நூல்கள்

யாழ்ப்பாண மன்னர் காலத்து வரலாறு கூறும் நூல்களாக எமக்கு இன்று கைலாயமாலையும் வையாபாடலும் கிடைக்கின்றது. கோணேசர் கல்வெட்டு எழுந்த காலம் பற்றி பலரும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டு காணப்படுகின்றனர்.

அ. கைலாயமாலை

கைலாயமாலை என்ற வரலாற்று நூலானது முத்துராயர் என்னும் புலவரினால் அருளப்பட்டது என்பதற்கு அந்நூலில் வரும் வெண்பா ஒன்று சான்றாக அமைகின்றது.எனினும் இவ்வெண்பா நூலாசிரியரால் எழுதப்பட்டதா? இடைச் சொருகலா? என்பதில் பலரிடையேயும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

யாழ்ப்பாண மன்னர் காலத்து அரசுக்கு அனுசரனை புரிந்த நிலவுடைமை வர்க்கத்தினரின் தொன்மையும் சிறப்பும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளமையினால் இது ஆளும் வர்க்கத்துக்குச் சார்பான ஓர் நூல் என்பதை உணர முடிகின்றது. குறிப்பாக இந்நூலில் வரும் நல்லூர் சட்டநாதர் ஆலய வரலாறும் அதைக் கட்டுவித்த சிங்கையாரியனின் வரலாறும் இதை எமக்குத் தெளிவாக உணர்த்தி நிக்கின்றன.

ஆ. வையாபாடல்

செகராசசேகரனின் அவைப்புலவரான வையாபுரிஐயர் செய்த இந்த நூலானது இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களையும் அவர்களின் குலம், குடிகள் பரவிய விதம் போன்றவற்றை உரைக்கின்றது. கூலங்கைச் சக்கரவர்த்தியின் பெருமையினை உரைப்பதனூடாக ஆரியச்சக்கரவர்த்திகளைப் புகழும் நூலாகத் திகழ்கின்றது.

வன்னி அடங்காப்பற்றில் வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றிய செய்திகளையும் இந்நூல் தருகின்றது. ஈழத்தில் நாச்சிமார் வழிபாடு எப்போது? எப்படி? பரவியது என்ற செய்தியையும் இதிலிருந்து அறிய முடிகின்றது. அதேநேரம் இந்நூலில் இடைச் சொருகல்கள் உள்ளன. என்ற ஆ.சதாசிவம் அவர்களின் கருத்தினையும் எளிதில் நிராகரிக்க முடியாமல் உள்ளது.

இ. கோணேசர் கல்வெட்டு

‘கல்வெட்டு’ம் தனித்துவமான ஓர் இலக்கிய வடிவமாக நிலவி வந்தமையினை நாம் ‘கோணேசர் கல்வெட்டின்’ மூலம் தெளிவாக உணரலாம் குளக்கோட்டு மன்னனால் கோணேசர் கோயில் கட்டப்பட்டமை, அவனது குலமரபு, சந்ததி பற்றிய விவரம், பணிகள் தொடர்பான விடயங்களினை இந்நூல் விரிவாகத் தருகின்றது. இந்நூலில் பல இடங்களில் இடைச்சொருகல் காணப்படுவதாக இதை ஆய்வுசெய்த ஈழத்தறிஞர் பலரும் குறிப்பிடும் அதேயிடத்து பேராசிரியர் சி.பத்மநாதன் இதனை ஓர் தொகுப்பு நூல் எனக் கருதுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதன் காலம் தொடர்பாகச் சர்ச்சைகள் நிலவுகின்ற போதிலும் 17ஆம் நூற்றாண்டில் ‘கவிராஜவரோதயன்’ என்பவரால் பாடப்பட்டது என பேராசிரியர் சி.பத்மநாதன் கருதுகின்றார். ‘கவிராஜன், இராஜவரோதயன்’ என இருபெயர்கள் இந் நூலாசிரியருக்கு இருந்தன. எனப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளமை ஆய்வுக்குரியதாகும்.

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன.

கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது.
வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன்றான்-வாழை) மொழி நடையில் கடினமான இறுகிய சொற்களுடன் இத்தகைய நூல்கள் விளங்கியமையானது மரபுரீதியாக அல்லது செவிவழியாக மருத்துவம் சார் கருத்துக்கள் பயின்று வந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன.

வரலாறு என்பது எழுந்தவன் சார்பாக எழுதப்படுவது என்ற கூற்றுக்கு அமைய, ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலும் கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு போன்றன நிலவுடைமை வர்க்கத்தினரையும் பிரபுக்கள், அரசர் போன்றோரையும் மகிழ்விப்பனவாகவும் அவர்களின் குலமரபு கூறுவனவாகவும் தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.

கண்ணகி வழக்குரையும் கதிரமலைப்பள்ளும் சமய நூல்களாக இருப்பினும் அவற்றில் சமூகக் கருத்துக்கள் செறிவுடையனவாகக் காணப்படுகின்றன. கிராமிய வழிபாட்டு முறை, கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டம், மீன்பிடித்தல், போன்ற கிராமிய நடவடிக்கைகள் நிறைந்த நூலாக கண்ணகி வழக்குரை விளங்குகின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய குறிப்புக்களையும் இதிலிருந்து அறிய முடிகின்றது.

‘பள்ளு’ இலக்கிய வடிவங்களில் எல்லாம் காலத்தால் முந்திய இலக்கியமாகக் கதிரமலைப் பள்ளு விளங்கக் காணலாம். தமிழ் நாட்டில் முக்கூடற்பள்ளு தோன்ற முன்னரேயே ஈழத்தில் கதிரமலைப்பள்ளு தோன்றி விட்டது என இலக்கிய ஆய்வாளர்கள்கள் குறிப்பிடுவர். கற்பனை வளம் பொருந்திய வர்ணனைகளுடன் பாடல்கள் காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

தக்கிணகைலாய புராணத்தின் வரவுடன் ஈழத்தில் புராணம் ஓர் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கரைசைப் புராணமும் தோன்றி தலப் பெருமையைக் கூறியது. திருக்கரைசைப் புராணத்தில் உமாபதிசிவாச்சாரியார் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.

இரகுவம்சம், கண்ணகி வழக்குரை ஆகிய இரண்டும் ‘காவிய’ அமைப்புடையன என்று சிலர் கூற, வேறுசிலர் இரகுவம்சம் மட்டுமே காவியம் என்பர். இருப்பினும் இவற்றுக்கிடையிலான இன்னோர் ஒற்றுமையினையும் மறுப்பதற்கில்லை. உண்மையில் இவை இரண்டுமே தழுவல் நூல்கள் ஆகும். காளிதாஸமகாகவியின் இரகுவமிசம் தமிழில் அரசகேசரியால் மொழிபெயர்க்கப்பட்டது. சிலப்பதிகாரக் கதையினைத் தழுவிக் கண்ணகி வழக்குரை எழுதப்பட்டது. இரகுவம்சம் இராமாயணக் கதையின் தழுவலாகும்.

ஆரியச்சக்கரவர்த்திகால இலக்கியங்களினை ஓருமித்த பார்வையில் நோக்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “பொதுவாக இலக்கியம் என்று முன்னர் குறிப்பிட்டோர் சிருஸ்டி இலக்கியத்தை மாத்திரமன்றி, சமயம், தத்துவம், சாஸ்திரம், அறிவியல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்களையும் கருத்திற் கொண்டனர். ஆதிகாலத்தில் வாய்மொழிப் பாடல்கள் வழங்கிய போது வாகட நூலில் இருந்து வம்ச வரலாறு வரையில் செய்யுள் வடிவிலேயே அமைந்து நிலவியது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.”(10) எனக் கூறியதையும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.






அடிக்குறிப்பு

1. பட்டினப்பாலை, வரி, 190-192
2. கழகத் தமிழ் அகராதி, தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம், பக்144
3. நாராயணசாமி ஐயர், நற்றிணை நானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, பக் 62
4. முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், நாவலர் அச்சுக் கூடம், பக் 2
5. மேலது, பக் 2
6. விமல் சுவாமிநாதன், புராதன சிங்கள இலக்கியங்களில் தமிழின் செல்வாக்கு (கட்டுரை)
7. மேலது,
8. சிவலிங்கராஜா.எஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, பதிப்பு-2, பக்12
9. நடராசா. எவ் .எக்ஸ் .சி, ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, பக்59
10. மேலது, பக்33
11. நடராசா.க.செ, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, பக்06
12. அனந்தராஜ்.ந, ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், பக்71
13. கைலாசபதி.க, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், பக்14

இயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796)

ஆரியச்சக்கரவர்த்திகளின் பின்னர் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய அரசுகளினால் ஆளப்பட்டன. போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் அடிப்படையில் தமிழையும் அதனுடன் இணைந்த சைவத்தையும் எதிர்ப்பவர்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரம், அச்சுச் சுதந்திரம் என்பன தமிழருக்கோ அல்லது சைவருக்கோ சுயாதீனமாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலேயராட்சியில் ஓரளவு கருத்துச் சுதந்திரமும் பூரண அச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. அதைவிட ஆங்கிலேயராட்சியில் நவீனத்துவம் சார்பான கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியில் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் வேறுவேறான ஆட்சி செலுத்தியிருப்பினும் இலக்கிய நிலைநின்று, “ஒருங்குசேர வைத்து நோக்கும் போது ஈழத்திலக்கிய வளர்ச்சியின் முக்கிய பண்புகள் சில துலக்கமாகத் தெரிவதைக் காணலாம்.”(1) எனவே போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தினை இணைந்த பகுதியாகவும் அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் காலத்தை தனியான பகுதியாகவும் விரிவான முறையில் நோக்குவதே பொருத்தமானதாக அமையும்.

போத்துக்கேயர் அரசு கட்டில் ஏறிய பின்னர் ஈழத்தில் கட்டிறுக்கமான அரசியல்சார் நடவடிக்கைகள் அரங்கேறின. சைவசமயம், இலக்கணம், சுதேச இலக்கியம் போன்றன மறைமுகமான முறையில் கற்பிக்கப்பட்டு வந்தன. தமிழர்கள் பலர் சலுகைகளுக்காகவும் உயர் தொழில்களுக்காகவும் மதம் மாறினர்.

சுதேச கல்விக்கூடங்கள் ஆரம்ப கல்வியூட்டும் நிறுவனங்களாக மட்டுமே செயற்பட்டமையினால் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், கல்வி, சடங்குகள் போன்றன படிப்படியாகத் தடைசெய்யப்பட்டு கிறிஸ்தவ சூழலுக்குள் மக்கள் வலிந்து உள்வாங்கப்பட்டனர். இதேவேளையில் சைவப்பணியை, தமிழ்ப் பணியை தொடர விரும்பிய பலர் தமிழ் நாட்டுக்கு ஒழித்து ஓடினர்.

கல்விக்கூடங்களை அமைத்த போத்துக்கேயர் அவற்றை மதம் மாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் பயன்படுத்தினர். தமது கல்விக் கூடங்களில் கிறிஸ்தவ கல்வியை மட்டும் புகட்டி, அங்கு கற்றோருக்கு உயர் தொழில் வாய்ப்புக்களை வழங்கினர். கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளித்தனர். ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் போன்று அறிவியல் சார்பான நூல்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்தது.

போத்துக்கேயர் கால நிலைமை இவ்வாறிருக்க ஒல்லாந்தர் காலத்தில் நிலவிய ஆட்சியில் ஓரளவு நெகிழ்வுத் தன்மை விளங்கியது. வடபகுதியில் ஒல்லாந்தரால் முன்வைக்கப்பட்ட ‘தேசவழமைச் சட்டம்’(2) கிழக்கில் முன்வைக்கப்பட்ட ‘முக்குகச் சட்டம்’(3) என்பன காரணமாக சுதேச மக்கள் தமது சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பேண ஓரளவு வழிகிடைத்தமையானது நெகிழ்வுத் தன்மைக்குக் காரணங்களாக அமைந்தன.

போத்துக்கேயர் காலத்தில் மறுக்கப்பட்டிருந்த மதச்சுதந்திரம், சுதேச மொழிக் கல்வி என்பன ஒல்லாந்தர் காலத்தில் ஓரளவு தளர்த்தப்பட்டமையினால் இக்காலத்தில் இந்துசமயம் சார்பான சிற்றிலக்கியங்கள் பல தோன்றவும் வழியேற்பட்டது.

3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேயர் காலத்தில் எழுந்த நூல்கள் இரண்டு என்றும் மூன்று என்றும் கருத்துக்கள் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்காணப்பட்ட இலக்கியங்களான ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்த புராணம் ஆகிய மூன்றும் கிறிஸ்தவ சார்புடன் காணப்படுகின்றன.

அ. ஞானப்பள்ளு

‘வேதப்பள்ளு’ எனப் பலராலும் அறியப்பட்ட இந்நூல் ஜேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. யாரால் பாடப்பட்டது எனத் தெரியாது விடினும் அக்காலத்தில் ஜேசு சபையில் அங்கம் வகித்த ‘செபஸ்தியான் பொஸ்கோ சுவாமி’களின் அனுசரனையுடன் இது பாடப்பட்டிருக்கின்றது என்பதற்கும் கி.பி.1650க்கு முன்னரேயே பாடப்பட்டு விட்டது என்பதற்கும் நூலிலேயே அகச் சான்றுகள் காணப்படுகின்றன.

ஆ. அர்ச்யாகப்பர் அம்மானை

ஆரிய வம்சத்தவரான தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியாரால் 1647இல் இந்நூல் பாடப்பட்டது. ‘சந்தியோகு அம்மையார் அம்மானை’ எனவும் இது வழங்கப்பட்டு வருகின்றது. விருத்தப்பாவினால் பாடப்பட்ட இந்த நூலானது அடிநிலை மக்களைக் குறிவைத்துப் பாடப்பட்டது போலத் தெரிகின்றது. இந்து மக்கள் (யாழ்ப்பாணத்தில்) புராணபடனம் செய்வது வழக்கம். இத்தகைய படிப்பு மரபினைப் பின்பற்றி யாழ்.கிளாலியில் கட்டப்பட்ட அர்ச்யாகப்பர் ஆலயத்தில் வருட விழாவின் போது இவ் அம்மானையைப் படித்து வழிபட்டனர்.

இ. ஞானானந்த புராணம்

முன்னர் தரப்பட்ட இரு நூல்களும் இன்றுள்ளன. ஆனால் ஞானானந்த புராணம் இன்றில்லை. இந்நூல் எக்காலத்துக்குரியது என்பதில் பலரிடையேயும் முரண்பாடுகள் உள்ளன எனினும் போத்துக்கேயர் கால நூல் இது என்பதற்கான ஆதாரங்கள் வலுவுடன் உள்ளன. 1104 விருத்தப் பாக்களைக் கொண்டதாக தெல்லிப்பளை ‘தொம்.தியாகு’ முதலியாரின் விருப்பப்படி, ‘தொம்பிலிப்பு’ இதைப் பாடினார் என்றுரைப்பர்.

ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த இலக்கியங்களினை ஆய்வு வசதி கருதி, அவற்றின் பொருள் உள்ளடக்கத்துக்கு ஏற்ப,
பிரபந்த இலக்கியங்கள்
பிரபந்த வகையைச் சாராத இலக்கியங்கள் என இரண்டு வகைகளுக்குட்படுத்தி நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.



அ. பிரபந்த இலக்கியங்கள்

புராணம்- சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் -இவை மூன்றும் வரத பண்டிதரினால் பாடப்பட்டன.

தூது- கண்ணியவளை குருநாத சுவாமி மீது கிள்ளை விடு தூது -இது வரத பண்டிதரால் பாடப்பட்டது.
பஞ்சவர்ணத்தூது -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

அம்மானை- திருச்செல்வர் அம்மானை – தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

காதல்- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் -தம்பலகாமம் வீரக்கோன் முதலியார்

கோவை- கரவை வேலன் கோவை –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

அந்தாதி- கல்வளை அந்தாதி, மறைசை அந்தாதி -இவை இரண்டையும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பாடினார்.
புலியூர் அந்தாதி -மாதகல் மயில்வாகனப் புலவர்

பள்ளு- பறாளை விநாயகர் பள்ளு –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
தண்டிகை கனகராயர் பள்ளு –மாவிட்டபுரம் சின்னக்குட்டி ஐயர்

பதிகம்- இணுவில் சிவகாமியம்மை பதிகம் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

ஊஞ்சல்- வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளியம்மன் ஊஞ்சல் -வட்டு.கணபதிஐயர்

துதி- இணுவில் சிவகாமியம்மை துதி -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

பிள்ளைத் தமிழ்- இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

விளக்கம்- காசியாத்திரை விளக்கம் -மாதகல் மயில்வாகனப் புலவர்



ஆ. பிரபந்த வகை சாராத இலக்கியங்கள்

காவியம்- திருச்செல்வர் காவியம் -தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

நாடகம்- அதிரூபன், அதிரூபாவதி - வட்டு.கணபதிஐயர்
ஞானலங்காரரூப நாடகம் -மாதகல் மயில்வாகனப் புலவர்
நந்தினி நாடகம் - இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

வரலாறு- யாழ்ப்பாண வைபவமாலை – மாதகல் மயில்வாகனப் புலவர்

சோதிடம்- சந்தான தீபிகை – அராலி ச.இராமலிங்க முனிவர்

வைத்தியம்- அமுதாகரம் - வரத பண்டிதர்

3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவிலான பிரபந்தங்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் என்றுமில்லாதவாறு, ஈழத்தில் அதிகப்படியான பிரபந்த இலக்கியங்கள் தோன்றின. தமிழகத்தில் விஜயநகர நாயக்கர் காலம் நிலவிய அதேகாலத்தில் ஈழத்தை போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சி புரிந்து வந்தனர். சமகாலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்றின. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்ற பல்வேறு காரணிகள் தூண்டுதலாக அமைந்தன.

(அ) போத்துக்கேயர் – ஒல்லாந்தர் கால அரசியல் நிலையானது முன்னைய ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தமையினால் மக்களின் சமூக வாழ்வியலும் தவிர்க்க முடியாதபடி மாறியது அல்லது மாற்றியமைக்கப்பட்டது. போத்துக்கேயர் 1621இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்னரேயே யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் ஓரளவு பரவத் தொடங்கியிருந்தது. 1542ஆம் ஆண்டு 600 பேர் மன்னாரில் கிறிஸ்த்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டதை அறிந்த சங்கிலி மன்னன் படையுடன் மன்னார் சென்று மதகுருவையும் மதம் மாறியோரையும் கொலை செய்தான்.(4)

இதன் விளைவாகச் சைவ-கிறிஸ்தவ முரண்பாடு உச்ச நிலைக்குச் சென்று பின் அது யாழ்ப்பாணத்தையே போத்துக்கேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. போத்துக்கேயரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பானது சமய-சமூக ரீதியில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ணியது. சைவ வழிபாட்டு மரபுகள், சடங்காசாரங்கள் என்பன அந்நியரால் தடுக்கப்பட்டன. இதனால் சைவ விசுவாசிகளிடம் தம் சமயத்தையும் தலங்களையும் அந்நியரிடம் விடக்கூடாது என்ற எண்ணம் தலைதூக்க அவை சிறுசிறு புகழ்ச்சிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் தோற்றங் கண்டன.

(ஆ) யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்தில் சிறந்த பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்கள் தமிழையும் சைவத்தையும் சிறப்புடன் ஆதரித்து வளர்த்தனர். அதனால் அக்காலப் புலவர்கள் மன்னரையும் புகழ்ந்து பாடினர். மன்னர்கள் புலவர்களாக இருந்தும் தமிழை வளர்த்தனர். ஆனால் போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அந்நிய நாட்டினர் ஆட்சி புரிந்தமையினால் அது தமிழ்ப் புலவர்களின் மனநிலையில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ண, அவர்கள் கடவுளைப் பாட முற்பட்டனர். மக்களையும் பொருள்வசதி படைத்த புரவலர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டும் சிலர் பிரபந்தங்களைப் பாடினர்.

(இ) போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கைக்கு வந்த நோக்கங்களில் முக்கியமானது மதம் பரப்புதலாகும். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட கீழைத்தேச நாடுகளைக் கைப்பற்றிய இவர்கள் வர்த்தகத்தையும் மதம் பரப்புதலையும் நோக்கமாகக் கொண்டு தமது நடவடிக்கைகளைச் செவ்வனே செய்து வந்தனர். அடிநிலை மக்களை இலகுவில் மதம் மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்த அந்நியர்கள் சுதேச மொழியில் இலகு நடையில் கிறிஸ்தவமதம் சார்பான கருத்துக்களை மக்களிடம் விதைத்தனர். இதற்கென அவர்கள் தெரிவு செய்த இலக்கிய வடிவம் ‘பிரபந்தம்’ ஆகும்.

(ஈ) அந்நியர்கள் தமது மதப்பிரச்சாரத்துக்காக தெரிந்தெடுத்த இலக்கிய வடிவமான பிரபந்தத்தையே சைவப் புலவர்களும் எதிர்ப் பிரச்சாரத்துக்குத் தெரிவு செய்தனர். அகத்திணை மரபில் பின்பற்றப் பட்டு வந்த காதல், தூது, போன்றவற்றை இறையியலுடன் இணைத்துப்பாடி மக்களைச் சைவ பக்தி என்ற வட்டத்துக்குள் மறுபடியும் கொண்டுவருவது இவர்களின் நோக்கமாக இருந்தமையினால் சித்திரவேலாயுதர் காதல், கிள்ளைவிடுதூது போன்ற சிற்றிலக்கியங்களைப் பாடினர்.

3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் பண்புகள்

ஈழநாட்டில் பாரம்பரியமாக மக்களிடையே நிலவி வந்த உயரிய ஒழுக்கங்கள் பல போத்துக்கேயர்-ஓல்லாந்தரின் வருகையுன் இழக்கப்பட்டன. உயர் இலக்கண, இலக்கிய, சமய கல்விகள் மறைமுகமாகக் கற்க-கற்பிக்க வேண்டிய சூழல் உருவானது. கிறிஸ்த்தவம் போதிக்கப்பட்ட இடங்களாகப் பாடசாலைகள் மாற்றியமைக்கப் பட்டன. பின்னையநாளில் ஒல்லாந்தர் சற்று நெகிழ்வுப் போக்குடன் இருந்தமையினால் சைவசமயம் சார்பான இலக்கியங்களும் தோன்ற வழியேற்பட்டது.

போத்துக்கேயர் காலத்துக்குரியதான மூன்று நூல்களுமே கிறிஸ்தவ மதச்சார்புடன் காணப்பட்ட நிலையில் ‘ஞானப்பள்ளு’ ஈழத்து இலக்கிய மரபில் இருந்து விடுபட்டு உரோமபுரியையும் ஜெருசலத்தையும் விதந்து பாடும் தன்மையுடன் விளங்குகின்றமை சுட்டத்தக்கது. இதன்மூலம் கிறிஸ்து புகழை தமிழ்க் கிறிஸ்தவர் மத்தியில் நிலைநாட்ட ஞானப்பள்ளு பயன்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அம்மானை வடிவினைத் தொட்டுக்காட்ட மணிவாசகர் அதனையே பாட, அதில் சிறு மாறுபாட்டுடன் தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார் போத்துக்கேயர் காலத்தில் ஆர்ச்யாகப்பர் அம்மானையைப் பாடினார். பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் திருச்செல்வர் அம்மானை பாடிக் கிறிஸ்தவ மதப் பெருமைகளை நிலைநிறுத்தினார்.

விரதமகிமைகளைக் கூறும் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் போன்றனவும் தத்தம் ஊர்களிலுள்ள தலங்களை முன்னிலைப் படுத்தும் நூல்களும் பாடப்பட்டன. வட்டுக்கோட்டை கணபதிஐயர், இணுவில் சின்னத்தம்பிப் புலவர் போன்றோர் இத்தகைய இயல்புகளுடன் கூடிய மண்வாசனை இலக்கியங்களைப் படைத்தனர். இது இவ்வாறிருக்க மாதகல் மயில்வாகனப் புலவர் காசி, சிதம்பரம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்து மீண்டபின் அவைபற்றிப் பிரபந்தங்களைப் பாடினார்.

தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறும் நூலாகப் பாடப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் உள்@ர் பிரபுத்துவ முறைமை உயர்த்தப்பட்டு பிரபுக்கள் பாட்டுடைத் தலைவர்களாக மாறும் நிலை உருவானது. கரவைவேலன்கோவை, தண்டிகை கனகராயன் பள்ளு(5) போன்ற இலக்கியங்களினை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

இராசமுறை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, கைலாயமாலை முதலிய முன்னைய நூல்களின் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து, தன்னுடைய காலக் கர்ணபரம்பரைக் கதைகளையும் இணைத்து வசனநடையில் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யினை மாதகல் மயில்வாகனப் புலவர் பாடியுள்ளார்.(6) இதேவேளை சாதாரண மக்களுக்கான செய்திகள் பல கூத்து, நாடகம் என்ற வடிவங்களினூடே மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கிய வடிவமானது பிரபந்தம், காவியம், உரைநடை(வசனம்), நாடகம், கூத்து போன்ற பல தரங்களுக்கு உட்பட்டிருந்தது. பிரபந்தங்கள் சமயச் சார்புடையனவாயும் தமிழகப் பிரபந்தங்களுடன் வடிவில் ஒத்துப் போவதாகவும் அமைந்திருந்தன. பொதுவாக எதுகை, மோனை, யாப்பு முதலானவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றபோது கவித்துவம் நழுவிவிடுவதும் உண்டு.(7) இத்தகைய நழுவலை இவ் இலக்கியங்களில் காணமுடிகின்றது.

வௌ;வேறு சமூகநிலைப்பட்ட மக்களைக் கொண்ட சூழலில் இலக்கியம் படைக்க முற்படுகின்ற போது, குறிப்பாக பிரச்சார இலக்கியங்களை படைக்கின்ற போது, அவரவர் மொழியில் அவர்களுக்கு இலகுவில் புரியும்படி இலக்கியங்களை படைப்பது அவசியமாகின்றது. இந்த உண்மையை புரிந்து போர்த்துக்கேய ஒல்லாந்தர்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் யமகம், திரிபு முதலிய சொல்லணிகளின் கையாட்சியையும் இக்கால இலக்கியங்களில் பரக்கக் காணக்கூடியதாகவுள்ளது.

3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…

அ. நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

காலம்: 1761-1780 வரை
பின்னணி: தொன்பிலிப்பு வில்வராச முதலியாரின் மகன்
அன்னை வழியில் செகராச சேகரன் மரபில் வந்தவர்.
திறமை: சிறு வயதிலேயே கல்வியாற்றல் மிக்கவர்.
‘பொன்பூச் சொரியும்…” என்ற பாடல் மூலம் சிறுவனாகக்
-கவியுலகில் கால் பதித்தவர்.
தந்தையால் எழுத முடியாமல் நிறுத்தப்பட்ட நூலை எழுதி
-முடித்தவர்.
பாராட்டு: பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இவரை
‘ஈழத்து இலக்கிய வழிக்கு ஊற்று’ எனப் புகழ்ந்துள்ளார்.
நூல்கள்: பறாளை வினாயகர் பள்ளு
கரவை வேலன் கோவை
கல்வளை அந்தாதி
மறைசை அந்தாதி

ஆ. அரசகேசரிப் புலவர்

காலம்: யாழ்ப்பாண மன்னர் கால இறுதி
பின்னணி: 8ஆம் பரராசசேகரனின் சகோதரன்
நாயன்மார்க்கட்டில் வசித்தவர்.
நீர்வேலியை ஆட்சி புரிந்தவர்
திறமை: தமிழ்-வடமொழிப் பண்டித்தியம்
நூல்: இரகுவம்சம்(மொழிபெயர்ப்பு)
தட்சிணகைலாய புராணத்தையும் இவரே எழுதினார் என்பர். எனினும் இது ஆய்வுக்குரியது.


இ. மாதகல் மயில்வாகனப் புலவர்

காலம்: 1779-1816 வரை
பின்னணி: தந்தை-சுப்பிரமணியன்
கூலங்கைத் தம்பிரானிடம் கற்றவர்.
சிறப்பு: காசி, சிதம்பரம் எனத் தலயாத்திரை செய்தவர்.
நூல்கள்: புலியூர் அந்தாதி
காசியாத்திரை விளக்கம்
யாழ்ப்பாண வைபவமாலை
ஞானலங்கார ரூப நாடகம்




அடிக்குறிப்பு

1. சிவத்தம்பி.கா, ஈழத்தில் தமிழ் இலக்கியம், பக்20
2. சிவத்தம்பி.கா, தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், பக்39
3. நடராசா.எவ்.எக்ஸ்.சி, மட்டக்களப்பு மாண்மீயம், பக்66
4. குணராசா.க, ஈழத்தவர் வரலாறு, பதிப்பு-2, பக்88-89
5. ஜம்புலிங்கம்பிள்ளை.சே.வே, தண்டிகை கனகராயர் பள்ளு-1932
6. நடராசா.எவ்.எக்ஸ்.சி, ஈழத்தமிழ் நூல்வரலாறு, பதிப்பு-2, பக்19
7. சிவலிங்கராசா.எஸ், ஈழத்து இலக்கியச் செல்நெறி, பதிப்பு-2, பக்63

இயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் மேனாட்டாராட்சியில் ஆங்கிலேயராட்சியே பெரும் புரட்சி செய்ததென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரித்தானியர் ஆட்சியும் கத்தோலிக்க மதமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ண, அதன்விளைவாக தமிழ் இலக்கியமும் நவீனமயவாக்கத்துக்குள் படிப்படியாக உள்வாங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டென்ற இவ் இலக்கியப் பயில் நெறியானது விரிந்து பரந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு, மூன்று தசாப்தங்களினையும் தன்னகத்தே கொண்டு, பல புதுமைகளைச் செய்து தமிழிலக்கியத்தில் மாற்றங்களினை உண்டுபண்ணியதுடன் பிற்காலத்தில் ‘நவீனத்துவம்’ என்ற செல்நெறியில் தன்னையும் இணைத்துப் புதுமை படைக்க வழிகோலியது.

“தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத் தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை விளங்கிக் கொள்வதற்கும் அதனைத் தமிழர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும், மேனாட்டு அணுகுமுறைகளையும் கைக்கொண்டு தொழிற்பட்ட ‘உருவாக்க காலம்’ என்ற வகையில், இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றெழுது நெறிகள், தமிழிலே இப்பாடத்தின் அணுகுமுறையில் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.”(1)

எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறுவது இவ்விடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இவ்வகையில் 19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஓர் மாறுங்காலப் பிரிவாக நின்று பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டிய வகையிலும் அவற்றுக்கான அத்திபாரமாக இருந்த நிலையிலும் ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்கின்றது.

ஆங்கிலேய நேரடித் தொடர்பானது தமிழ்ச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப பின்வரும் மூன்று வழிகளில் துணைபுரிந்தது.


1. தமிழ்ச் சமூகத்தின் தனித்துவம்
2. தமிழர்களை ஒருங்கிணைத்தல்
3. தமிழ்ச் சமூக ஒருங்கமைப்பு


என்ற நிலையில் பாரிய மாற்றங்களினை உண்டுபண்ணியது. அதுவரைகாலமும் ஈழத்தறிஞர் பலர் தமிழகத்துடன் சிற்சில தொடர்புகளைக் கொண்டிருப்பினும் ‘தமிழர்’ என்ற பரந்துபட்ட நிலையில் ‘தமிழ்த்தேசியம்’ ஒருங்கிணைக்கப்பட்ட நிலையினை நாம் ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் ஈழத்து-தமிழக பணிகளிலிருந்து அறிய முடிகின்றது. இதற்குக் களம் அமைத்த 19ஆம் நூற்றாண்டானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிறப்புப்பெறுகின்றது.

4.1.இலக்கிய வகைகள்

19ஆம் நூற்றாண்டின் மாறுபட்ட சூழலும் அச்சியந்திர விருத்தியின் பன்முகப்பாடும் ஆங்கிலக்கல்வி விருத்தியும் திண்ணைக்கல்வி முறைகளினைப் பாடசாலைக் கல்வியாக மாற்றியமைத்தன. நாடு முழுவதையும் ஒரே அரசு ஆட்சி புரிந்தமையானது புதுமையான கருத்துக்களுக்கு முதன்மையளிப்பதாக இருந்தது. இதனால் இலக்கியங்களிலும் புதுமைக்கான தேடல் இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்கள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாக விளங்கக் காணலாம்.



1. செய்யுள் இலக்கியம்


அ. சமயச் சார்புடையன
இளவசப் புராணம்
றகுலமலைக் குறவஞ்சி
முகைதீன் புராணம்

ஆ. மக்கள் சார்புடையன
கனகி புராணம்
கோட்டுப் புராணம்
தால புராணம் போன்றன.

இ. நவீனத்தினூடே பழமை பேணுவன
தத்தைவிடு தூது
சுவதேச கும்மி
தனிப் பாடல்கள் சில போன்றன.



2. உரைநடை இலக்கியம்


அ. பழைய உரைநடை காரர் நடையில் அமைந்த நூல்கள்.
ஆ. நாவல்கள்
இ. சமயச் சார்புடைய நூல்கள்
ஈ . பாடநூல்கள்
உ. நாடகங்கள்
ஊ. பத்திரிகைகள் போன்றன.


3. பன்முக வளர்ச்சி

அ. பத்திரிகைகள்
ஆ. பதிப்பு முயற்சிகள்
இ. அகராதி முயற்சிகள்
ஈ . மொழி பெயர்ப்பு
உ. இலக்கண நூல்களின் உருவாக்கம்
ஊ. புலவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுதல்
எ. அரசியல் சார்பாக எழுதுதல் என நீண்டு செல்லும்

4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்

கி.பி. 1835ஆம் ஆண்டில் அப்போது மகா தேசாதிபதியாக இருந்த சேர் “சார்ள்ஸ் மெக்காஃவ்” என்பவரினால் ‘அச்சுச்சுதந்திரம்’(2) இந்தியா எங்கணும் வழங்கப்பட்ட பின்னர் ஈழத்திலும் பல அச்சுச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு சுதேசிகளினால் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்ட பின்னர் அச்சுக்கலையின் செயற்பாடும் விரிவடையத் தொடங்கியது. 1849இல் ஆறுமுக நாவலர் அவர்கள் நல்லூரில் அச்சியந்திர சாலையை நிறுவி(3) ஈழத்தவரின் இலக்கியச் சாதனைகள் பலவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அச்சியந்திர விருத்தியானது அதிசயிக்கத்தக்க வகையில் ஈழத்தில் பெரும் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தியது.

அ. பத்திரிகைத் துறைவளர்ச்சி
ஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்
இ. பதிப்பு முயற்சி
ஈ . புத்தாக்க முயற்சி
உ. மொழிபெயர்ப்பும் ஆய்வுமுயற்சியும்

போன்ற பல துறைகளும் பாரியளவில் வளர்சிசியடைந்தன.



அ. பத்திரிகைத்துறையின் வளர்ச்சி

19ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.

அக்கால ஊடகத்துறையில் அரசியலும், சமயமும், சமூகமும் பெற்றளவு செல்வாக்கினை அறிவியல் பெறவில்லை என்பது வருந்தப்பட வேண்டிய விடயமே. அமெரிக்க மிசநெறிமார் ஆரம்பித்த ‘உதயதாரகை’ (அழசniபெ ளவயச) 1841இல் வெளியான முதல் பத்திரிகை ஆகும். ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆறுமுகநாவலரின் துணையுடன் உதயதாரகை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. உதயதாரகையின் பின்னர் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. 1841-1900ஆம் ஆண்டு வரை வெளிவந்த சில குறிப்பிடத்தக்க பத்திரிகைகள், சஞ்சிகைகளினை இவ் அட்டவணையில் நோக்குக.

சஞ்சிகையின் பெயர் விடயம் ஆண்டு

உதயதாரகை கிறிஸ்தவபிரச்சாரம் 1841
உதயாதித்தன் இந்துசமய பிரச்சாரம் 1841
உரைகல்லு கத்தோலிக்கம் 1845
இலங்கை நேசன் பொது 1848
வித்தியா தர்ப்பணம் பொது 1853
தின வர்த்தமானி செய்தி,அறிவியல் 1855
பாலியர் நேசன் சிறுவர் இதழ் 1859
பிறீமன் பொது 1862
இலங்காபிமானி சமயம், பொது 1863
புதினாதிபதி செய்தி 1870
யாழ்ப்பாணச் செய்தி அரசியல், சமயம், அறிவு 1871
உதயபானு சைவம் 1880
சைவசம்போதினி சைவம் 1881
விஞ்ஞானவர்த்தனி சைவம் 1882
முஸ்லீம்நேசன் முஸ்லீம் முன்னேற்றம் 1882
இஸ்லாம்மித்திரன் இஸ்லாம் 1893
மாணவன் கிறிஸ்தவம் 1896
முஸ்லீம் பாதுகாவலன் முஸ்லீம் முன்னேற்றம் 1900
திராவிடகோகிலம் சைவம் 1900
சத்தியவேத பாதுகாவலன் சைவம் 1901


(-நூற்பட்டியலாக்க உதவி-‘ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்’ வல்வை ந.அனந்தராஜ்-)

அறிவியல் சார் அம்சங்கள் குறைவாக இருப்பினும், பொதுவாக இக்காலப்பகுதியில் எழுந்த பத்திரிகைகளில் ஒருவிதமான பன்முகப்பாட்டைக் காணமுடிகின்றமை விசேடமானது. எளிமையான உரைநடை, புதமையாக்கம், உரைநடையில் நெகிழ்ச்சி, வசன அமைப்பில் மாற்றம் போன்ற தன்மைகளினையும் இப்பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தமையினால் பிற்கால உரைஇலக்கிய வளர்ச்சிக்கும் வழிசமைத்த சாதனமாக விளங்குகின்றன.



ஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்

19ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் வளர்ந்த துறைகளுள் ஒன்றாக உரைநடை இலக்கியமும் அமைகின்றது. செய்யுள் இலக்கியத்தின் இடத்தினை வசனநடை கைப்பற்றியமையே இக்கால இலக்கியத்தின் வெற்றியாகும். அரசநிர்வாகம், மதப்பிரச்சாரம், நவீனகல்விமுறை, பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற செயற்பாடுகள் காரணமாக வசன இலக்கியங்கள் பல எழுந்தன.

அச்சியந்திர விருத்தி, ஆங்கிலக்கல்வி விருத்தி, மொழிபெயர்ப்பு, துண்டுப்பிரசுரப் பயன்பாடு, பாடப்புத்தக அறிமுகம் போன்றனவும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன. சுதேசிகள் புதிய இலக்கியங்களினை எளிமையுடன் படைக்க முற்பட்டமையும் பண்டைய ஏட்டுச் சுவடிகள் நூலுருப் பெற்றமையும் எனப் பல்வேறு புறக் காரணிகளும் ஈழத்தில் வசனநடை வளர்ச்சிக்கான உந்துசக்கியாகச் செயற்பட்டன.

செய்யுள்களை உரைநடையில் எழுதுதல், சமயச்சார்பான உரைநடை ஆக்கங்கள், நாவல், நாடகம், தனித்தமிழ் இலக்கியங்களின் தோற்றம், புலவர்களையும் பழைய நூல்களையும் ஆய்வுக்குட்படுத்தியமை எனப்பல புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டமையாலும் உரைநடை இலக்கியம் புதுமையான மெருகுடன் செல்லத் தலைப்பட்டது.

ஆறுமுக நாலலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை முதலியோரின் பங்களிப்பு இத்துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என நாவலர் போற்றப் பட்டமையும், சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புரையும் இவற்றுக்குத் தக்க சான்றுகளாம்.



இ. பதிப்பு முயற்சி

19ஆம் நூற்றாண்டில் தான் ஈழத்தில் மிகச்சிறந்த பதிப்பாசிரியர்கள் தோன்றினர். பண்டைத்தமிழ் நூல்கள் பல அழிந்தொழிந்து போகாமல், பதிப்பு முயற்சியில் தமிழகத்துக்கு வழிகாட்டும் வகையில் ஈழத்தறிஞர்களின் பணிகள் அமைந்தன. ‘நாவலர் பதிப்பு’ சுத்தத் தமிழில் அமைந்து காணப்பட்டதனால் அவரது பதிப்புக்கு ‘மவுசு’ கூடுதலாக இருந்தது.

நாவலரின் பின்னர் சி.வை.தா, ச.சரவணமுத்துப்பிள்ளை போன்ற பலர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். சி.வை.தா. வின் பதிப்பு முயற்சிக்குச் சிறப்பான ஓர் இடமுண்டு. தமிழகத்தில் முன்னின்றுழைத்த உ.வே. சாமிநாதஐயருக்கு வழிகாட்டியாக இருந்த பெருமையும் இவரைச் சாரும்.

தொல்காப்பியம், சேனாவரையம் (1868), வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும்(1881), இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரர் உரையும்(1883), தணிகைப்புராணம்(1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் பேராசிரியமும்(1885), கலித்தொகைப் பதிப்பு முதலியவற்றை இனிதே பதிப்பித்த பதிப்புப் பேராசான் சி.வை.தா. அவர்கள், நிறைய ஏட்டுப் பிரதிகளினையும் தேடித் தொகுத்துப் பதிப்பித்தும் வெளியிட்டார்.(4) ஏட்டுப்பிரதிகளைத் தந்த தமிழன்பர்கள் பற்றிய குறிப்புக்களையும், அவர்களுக்கான நன்றியறிதலையும் தமது பதிப்புரைகளில் பொறித்து வைத்தார்.

தமிழின் தொன்மை தேடும் முயற்சிக்கு சி.வை.தா. பல ஆதாரங்களினை முன்வைத்துள்ளார். ‘திரமிள’ என்ற ஆரியச்சொல் ‘தமிழ்’ எனத் திரிந்ததென்றும், ‘சங்கதமொழி’யே தமிழின் தாய்மொழி என்று மொழிப் பயிற்சியுடைய மேலைத்தேச அறிஞர்கள் தெரிவித்த காலத்தில்: ‘எல்லீஸ்’( கு. று. நுடடளை – 1819 ) போன்றோர், ‘இந்தோ-ஐரோ மொழியிலிருந்து திராவிட மொழிகள் வேறுபட்டுச் செல்கின்றன’ என்ற கருத்தை முன்வைத்தனர். ‘தமிழ்மொழியிலே திராவிடத் தாய்மொழியின் பண்டைய கூறுகள் பல காப்பாற்றப்பட்டிருக்கின்றன.’(5) என்று ‘கால்டுவெல்’ தனது ஒப்பிலக்கண நூலில் கூறியுள்ளார். கால்டுவெல்லின் ஆதாரங்களினை எடுத்து சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் ‘தனக்கிணையில்லாப் பாசை தமிழ்’ என்று நிறுவிக் காட்டினார்.

இவ்வாறு ஈழத்தில் மரபுவழி, நவீன நிறுவனவழி என இருவழிக் கல்வி மூலம் புகழ்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்பு முயற்சியினைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை ஈழத்தில் பழந்தமிழ் நூல்கள் பல ஆர்வமுள்ள தமிழறிஞர் பலரால் பதிப்பிக்கப்பட்டன.



ஈ. புத்தாக்க முயற்சிகள்

19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் புதுமையான இலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக: பாடநூல்கள், அகராதி முயற்சிகள், நவீன நாடகங்கள், அறிவியல்சார் அம்சங்;களை உள்ளடக்கிய நூல்கள் போன்றன இவற்றுள் அடங்கும். இக்காலத்தில் கல்விப்பணிகள் நிறுவன மயப்படுத்தப் பட்டன. பாடசாலைகளுக்கென ‘பாடத்திட்ட வரைபு’ அறிமுகமானது. பாடநூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. பாரம்பரியமாக நிலவிவந்த மொழி, இலக்கண, சமயக் கல்வியுடன் இணைந்த நிலையில் நவீன அறிவியல் சார் கல்வியும் போதிக்கப்பட்டது. அறநூல்களுடன் வசன நூல்களும் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப் பட்டன.

ஆறுமுக நாவலர் திருத்தமாகவும் செம்மையாகவும் வயதுக்கேற்ற முறையிலும் பாலர் பாடங்களை வெளியிட்டு கல்வியியற் சிந்தனையில் சிறந்த தரத்தினைப்பெற வழிசெய்தார். 1849இல் அமெரிக்க மிசநெறிமார் ‘பாலகணிதம்’ என்ற நூலை வெளியிட்டனர்.(6)

அச்சியந்திர விருத்தியானது ‘அகராதி’களின் புதுமையான தோற்றத்துக்கு வழிபுரிந்தது. தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என மூன்று விதமான அகராதிகள் தோன்றின. “மானிப்பாய் அகராதி, தமிழ்ச் சொல்லகராதி, தமிழ்ப் பேரகராதி, இலக்கியச் சொல்லகராதி, சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழகராதி”(7) முதலிய தமிழ் அகராதிகளும், உவிஞ்சிலோ, பேர்சிவல் பாதிரிகள் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும் இக்காலப் பிரிவில் தோன்றின.

விசுவநாத பிள்ளை அவர்களின் தமிழ்-ஆங்கில அகராதி 1870இல் வெளிவந்ததைத் தொடர்ந்து கதிரவேற்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை முதலியோர் இணைந்து ‘கதிரவேற்பிள்ளை அகராதி’யை வெளியிட்டனர். பின்னர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்கள் ‘இலக்கியச் சொல்லகராதி’ ஒன்றினை வெளியிட்டார்.(8)

பேர்சிவல் பாதிரியாரின் தொகுப்பு நூலான ‘பழமொழி அகராதி’யும் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் ‘அபிதானகோசம்’ என்ற கலைக் களஞ்சியமும் வல்வை ச.வைத்திலிங்கம் பிள்ளையின் ‘சிந்தாமணி நிகண்டு’ம் இசை நாடகங்களும், விலாசங்களும் 19ஆம் நூற்றாண்டை அலங்கரித்தன. நாவலரின் தந்தையான ‘கந்தப்பிள்ளை’ பல நாடக நூல்களை எழுதினார் எனினும் அவற்றில் ஒன்றுதானும் இன்று கிடைத்தில. ஊசோன் பாலந்தை கதை, மோகனாங்கி, அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் போன்றனவும் இக்காலக் கதைநூல்களே. அமெரிக்க நாட்டவரான ‘டாக்டர்.கிறீன்’ அவர்களின் பங்களிப்பு ஈழத்து மருத்துவத் துறையில் காத்திரமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது. 1850இல் ‘ர்ரஅயn யுயெவழஅல’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்த இவர் மானிப்பாயில் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வைத்தியப் பணி புரிந்தார். ‘மருத்துவ அறிவியலின் தந்தை’ என ஈழத்தவரால் புகழப்பட்ட இவர் ‘உடற்கூற்று உளநலத் துறை’ என்ற நூலை மொழிபெயர்த்துத் தந்தார்.(9) இவருடைய வழியைப் பின்பற்றி தரமான நூல்களைத் தந்த பேராசிரியர்.வைத்திய கலாநிதி.அ.சின்னத்தம்பி அவர்களும் இவ்விடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே.



உ. மொழிபெயர்ப்பும் ஆய்வு முயற்சியும்

‘19ஆம் நூற்றாண்டினை ஈழத்துக்கே உரியது.’ என்று கூறும் வகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அரிச்சந்திர நாடகம், யாழ்ப்பாண வைபவமாலை, சிவஞானபோதம், சிவப்பிரகாசம், திருக்கோவையார், பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள் போன்ற பல நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. முத்துக்குமார சுவாமி, பிறிற்றோ போன்றோர் மொழிபெயர்ப்புத் துறையில் முன்னின்றுழைத்தனர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நாவலரால் ‘பைபிள்’ மொழிபெயர்க்கப் பட்டமை மகத்தான பணியாகும். அதன்பின் டாக்டர் கிறீன், கறோல் விசுவநாதபிள்ளை, தி;.த.சரவணமுத்துப்பிள்ளை போன்றோர் பல நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குப் புதுமெருகூட்டினர்.

இவ்வாறு 19ஆம் நூற்றாண்டிலேயே ஆய்வுப் பணிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம் பெற்றிருப்பினும், இருபதாம் நூற்றாண்டில் பேராசான் க.கைலாசபதியின்(1933-1982) வரவுடன்தான் அவற்றில் பன்முக வளர்ச்சியினை அவதானிக்க முடிகின்றதெனலாம்.

4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்

யாழ்ப்பாண நல்லூரில் கந்தர்-சிவகாமி தம்பதியரின் மகனாக ‘ஆறுமுகம்’ என்ற பிள்ளைத் திருநாமத்துடன் பிறந்து பின்னை நாளில் உலகம் போற்றும் நாவலராகத் திகழ்ந்த பேராளன் உதித்த பொன் நாள் 1822-12-18 ஆகும். இவர் சைவமும் தமிழும் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறந்த உரை ஆசான், உரைநடை வல்லாளர், பதிப்பாசிரியர், நல்லாசான், நாவன்மைப் பேச்சாளர், சைவ வாழ்வு வாழ்ந்த தண்ணளியான்.

நாவலர் அவர்கள் எழுதியும் பிரசுரித்தும் வெளியிட்ட நூல்கள் 73, தாமே எழுதிய நூல்கள் உட்பட உரைநடை நூல்கள் எனப்பட்டன 22, இவற்றுள் உரைநடை ஆற்றலுக்கு உன்னத எடுத்துக் காட்டாய் கொள்ளத் தக்கன 10, அவை 1ஆம், 2ஆம், ; பால பாடங்கள், பெரிய புராண வசனம், சைவ சூசன பரிகாரம், யாழ்ப்பாணச் சமயநிலை, திருவிளையாடற் புராண வசனம், நல்லூர் கந்தசுவாமி கோயில், பெரிய புராண சூசனம், போலியருட்பா மறுப்பு, நாவலர் பிரபந்தத் திரட்டு(10) ஆகியனவாகும்.

நாவலர் தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகப் பாடசாலைகள் அமைத்தும் அருந் தொண்டாற்றியுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அமைத்து இலவசக் கல்வி சொல்லிக் கொடுத்துள்ளார். அச்சியந்திர சாலைகளை அமைத்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவருடைய இலக்கியப் பணிகள் காலச் சூழலோடும் சமயப் பணிகளோடும் இணைந்தவை. தற்கால உரைநடையின் தந்தையாக விளங்கும் இவர் ‘வசனநடை கைவந்த வல்லாளர்’(11) எனப் பாராட்டப் படுகின்றார். இலக்கிய உரை நடையை வளர்த்து, இலக்கியப் பணி புரிந்தவர்.

இவருடைய பதிப்புத் துறை சார்ந்த பணிகள் மிகவும் பலம் வாய்ந்தவை. இவர் பரிசோதித்துப் பதிப்பித்த நூல்கள் இவருடைய இலக்கியப் பணியின் குறிகாட்டியாய் அமைவன. சூடாமணி நிகண்டு, நன்னூல் விருத்தியுரை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, சிதம்பர மும்மணிக் கோவை, கந்தபுராணம், பெரியபுராணம், திருச்சிற்றம்பலக்கோவையுரை, முதலான 35க்கு மேற்பட்ட நூல்கள் இவர் பரிசோதித்துப் பதிப்பித்தவை ஆகும். இவர் உரை எழுதி வெளியிட்ட நூல்களும் இவருடைய இலக்கியப் பணியின் சிறப்புக்குச் சான்று. திருமுருகாற்றுப் படை, கோயிற்புராணம், ஆத்திசூடி, நல்வழி, நன்னெறி, கொன்றை வேந்தன் போன்றனவற்றை சான்றாகக் காட்டலாம்.(12)

சொற்பொழிவுகள் மூலமும் இலக்கியப் பணியாற்றியவர். நாவன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். இதனால் இவருக்குத் “திருவாவடுதுறை ஆதீனம்”; “நாவலர்” என்ற சிறப்புப் பட்டம் சூட்டியது. இவருடைய சொற்பொழிவு முயற்சி பிற்காலத்தில பலரைத் தூண்டியது. விவாதங்கள் வழக்காடு மன்றங்கள் போன்றனவற்றின் அடிப்படையாகியது.

இவருடைய உரை நூல்கள் அக்காலத்தில் கொடுமுடியாய் விளங்கின. பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், பால பாடங்கள், சைவ வினா விடைகள், கட்டுரைகள் போன்றன குறிப்பிடத் தக்கவை. சமய உணர்ச்சியூட்டக் கூடிய நூல்களை எழுத்துப்பிழை, வசனப்பிழை, இல்லாது இலகு உரைநடையில் எழுதி வெளியிட்டும் அச்சிலும் ஏட்டுப் பிரதிகளில் உள்ள நூல்களைப் பரிசோதித்தும் வெளியிட்டார்.

பொருள்த் தெளிவை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததனால் சொற்களை வலிந்து கொள்ளாது சொல்லும் பொருளும் திரியாதபடி பொருள் இனிது விளங்க உரைகளை எழுதினார். இவருடைய வசனங்கள் ஒன்றுடனொன்று தொடர்புற்று தேவையற்ற சொற்களும் அடைகளும் இல்லாமல் தர்க்க ரீதியாக அமைந்திருந்தன.

தர்க்க முறையிலும் சிலேடையிலும் எழுதும் வன்மை அவருக்கு இயல்பாகவே இருந்தது. தமது கொள்கைகளை நிலைநாட்டும் போதும் பிறர் கோட்பாட்டை மறுக்கும் போதும் மிடுக்கு நடையில் தர்க்க ரீதியாக வசனங்கள் அமையும்.(13) வெறும் அடைமொழிகளைச் சேராதும் அளபெடைகளை கூட்டாதும் அவர் உரைநடைகளைக் கையாண்ட பொழுதும் வசனங்கள் ஓசை நயம் பொருந்தியனவாய் படிக்கும் போது தட்டுத் தடையின்றிச் செல்லும் எதுகை மோனைச் சொற்களை வழங்கியும் ஏகாரத்தினைப் பலவிடங்களில் நயம்படச் சேர்த்தும் சாரியைகளை இன்பம் பயக்கப் புகுத்தியும் உரைநடைகளை அமைத்தார்.(14)

நாவலர் இன்றியமையாத இடங்களில் வடசொற்களைத் தமிழ் மரபுக்கு ஏற்பக் கையாண்டுள்ளார். ஆனால் அவ் வடசொற்களை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடிகின்றமை சிறப்பானது. அத்துடன் அக்கால வழக்கிலிருந்த கச்சேரி, கமிசனர், துரை போன்ற மேலை நாட்டுச் சொற்களையும் தெளிவு கருதிப் பயன்படுத்தியிருந்தார்.

குறியீட்டு இலக்கணத்தை பொருள்த் தெளிவும் விரைவும் கருதி அதனை முழுவதும் தழுவிக் கொண்டார். உறுப்பிசைக்குறி, தொடரிசைக் குறி, விளக்கக் குறி, முற்றுப் புள்ளி, வினாவிசைக் குறி, மெய்ப்பாட்டிசைக் குறி, அனுதாபக் குறி முதலியவற்றைப் பயன்படுத்தினார். நாவலர் கற்றோருக்கும் மற்றோருக்கும் விளங்கும் வகையில் தமிழ் உரைநடையை எழுதினார்.(15) அவர் எழுதிய பெரியபுராண சூசனம் பண்டிதர்களுக்கு எழுதப் பட்டது.

நாவலரைப் போல முன்னும் பின்னும் பல்துறை சார் தமிழ் வித்துவான்கள் இல்லை எனலாம். 1879 இல் நாவலர் இறந்த போது தமிழ் உலகு கதறிக் கண்ணீர் வடித்து மெய்யுருகியது. அந்த இரங்கற் கூட்டத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதி வாசித்த “நல்லை நகர் நாவலர் பிறந்திடரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?” என்ற வரிகள் நாவலரின் புகழை என்றும் எடுத்துரைப்பன.

4.4. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களின் சிறப்பியல்புகள். (பண்புகள்)

19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஓர் திருப்பு மையமாக, பொற்காலமாக விளங்குகின்றமையால் தனித்துவமான முறையில் அக்காலம் ஈழத்துக்கே உரியதாக விளங்குகின்றது. அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களினை நுணுகி ஆராய்வோர் அவ்விலக்கியங்களினூடே அக்காலத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமய, பண்பாட்டம்சங்களினை தெளிவாக அறிந்து கொள்வர்.

முன்னைய காலத்து இலக்கியங்களில் இடம் பிடித்த சமயமே ஆங்கிலேயர் காலத்திலும் இலக்கியப் பொருளாக நின்று தனியாட்சி செலுத்தியது என்று கூறின் மிகையாகா. மேலைத்தேசத்துச் சமயம் இலங்கையிலும் காலூன்ற முற்பட்டதன் விளைவாக ஏற்பட்ட விழிப்புணர்வு இலக்கிய நெறியின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

கதிர்காமப்புராணம், திருகோணாச்சலப் புராணம், நல்லூர் கந்தசுவாமி கிள்ளைவிடு தூது, வல்வைக் கலித்துறை, கதிரேசர் பதிகம், சுன்னாகம் ஐயனாரஞ்சல், நல்லை வெண்பா, போன்ற தலச் சார்புடைய நூல்களும் எண்ணற்ற சிறு புராணங்களும் மறைசைக் கலம்பகம், யேசுநாதர் பிள்ளைத்தமிழ், அஞ்ஞானக் கும்மி, பஞ்ச பட்சித் தூது, போன்ற நூல்களும் மரபிலக்கிய வடிவங்களுக்கு மீளுருக் கொடுத்துப் பாடியனவாகவுள்ளன.(16)

சமயத்தினை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவ மதக் கண்டனம், சிவதூசன கண்டனம் போன்றனவும் பல்கிப்பெருகின. தமது வித்துவச் செருக்கினைப் புலப்படுத்தச் சிலர் பாடல்களைப் பாடினர் போன்றும் தெரிகின்றது.

சமயக்கல்வி விருத்தியும், மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றமும் இக்காலத்தின் இலக்கியங்களில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணியிருந்தன. இக்காலப் புலவர்கள் உலகியல் சார்புடைய நூல்களை எழுதியபோது தம்மை ஆதரித்த புரவலரை அல்லது பிரபுக்களைப் பாடிய போதிலும் ஆங்கிலேயரைப் போற்றிப் பாடியதாக ஆதாரங்கள் இல்லை.

அகராதி முயற்சிகள், நிகண்டு இலக்கியங்களின் தோற்றம் என்பனவும் ஆய்வு முயற்சிகளும் மொழிபெயர்ப்பு முயற்சியும் ஈழத்து இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் பின் புதிய மெருகுடன் வளரத் துணைபுரிந்தன. இதற்கு அச்சியந்திர-ஆங்கிலக் கல்வி விருத்திகள் காரணமாக அமைந்தன.(17)

அச்சியந்திர விருத்தியின் காரணமாக பதிப்புத்துறை துரிதமாக முன்னேறி வளர, மறுபுறம் பத்திரிகை தோன்றி புதிய இலக்கியங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. சோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், தருக்கம், வைத்தியம், போன்ற துறைகள் ஆங்கிலேயர் காலத்தில் வளர அவை சார்புடைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்றனவும் காரணமாக அமைந்தன.(18)

அக்காலத்தில் பெரும் புரட்சி செய்த நூல்களுள் ஒன்றாக ‘கனகிபுராணம்’ விளங்குகின்றது. சமூகச் சீரழிவைச் சாடுவதே இப்புராணத்தின் நோக்கமாகும். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையரினால் ‘தாசி’யான கனகியைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இப்புராணத்தில் பிரபுக்கள், அறிஞர்கள் முதலியோரின் பெயர் சுட்டி அவர்களின் சீர்கேடு சொல்லப்பட்டிருக்கின்றது.(19)

“…நன்னியர் உறியறுத்தார் நடுவிலார் பூண்டுகொண்டார்
சின்னியோ டொன்றி விட்டார் செங்கை ஒன்றிலாச் சொத்தி
முன்னுளோர் கதையைக் கேட்டு முத்தரும் அகஞ் சலித்தார்
நன்னிய கனகி பாடும் நடுராசி ஆச்சுதன்றே

நட்டுவனொருவனாலே நாடகசாலை வந்தாள்
செட்டியில் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார்
மட்டுவில் குருக்கள் பட்டார் கொக்குவிற் சுப்பன் பட்டான்
மட்டிகள் இவரைப்போலப் பட்டவர் பலபோர் அறிந்தோ”

என அங்கதமாக எழுதப்பட்ட வரிகளின் மூலம் கனகிபுராணத்தில் பிரபுக்களின் ஒழுக்கச் சீர்கேடுகள் சுட்டப்பட்டன. சிலேடை, யமகம், திரிபு, மடக்கு போன்ற சொல்லணிகளும் அக்காலத்தில் எழுந்த தனிப் பாடல்களில் ஆங்காங்கே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

ஒருவிதமான மனத்திருப்தியை நோக்கமாகக் கொண்டும் அக்காலப் புலவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர் போலத் தெரிகின்றது. மொழிபெயர்ப்பு நூல்களினைத் தொடர்ந்து தமிழில் ஆங்கிலம், வடமொழி போன்றவற்றின் கலப்பு அதிகரிக்க, மறுபுறத்தில் மேலைத்தேச மொழிக் கலப்பானது தமிழில் கலைச் சொற்களின் வருகைக்கும் காரணமாக அமைந்து விட்டது.

4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…

1. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

காலம்: 1899-1978
பின்னணி: மட்டக்களப்பைச் சேர்ந்தவர்
திறமை: மரபுவழித் தமிழ் அறிஞர்
பல பட்டங்கள் பெற்றவர்
சிறந்த கவிஞர்
சிறந்த பேச்சாளரும், ஆசிரிய கலாசாலை அதிபரும், வசனகர்த்தாவும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
உரைநடை நூல்கள் பலவற்றை எழுதினார்.
சிறப்பு: ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பாராட்டுப் பெற்றார்.
நூல்கள்: பகவத்கீதை வெண்பா
புலவர்மணி கவிதைகள்
மண்டூர்ப் பதிகம்
விபுலாநந்தர் மீட்சிப்பத்து
உள்ளதும் நல்லதும்.

2. யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர்

காலம்: 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
பின்னணி: இஸ்லாமிய அறிஞர்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
திறமை: சிறந்த தமிழ் மொழியறிஞர்
புலமையாளர்
நூல் முகைதீன் புராணம்-இது 2பாகம், 74படலம், 2983திருவிருத்தங்களுடன் இயற்கை வர்ணனை, அணிநலன் மிகுந்து விளங்குகின்றது.

3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

காலம்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி
பின்னணி: மட்டுவிலில் பிறந்தவர்
திறமை: மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின் மரபுவழித் தமிழறிஞராக இருந்தார்.
சிறப்பு: கம்பனைப் புகழ்ந்து பல கட்டுரைகள் எழுதினார்.
அகத்திணைக் கோட்பாட்டுக்கு விளக்கம் தந்தார்.
நூல்கள்: இலக்கியவழி
அத்வைத சிந்தனை
இன்னும்பல நூல்களும் கட்டுரைகளும்



4. தனிநாயகம் அடிகள்

காலம்: ஆங்கிலேயர் காலம்
திறமை: தமிழை இனியமொழி, ஆய்வுமொழி, உலகமொழி என நிறுவிக்காட்ட முயன்றார்.
உலகம் எங்கும் சுற்றிய தமிழ்த் தூதர்.
சங்க இலக்கிய ஆய்வின் தொடக்க கர்த்தா
சிறப்பு: ‘உலகத் தமிழாராய்ச்சி மையம்’ நிறுவினார்.
நூல்கள்: ஈழத்து இலக்கியத்தில் இவரது பணி காத்திரமானது. எண்ணற்ற நூல்களினை இயற்றி தூய தமிழில் வெளியிட்டு புரட்சி செய்தார்.

5. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்

பின்னணி: சுன்னாகத்தைச் சேர்ந்தவர்
மரபுவழித் தமிழறிஞர்
சிறப்பு: நாவலரின் காவியப் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார்.
புலமை: இலக்கணம், மொழி, இலக்கியம், வடமொழிப் புலமை பெற்றிருந்தார்.
நூல்கள்: இராமோதந்திரம், மறைசைஅந்தாதியுரை, யாப்பெருங்கலப் பொழிப்புரை, இலக்கண சந்திரிகை, தமிழ்ப்புலவர் சரிதம், யாப்பெருங்கலக் காரிகை (பதிப்பு), சிவதோத்திரத் திரட்டு (பதிப்பு), இலக்கியச் சொல்லகராதி போன்றனவும் தனிப்பாடல்கள் பலவும் இயற்றிய இவர் ‘கதிரவேற்பிள்ளை அகராதி’ இயற்றிய ஆசிரியர் குழாமில் ஒருவராக இருந்தார்.




அடிக்குறிப்பு

1. சிவத்தம்பி.கா, தமிழில் இலக்கிய வரலாறு, இரண்டாம் பதிப்பு, பக்93
2. மேலது, பக்89
3. சிவலிங்கராஜா.எஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, இரண்டாம் பதிப்பு, பக்98
4. பூலோகசிங்கம்.பொ, தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர்களின் பெரு முயற்சிகள், மீள்பதிப்பு, பக்98-101
5. மேலது, பக்129-130
6. சிவலிங்கராஜா.எஸ், மே.கு.நூல், பக்104-105
7. நடராசா.எவ்.எக்ஸ்.சி, ஈழத்து தமிழ்நூல் வரலாறு, பக்26
8. சிவலிங்கராஜா.எஸ், மே.கு.நூல், பக்108
9. அனந்தராஜ்.ந, ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், பக்74-75
10. பூலோகசிங்கம்.பொ, மே.கு.நூல், பக்31-41
11. மேலது, பக்41
12. மேலது, பக்33-41
13. மனோகரன்.துரை, இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, பக்91
14. மேலது, பக்90
15. மேலது, பக்90
16. மேலது, பக்74-75
17. சிவலிங்கராசா.எஸ், மே.கு.நூல், பக்107-112
18. மேலது, பக்100
19. பூலோகசிங்கம்.பொ, மே.கு.நூல், பக்51

இயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி

ஆங்கிலேயர் காலப் பிற்பகுதியுடன் இணைந்து காணப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியச் செல்நெறி மிகவும் சிக்கலுக்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும். எனவே ஆய்வு வசதி கருதியும் மாணவர்களின் கற்றற் செயற்பாட்டின் இலகு கருதியும் இப்பெரும் பகுதியினைப் பின்வருமாறு சிறு அலகுகளாகப் பகுத்து ஆய்வுக்குட்படுத்துவது பயனுடைத்தாகும்.

5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை
5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
5.5. ஈழத்தில் தமிழில் திறனாய்வு வளர்ச்சி

5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை

ஈழத்து இலக்கிய வளர்ச்சியினை உற்று நோக்குவோர் நாட்டுக் கூத்தினையும் நாடகத்தையும் பிரித்து நோக்கியதாக அறியமுடியவில்லை. அவ்வாறு பிரித்து ஆய்வதும் பொருத்தமானதாக அமையாது. சிலர் நாட்டுக்கூத்தின் ஒருவகையே நாடகம் (1) என்பர். வேறுசிலர் நாட்டுக் கூத்தின் முதிர்ச்சியான தன்மையே நாடகம் (2) என்பர். நாட்டுக்கூத்தானது மக்களின் உணர்ச்சிகளை இசை, ஆடல், பாடல், உரையாடல் மூலம் வெளிக் கொண்டுவரப் பயன்பட்ட ஒரு உத்தியாகும். இது மாவட்டம், பிரதேசம் என்ற வகையில் பாரிய வேறுபாடுகளுடன் விளங்கியது. பிரதேசத்துக்குப் பிரதேசம் கூத்து மரபுகளும் வேறுபட்டிருந்தன.

மட்டக்களப்பில் :-மட்டக்களப்பில் வழங்கிவரும் கூத்து வகையினை வடமோடி, தென்மோடி, விலாசம் என மூன்றாக வகுப்பர். வடமோடியும் தென்மோடியுமே சிறப்பிடம் பெற்று விளங்கக் காணலாம். புராண-இதிகாசக் கதைகளின் தாக்கத்தினை வடமோடியிலும் இசைமரபைத் தென்மோடியிலும் காணக்கூடியதாக உள்ளது.(3)

மன்னாரில் :-மாதோட்டப்பாங்கு அல்லது தென்பாங்கு
யாழ்ப்பாணப்பாங்கு அல்லது வடபாங்கு என இரண்டு வகையான கூத்து மரபுகள் மன்னாரில் வழக்கத்தில் உள்ளன.(4) வடபாங்கில் கடவுள் வாழ்த்து விருத்தப்பாவில் அமைந்திருக்க தென்பாங்கில் வெண்பாவில் பாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில்:-வடமோடி, தென்மோடி என இருவகைக் கூத்து மரபுகள் இங்குமுள்ளன. கரையோரப் பகுதிகளில் ஆடப்பட்ட தென்மோடிக்கூத்தில் நவீன நாடகத்தின் சாயலும் உள்ளது.

முல்லைத்தீவில் :-கோவலனார் கூத்தே இப்பகுதிக்குரியதென இனங்காணப்பட்ட சிறப்பான கூத்தாகும்.(5) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆண்டுப் பூசையின்போது கோவலனார் கூத்து ஆடப்படுவது வழக்கம்.
மலையகத்தில் :-காமன் கூத்து, அருச்சுனன் தபசு என்பன மலையகத்துக்குரிய கூத்துக்களாக இனங்காணப்பட்ட நிலையில், ‘தப்பு’ எனப்படும் மேளவாத்தியக் கருவியும் இக்கூத்துக்களில் பிரதான ஆட்டக் கருவியாக உள்ளதைக் காணலாம்.(6)

மேற்கூறிய கருத்துநிலை நின்று நோக்கும்போது, தமிழர் வாழும் பிரதேசங்களில் பண்டைதொட்டு ஒருவகைக் கூத்து மரபு இருந்ததென்பதை அறிய முடிகின்றது. பிற்காலத்தின் நவீன நாடகங்களுக்கு ஊற்றுக்காலாக இருந்தவகையிலும் இவை முக்கியம் பெறுகின்றன.



5.1.1. சுதந்திரத்துக்கு முன்னைய ஈழத்தில் தமிழில்; நாடக வளர்ச்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிமுதல் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதி வரை, ஈழத்தில் தமிழக நாடகக் குழுவினரின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பின்னர் தமிழ்நாட்டில் ‘சினிமா மோகம்’ அதிகரிக்க ஈழத்தவர் தமக்கென ஒரு நாடக மரபினைப் பின்பற்றியும், தமிழகத்தில் இருந்து கடன்பட்டும் ஈழத்தமிழ் நாடகத்துறையை முன்னேற்றப் பாதையில் நகர்த்தினர்.

கலையரசு க.சொர்ணலிங்கத்தின் வருகையுடன் ஈழத்தில் நாடகம் நவீன தன்மையுடன் முன்நகரத் தொடங்கியது. மேலைத்தேச நாடக மரபுகளை உள்வாங்கி கட்டுக்கோப்புடன் நாடகம் படைக்கும் வல்லமை பெற்றவராக இவர் விளங்கினார். கனகசபையின் ‘நற்குணசேகரன்’ (1927), அழகசுந்தரதேசிகரின் ‘சந்திரகாசன்’ (1940), க.சிதம்பரநாதனின் ‘சாவித்திரிசரிதம்’ (1917), நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘உயிரிளங்குமரன்’ (1936) போன்ற பல நாடக நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன.(7)
இலங்கைத்தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஒளிபாய்ச்சிய பெருமை பேராசிரியர் கந்தசாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை(1903-1968) அவர்களையே சாரும். அவருடைய ஆற்றல் முழுவதையும் வெளிக்கொணர்ந்த துறையாக நாடகத்துறையே விளங்குகின்றது. இவருடைய காலப்பகுதியில் நடிப்பதற்குரிய நாடகங்கள் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்க படிப்பதற்குரிய நாடகங்களும் பெருமளவில் தோன்றின.

த. சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய ‘கலையருவி கணபதிப்பிள்ளை’ என்ற சிறுநூலில் கணபதிப்பிள்ளை அவர்களின் நாடகப்பணி பற்றிக் கூறப்பட்டுள்ளது. நானாடகம்(1940), இருநாடகம்(1952), சங்கிலி(1956) போன்ற பல நாடகங்களை எழுதி நாடகப் பதிப்புலகின் பிதாமகனாகத் திகழ்ந்தார்.

‘காதலியாற்றுப்படை’ என்னும் செய்யுள் நூலும் ‘வாழ்க்கையின் வினோதங்கள்’(1954), ‘பூஞ்சோலை’(1953) என்னும் நாவல்களும் பேராசிரியர் அவர்களின் மிகப்பெரிய படைப்புக்களாகும்.(8) யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு நாடகங்களை எழுதியும் மேடையேற்றியும் அரும்பணி புரிந்தார். பல்கலைக்கழக மட்டத்தில் பலரைக்கொண்டு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றினார். பிற்காலத்தில் கிராமிய மட்டத்திலும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் செல்வாக்கினை உணரமுடிந்தது.

பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருந்த வகையில் இவரின் பங்களிப்பென்பது தமிழ் இலக்கியத் துறைக்கு இன்றியமையாததாகும்.



5.1.2. 1950 களின் பின்னைய ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சி

இலங்கை சுதந்திரம் பெறமுன்னர் கிராமிய மட்டத்தில் இருந்த நாடகங்கள், சுதந்திரத்துக்குப் பின்னர் படிப்படியாக பல்கலைக்கழக, பாடசாலை மட்டங்களில் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டன. பிரதேச நாடக மன்றங்களின் பங்களிப்பும் இக்காலத்தில் பேருதவியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

1950களின் முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் இருந்த நாடகச்சூழல் போராசான் க.கணபதிப்பிள்ளையின் வருகையுடன் பாரிய மாற்றத்துக்குட்பட்டது. 1960களின் பின்னர் ஈழத்தமிழ் நாடகம் யதார்த்தம் என்ற புதிய நெறியுடன் புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டது. சி.மௌனகுரு, தாஸிசியஸ் ஆகியோரின் வருகை இதற்குப் பேருதவியாக அமைந்தது.

இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட என்.கே.ரகுநாதனின் ‘கந்தன் கருணை’ நாடகம் புதிய மெருகுடன் சமூக முரண்பாடுகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மஹாகவி, முருகையன், அம்பி ஆகியோரின் பானாடகங்கள் பல மேடையேற்றப்பட்டன. மஹாகவியின் ‘கோடை’, ‘புதியதொருவீடு’, முருகையனின் ‘கடூழியம்’, அம்பியின் ‘வேதாளம் சொன்னகதை’ போன்றன குறிப்பிடத்தக்க சில பாநாடகங்கள் ஆகும். அ. தாஸிசியஸ் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டு இவை மேடையேற்றப்பட்டன.

1970களில் முன்னெடுக்கப்பட்ட ‘அரங்கச் செயற்பாடு’ உலக நாடக வளர்ச்சி பற்றிய சிந்தனையை எம்மவரும் பின்பற்ற வழிசெய்தது. இக்காலகட்டத்தில் பேராதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் நாடகப் பணிகள் சிறப்பிடம் பெற்று விளங்கின.(9)

பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தனின்(1924-1989) நாட்டுக்கூத்து மீட்புப்பணி இக்காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது. “ஈழத் தமிழர்களுடைய நவீனநாடகம், நடனம், நாட்டியநாடகம் ஆகியவற்றில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, இவர் தெளிவுபடுத்திய மரபுவழி நாடக உத்திகள் என்னும் வற்றாத ஊற்றுக்கள்”(10) ஆதாரமாக இருக்கும் எனப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

நவீன நாடகங்கள் பலவற்றை எழுதி மேடையேற்றிய இவர் நாட்டுக்கூத்தினை நகரத்தவர் மத்தியில் அறிமுகஞ் செய்தார். கிராமியக் கலைஞர்களை தேசிய மட்டத்துக்கு அறிமுகஞ்செய்த இவர் போட்டிகளையும், கருத்தரங்குகளையும் நடாத்தி பரிசுக்குரிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட இவரை “நாட்டுக் கூத்துக்களின் மீட்புப் பணியாளர்”(11) எனவும் அழைப்பர்.

பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்கு நிகராகப் பேசப்பட வேண்டிய மற்றொருவர் குழந்தை.ம.சண்முகலிங்கன் ஆவார். தமிழ் நாடக வளர்ச்சியில் இவருடைய வருகையானது அரங்க நிலைப்பட்ட செயற்பாடுகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது. நாடக அரங்கக் கல்லூரியின் மூலம் தரமான பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்ற பெரிதும் உதவிபுரிந்த வகையில் இவரது பணி சிறப்பானது.



5.1.3. ஈழத்தில் அண்மைக்காலத் தமிழ் நாடக வளர்ச்சி

1980 களின் பின்னர் இன முரண்பாடு உச்சக்கட்டத்தை அடைந்த போது தமிழ் நாடகங்களும் புதியதொரு வடிவினைப் பெற்று வளரத் தொடங்கியது. வீதிநாடகங்களும் (1982) இக்காலத்தில் பாரியளவில் வளரத் தொடங்கியது. குழந்தை.ம.சண்முகலிங்கம், க.சிதம்பரநாதன், பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரின் விடாமுயற்சி காரணமாக யாழப்பாணப் பல்கலைக்கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட, கிரேக்க நாடக மரபின் சாயலை உடையது(12) எனப் பேராசிரியர் சி.மௌனகுருவினால் விதந்துரைக்கப்பட்ட நாடகமான ‘மண்சுமந்த மேனியர்’ இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பெருமைக்குரியது.

90களின் பின்னர் பாடசாலைகளை மையமாகக் கொண்டும் நிறைய நாடகங்கள் தோன்றின. ஏ.ரி.பொன்னுத்துரை, ஆர்.சி.நடராஜா, கோகிலா மகேந்திரன், குறமகள், போன்ற பல நாடக ஆசிரியர்களின் வருகை இக்காலத்தில் முக்கியமானதாக அமைந்தது. இவர்கள் பாடசாலை மாணவர்களுடன் தாமும் இணைந்தும் பல நாடகங்களைப் படைத்து அதில் வெற்றியும் பெற்றனர்.

இலங்கையர்கோன் அவர்களுடன் தொடங்கிய வானொலி நாடகமரபு இக்காலகட்டத்தில் பாரிய வளர்ச்சியினைக் கண்டது. அத்துடன் பல மொழிபெயர்ப்பு நாடகங்களும் இக்காலத்தில் வெளிவந்தன. கந்தையா சிறிகணேசன் அவர்களின் ‘நிதர்சனத்தின் புத்திரர்கள்’ நாடகநூல் 90களின் பின்வந்த நாடக நூல்களுள் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. நாடகத் தொகுதிகளும், சில நாடக ஆசிரியர்கள் இணைந்து வெளியிட்ட தொகுதிகளும், வானொலி நாடகத் தொகுதிகளும் தற்காலத்தில் தமிழ் நாடகத்துறையை மேலும் வளம்படுத்த உதவுகின்றன.

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன,

1.மரபு வழிப்பட்ட நிலை
2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு
3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி
4. அண்மைக்காலப் போக்கு

இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.

5.2.1. மரபு வழிப்பட்ட நிலை

மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி.கணேசையர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர், கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் கவிதைகள் இத்தகைய மரபு நிலைப்பட்டன என்பதை மனங்கொள்ள வேண்டும்.

மரபுக் கவிஞராக இனங்காணப்பட்ட சுவாமி.விபுலாநந்தர் பாரதியின் தாக்கத்தினால் உந்தப்பட்டு கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர். ‘கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர், ஈசன் உவந்தளிக்கும் இன்மலர்’ போன்ற மரபுக் கவிதைகளினை எழுதிப் புகழடைந்தவர். இவருடைய வரிசையில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் ‘பகவத்கீதை வெண்பா’வும் குறிப்பிடத்தக்கது. ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பிற்காலத்தில் பலரும் அழைக்க இம்மரபுக் கவிதையே காரணமாக இருந்ததெனலாம்.

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மரபில் கூடப் புதுமை படைக்கும் அளவிற்கு எளிமையான பாடல்களைப் பாடி மரபையும் தாண்டிக் குழந்தைக் கவிஞராகவும் இடம்பிடித்துள்ளார். இவர் பாடிய பாடல்களின் உள்ளடக்கத்தினைக் கருத்திற் கொண்டு அவற்றைப் பின்வருமாறு நோக்க முடிகின்றது.
எளிமையான தன்மை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் கூறுகளைப் படைத்தல்
சந்தச் சிறப்புடன் சுவைபடப் பாடுதல்
சிறுவர் விரும்பும் மெட்டுடன் பாடுதல்
கதைப் பாடல்களைப் பாடுதல்…

என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வகையில் பெரும்பாலான பிள்ளைகள் நினைவில் வைத்திருக்குமளவிற்கு இனிமையும் எளிமையும் உடைய கவிதைகளைப் பாடினார். எடுத்துக்காட்டாக, ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை …’ என்ற பாடல் முலம் இன்றும் சிறுவர்களின் நெஞ்சில் நிறைந்துள்ளமையினைக் கூறலாம். ‘இலவு காத்த கிளி, கத்தரி வெருளி, பவளக்கொடி’ போன்ற கதைப்பாடல்களையும் ‘மகாவலி கங்கை, கன்னியாய் வெந்நீரூற்று, இலங்கை வளம்’ போன்ற நாட்டுச் சிறப்புக் கூறும் பாடல்களையும் பாடிச் சிறப்புப் பெற்றார்.



5.2.2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு

1930களிலிருந்தே இலங்கை அரசியலில் தமிழ், சிங்கள இனத்துவ அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகள் இலங்கை முழுவதுக்குமான தேசியத்தையும், இடதுசாரிக் கட்சிகள் வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தையும் சமாந்தரமாக வளர்த்தெடுக்கத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1930 களில் இருந்து தினசரி, வார பத்திரிகைகளும் , சஞ்சிகைகளும் தோன்ற ஆரம்பிக்க சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் சமூக மறுமலர்ச்சி சார்பான கருத்துக்கள் படைப்பிலக்கியங்களினூடே முனைப்புப் பெற்றன.

19ஆம் நூற்றாண்டின் கனகி புராணத்துடனேயே சமூக மறுமலர்ச்சிக்கான கருத்துக்கள் தோன்றி விட்டதெனினும், நவீன உள்ளடக்கத்தையும், மரபுசார் வடிவங்களையும் பெற்றுச் செந்நெறிப்பாங்கான செய்யுள் இலக்கிய வடிவம் ஒன்று தோற்றம் பெறச் சுதந்திரத்துக்கு முந்திய காலம் பேருதவி புரிந்தது. சமூகச் சார்புடைய கவிதைகளில் முற்போக்கான விடயங்களே அதிகம் பேசப்பட்டன.

பாவலர் துரையப்பாப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர்க.கணபதிப்பிள்ளை(காதலியாற்றுப்படை), அழக.சுந்தரதேசிகர் (சி.வை.தாமோதரம்பிள்ளையின் மகன்) போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றனர். எனினும் இவர்கள் மூவரும் 1950 களின் பின்னர்தான் தமிழ்க் கவிதையுலகில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்க் கவிதையின் பிதாமகன் மகாகவி பாரதியின் சமகாலத்தவரான பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை(1872-1929) அவர்கள் எளிமையான முறையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்த எண்ணற்ற பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், 1901இல் உதயதாரகை சஞ்சிகையினதும் 1921இல் இந்துசாதனம் சஞ்சிகையினதும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1907இல் வெளியிட்ட ‘மாணவர்’ சஞ்சிகையின் மூலம் கவிதைக்கான களம் அமைத்துக் கொடுத்தார்;. அதிபராகவும், ஆசிரியராகவும், சிறந்த முகாமையாளராகவும் பல பதவிகனை வகித்த இவர் எளிமையான சொற்களில் பொதுமக்கள் சார்பான ‘கும்மி’ இலக்கிய வடிவங்களை வெளியிட்டார். ‘யாழ்ப்பாண சுதேசகும்மி, கீதாசார மஞ்சரி, சிவமணிமாலை, இதோபதேச மஞ்சரி, எங்கள் தேசநிலை’ போன்ற கவிதை நூல்களையும் தனிப் பாடல்களையும் பாடியுள்ள பாவலர் சிறந்த கவித்துவ வீச்சைக் கொண்டவர்.



5.2.3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி

1950 களின் பின்னர் ஈழத்து இலக்கியப்பரப்பு விரிந்து பரந்து செல்லத் தொடங்கியது. அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், மத்தியதர வர்க்கத்தினரின் தோற்றம் என்பன ஈழத் தமிழர் வாழ்வியலில் முனைப்பான தாக்கத்தினை உண்டுபண்ண, சமகாலத்தில் மொழி-இன உணர்வும், சமூகப் பிரக்ஞையும், முற்போக்கு சார்பான சிந்தனைகளும் மேலெழுந்தன. இதேவேளை மலையக மக்களின் வாழ்வியற் சிக்கல்களும் அவற்றை எதிர்கொள்ள அவர்கள் நடாத்திய போராட்டங்களும் முஸ்லீம்களின் அபிலாசைகளும் இக்காலக் கவிதைப் போக்கையே மாற்றியமைத்தன.

1943இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும்(14) அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்.

தமிழ்நாட்டில் நவீன கவிதை வளர பாரதிக்குப் பின் பாரதிதாஸன், பிச்சமூர்த்தி போன்றோர் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனரோ அதேபோல ஈழத்தில் நவீனகவிதை வளர பாவலர் துரையப்பாபிள்ளைக்குப் பின் மஹாகவி(உருத்திரமூர்த்தி) முக்கியம் பெறுகின்றார்.

மஹாகவி தமது சமகால ஓட்டத்தினைச் சரியாக இனங்கண்டுகொண்டு கவிதை படைத்தவர். யாப்புவழிச் செய்யுள் ஓசைக்குப் பதிலாகப் பேச்சோசைப் பாங்கினைத் தன் கவிதைகளில் அறிமுகஞ் செய்து, செய்யுள் அடிகளை உடைத்தெழுதி உணர்ச்சி அழுத்த வேறுபாடுகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தினார்.

எளிமையும் கவித்துவ வீறும் கொண்ட கவிதைகளைப் படைக்க காட்சிப்படுத்தல் (தேரும் திங்களும்), இசை (குறும்பா), போன்ற உத்திகளைக் கையாண்டார். ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்ற கவிதை மூலம் மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை அனுபவங்களைப்பாடி தனது மானிட நேயத்தை வெளிக்காட்டினார். ‘தேரும் திங்களும், கண்மணியாள் காதை, கோடை, குறும்பா, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், வீடும் வெளியும், வள்ளி’ போன்ற கவிதை நூல்கள் இவரின் கவியாற்றலுக்குச் சான்றுரைப்பன.

தான் வாழ்ந்த காலநிலையை நன்குணர்ந்து பாரதிக்குப் பின் நவீனகவிதையைப் புதிய தாளத்துக்கு இட்டுச்சென்று ஈழத்தில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தினைப் பெற்றுள்ளார்.

மஹாகவியின் சமகாலத்தவரான நீலாவணன் கிழக்கிலங்கையின் சிறந்த கவிஞர். கிராமிய மண்வாசனையுடன் சமகால சமூகப் பிரக்ஞையையும் சித்திரிப்பனவாக இவரது கவிதைகள் அமைந்து காணப்பட்டன. ஆன்மீக நோக்குடைய(பசும்பால்) கவிதைகளையும், பாநாடகங்கள், காவியம், மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றையும் இவர் எமுதினார்.

சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகிய இருவரும் முன்னைய இருவரில் இருந்தும் வேறுபட்ட பண்புடையோர். செல்வராசன் கவிதைகளில் அங்கதச் சுவை மேலோங்கி இருக்க, தத்துவம், நடத்தைவிமர்சனம், பகுத்தறிவு என முரண்பட்ட தன்மைகளை தனது கவிதைகளில் தந்தவர் முருகையன்.

1960 களின் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் ‘படிமம்’ எனப்பட்ட ‘குறியீடு’ ஒருவகையான இருண்மைத் தன்மையினைக் கொண்டுவர, அதுவரை காலமும் பேசாப்பொருளாக ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல்சார் நடத்தைகளும் கவிதைகளில் பாடப்பட்டன.

தருமு சிவராம், தா.இராமலிங்கம், போன்றோர் பாலியல் உணர்ச்சிகளை தமது கவிதைகளில் நுட்பமாகக் கையாண்டிருக்க, மு.பொ ஒருவிதமான ஆத்மார்த்தத் தளத்தில் நின்றுகொண்டு கவிதைகளைப் படைத்தார். சன்முகம் சிவலிங்கம், நுஃமான், மு.பொ, போன்ற சிலர் முற்போக்கு சார்பான விடயங்களைக் கலைத்துவ உணர்வுடன் கூறிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் பொதுவுடைமைச் சிந்தனையின்பால் ஈற்கப்பட்ட அ.ஜேசுராசா, சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம் போன்ற கணிசமானோர் தனிமனித உணர்வுகளுக்கும் சொந்த அனுபவங்களுக்கும் முதன்மையளித்துக் கவிதைகளைப் படைத்தனர்.

மரபுக்குள் நின்றுகொண்டு நவீனம் சார்புக் கவிதைகளைத் தந்த காசியானந்தன், வர்க்க அடிப்படையில் சமூகத்தை நோக்கிய சுபத்திரன் ஆகியோரும் கலைப்பெறுமானம் மிக்க கவித்துவமான பல கவிதைகளை எழுதினர். சிறந்த படிமங்கள் நிறைந்த நீண்ட கருத்துக்கள் செறிந்த கவிதைகளின் வரவானது ஈழத்துக் கவிதையின் தனித்துவத்தை பேணிக்காத்து புதுமையான வழிக்கு இட்டுச்சென்றது.



5.2.4. ஈழத்தின் அண்மைக்காலக் கவிதைப் போக்கு

ஈழத்துக் கவிதைகள் 1980கள் வரை சாதி, சமயம் என்ற வரன்முறைக்குள் நின்றுகொண்டே பெரும்பாலும் வளர்ச்சி கண்டன. இன்னொரு வகையில் சொன்னால் தம்முடைய காலப்பகுதியில் தாம் எதனால் பாதிக்கப் படுகிறார்களோ அல்லது ஈர்க்கப்படுகிறார்களோ அந்த ஈர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருப்பதை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.

இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வு பல்வேறுபட்ட ஆதிக்கக் கூறுகளினால் கட்டுண்டு கிடக்கிறது. இதில் பிரதானம் இனத்துவ ஆதிக்கநிலை, பின்வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, மதமேலாதிக்கம், பெண்ணிய அடிமைத்தனம், பிரதேச வேறுபாடுகள் போன்றனவாகும். இத்தகைய கருத்தியல் நிலைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவே ஈழத்தில் தற்காலக் கவிதைகளும் பிறக்கின்றன.

1980 களின் பின்னைய இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் அரசியல், பெண்ணியம் போன்றன முனைப்புப் பெறுவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் வந்த புதிய பரம்பரையில் பெண்களின் பங்கு கணிசமானதாக இருந்தது. அரசியல் ஒடுக்குமுறை மிகுந்திருந்த இக்காலத்தில் இலக்கியங்களும் அதையே பேசின. கவிதை விமர்சகரான எம்.பௌசர் குறிப்பிடுவது போல “ஈழத்துத் தமிழ்க் கவிதையில் -இலக்கியத்தில் பெரும் அரசியல்வாடை அடிக்கிறதென மூக்கைப் பொத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்”(15) என்ற கருத்து இவ்விடத்தில் வலுவுடையதாக உள்ளது.

இனவன்முறைகள் முன்னைய காலங்களைவிட 1980களின் பின்னர் அதிகரித்தமையினால் அதற்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே கவிதைகளும் படைக்கப்பட்டன. போரினை உள்ளிருந்து எதிர்ப்போர் வெளியிருந்து பார்ப்போர் என இரு வேறுபட்ட இயங்கியல் தளத்தினூடே இக்காலக் கவிதைகள் எழுதப்பட்டன. தமிழ்த்தேசிய உணர்வின் காரணமாயும் மனிதாபிமான நோக்கிலும் என எதிர்ப்புக் குரல்கள் போருக்கெதிராக மேற்;கிளம்பின.
“…………………………….
கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன…….”(16)

எனப் போரின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் இழப்புக்களையும் எந்தவிதமான பூச்சுப் புனைவுமின்றிக் கூறும் கவிஞர் அஸ்வகோஸின் வரிகள் இத்தகைய இயல்புடன் விளங்கக் காணலாம்.

1983இல் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான இன வன்முறையின் பின்னரான காலப்பகுதியில் வந்த கவிதைகள் போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், கொடூரங்களையும், தமிழின எழுச்சியையும் பாடுவனவாக அமைந்தன. யாழ் நூலக எரிப்பு, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைகள், தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகள் என்பன ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ண, அதன் விளைவாக புதுவை இரத்தினதுரை, நிலாந்தன், அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், கலா, சேரன் என நீண்டு செல்லும் பட்டியலையுடைய கவிஞர் குழாமொன்று தோன்ற வழிபிறந்தது.

கவிஞர் சு.வில்வரத்தினம் நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதை அவருடைய கவிதைகளில் இருந்து அறிய முடிகின்றது.
“பறம்புமலை
பாரி மறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வென்றெரி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றில்
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே
பாரி மகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
………………………..
………………………
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.”(17)

தனது தொலைநோக்குப் பார்வையினூடே சங்கப் புலவர் ஒளவையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி இடப்பெயர்வின் அவலத்தினை எடுத்துக் கூறியமை சிறப்பாக உள்ளது.

1980களின் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சொல்லமுடியாத பல சிக்கல்களை அனுபவித்தார்கள். பிரயாண அவலம், வீசாச் சிக்கல், தங்குமிடம் இன்மை, நிறவெறி, புதிய பண்பாட்டுச் சூழல், அந்நியஇடம், தாயகம் பற்றிய ஏக்கம் என்பன அவர்களை வாட்டிவதைக்க தமது இலக்கியங்களிலும் அவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.(18)

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பிரதீபா, விந்தியன், அருந்ததி, மைத்திரேயி, ஊர்வசி, அவ்வை, தமயந்தி, சுகன், பாலமோகன் போன்ற சுட்டிக்காட்டத்தக்க இன்னும் பலர் தமது ஆதங்கங்களைக் கவிதைகளினூடாகக் கொண்டுவந்தனர். “சொல்லாத சேதிகள், மறையாத மறுபாதி, மரணத்துள் வாழ்வோம்” போன்ற கவிதைத் தொகுதிகள் புலம்பெயர் கவிஞர்களின் கவித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் உள்ளன.

வ.ஐ.ச.ஜெயபாலன் தனது ‘உயிர்த்தெழுந்த நாட்கள்’ என்ற நீண்ட கவிதையிலே தமிழர்களின் சோக வரலாற்றினை ஓரளவுக்கு எடுத்துக்கூற சேரனின் ‘கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்’ என்ற கவிதை அதனை மேலும் வலுவுடையதாக்கியது.
“ எனக்கு ‘விசா’ தந்த அதிகாரி
மனைவிக்கு
‘விசா’ தர மறுக்கிறான்
யாழ்ப்பாண வடலிகளின் நிழலில்
அம்மம்மா
‘போய்ச் சேர்ந்து விட்டாலும்’
சென்று திரும்பல்
இயலுமோ சொல்…?”(19)

என நீண்டு செல்லும் இளவாலை விஜயேந்திரனின் கவிதைமூலம் சொந்த நாட்டுக்கே சென்று திரும்ப முடியாத அவலநிலை உணரப்பட்டது. வ.ஐ.ச.ஜெயபாலன் தன்னுடைய கவிதைகளில் புலம்பெயர் மக்களின் பல்வேறுபட்ட உணர்ச்சிகளைச் சித்திரிக்க முற்பட்டுள்ளமை அவரது கவிதைகளினூடே புலப்படுகின்றது.

“நான் மந்தையைப் பிரிந்த தனிஆடு
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பியநான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிரில்…”(20)

தாய்நாட்டின் பிரிவும் புகுந்த நாட்டின் தனிமையும் கொடிதிலும் கொடிது என்பதை உணர்த்த அவர் கையாண்ட வரிகள் அற்புதமானவை.

மேலைநாட்டு ஆண்-பெண் சமத்துவ நிலையின் தாக்கத்தினை பெண்ணியம் சார்புடைய கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. புலம்பெயர் சூழல், போராட்டக்களம், என்பன சமூக அமைப்பில் இருந்த பெண்களுக்கான மரபுவழித் தளைகளை உடைத்தெறிந்து புதுமை படைக்கும் சூழலை அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இதன் விளைவே பெண் கவிஞர்களின் பல்கிப் பெருகிய தோற்றமாகும்.

நிருபாவின் ‘மாப்பிள்ளைக்கு வந்தனங்கள்’ என்ற தனிக் கவிதையில் வரும்
“…பூமியை விட்டு நான்
செவ்வாயில் வாழச் சென்றால்
சூரியனையும் சந்திரனையும்
சீதனமாக் கேட்பீரோ?”(21)

என்ற வரிகளும், பாமினியின்

“மாப்பிள்ளை வாங்கலியோ
மாப்பிள்ளை வாங்கலியோ
மாத வருமானமுள்ள
உள்நாட்டு மாப்பிள்ளைக்கு
கைரொக்கத்துடன்
கணிசமான தொகையும்……”(22)

எனத் தொடரும் கவிதையும் சீதனத்துக்கு எதிராகத் திரண்ட பெண்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

“எங்களைப் பாருங்கள்-எங்கள்
சேலைகளையும் ரவிக்கைகளையும் அல்ல
எமது உணர்ச்சிகளை……”(23)

“எனக்கு முகமில்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை………”(24)

“… அகதியாதலால்
ஆடையில் இருந்து
உறுப்புக்கள் வரைக்கும்
பார்வைகளால்
விசாரிக்கப்பட்டு
வயோதிபரில் இருந்து
இளைஞர் வரைக்கும்
காமப் பார்வையை
என்மேல் பதிப்பர்
பெண்ணாதலால்”(25)

அடுப்பங்கரையில் சாம்பல் பூச்சிகளாய் ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய இத்தகைய கவிதைகள் ஆவேசத்தின் குரலாகவும், அடக்குமுறையின் வெளிப்பாடாகவும் உள்ளமை விசேடமானது. போராளிக் கவிஞர்களான கஸ்தூரி, வானதி, பாரதி போன்றோரும் பெண்ணியம் சார்புடைய கவிதைகளை எழுதித் தம்மையும் அடயாளப்படுத்தினர்.

பாலுறவில் பேசாப்பொருளாக இருந்த உணர்வுகளும் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. ஆண்-பெண் உறவில் திருப்தி காணாத நிலையில் தமது ஏக்கத்தை வெளிப்படுத்தவும் கவிதைகளைத் தெரிவு செய்தனர்.(26) இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக ரஞ்சினியின் ‘புரிதலின் அவலம்’ என்ற கவிதை விளங்கக் காணலாம்

எண்பதுகளின் பின்னர் ‘சோலைக்கிளி’யின் வரவானது இனஉணர்வு வழிவந்த மாற்றங்களுக்கு இடமளிப்பதாக அமைந்திருந்தது. படிமக் கவிஞராகத் தன்னை இனங்காட்டிய இவருடைய கவிதைகளில் படிமங்களே மொழியாக அமைந்து விடுவதனால் கவிதைகளின் வனப்பும் சிறப்புடன் பேணப்படுகின்றது.(27)

தொன்னூறுகளில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது இருப்பை மேலும் இழக்கத் தொடங்கியது. விடுதலைக்கான இருப்பும் இருப்புக்கான விடுதலையும் இக்காலத்தில் அதிகம் சிலாகிக்கப் பட்டது. படிமம், குறியீடு, உருவகம் போன்ற வனப்புக்கள் அதிகம் நிறைந்திருந்த போதிலும் அவை கவிதைக்கு ஒருவகையான அழகு சேர்ப்பனவாகவே அமைந்திருந்தமை சிறப்பானது.

அஸ்வகோஸ், கருணாகரன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி கருணாகரன், அறபாத், ஆத்மா, றஸ்மி, போன்ற இளம் கவிஞர்கள் 1990களின் பின்னர் கவிதை முயற்சியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, முற்காலக் கவிஞர்களின் ஆளுமையில் இருந்து முற்றிலும் விடுபட்டு சூழலுக்கேற்ற விதத்தில் அசாதாரண எளிமையும் படிமப் பிரயோகச் செறிவும் உடையனவாகத் தமது கவிதைகளைப் படைத்தனர்.

ஈழத்துக் கவிதை இலக்கியத்தின் மற்றொரு கூறாக அமைவது முஸ்லீம் தேசியவாதம் ஆகும்.வடபகுதி முஸலீம்கள் வெளியேறியதன் பின்னர்தான் கவிதைகளில் முஸ்லீம்களின் பங்கு தக்கமுறையில் பிரதிபலிக்கத் தொடங்கியது.(28) எம்.பௌசர், றஸ்மி, ஆத்மா, சிராஸ்டீன், ஸஹ{ப், ஹனிபா போன்ற பல முஸலீம் எழுத்தாளர்களின் கவிதைகளில் முஸ்லீம் தேசியவாதம் முனைப்புப் பெற்றுள்ளதைக் காணலாம்.

அமரராகிவிட்ட குறிஞ்சித் தென்னவனின் பணி கவிதை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான கவிதைகளினை எழுதி மலையகக் கவிதைக்கான தன்னாலான பணியினைச் சிறப்புடன் செய்த இவருடைய கவிதைகள் அடங்கிய சிறு தொகுதி நூலொன்று நீண்ட நாளின்பின் நிறைவேறிய போது, “எனது நெடுநாட்க் கனவு நிறைவுறுகிறது”(29) என அகமகிழ்ந்தார்.

குறிஞ்சித் தென்னவனைத் தொடர்ந்து முரளிதரன், எலியாசன், மல்லிகை.சி.குமார் எனப்பலர் மலையகக் கவிதைக் களத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் எஸ்.முரளிதரன் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் யப்பானில் புகழடைந்த ‘ஹைக்கூ’ கவிதையாக்க முயற்சியில் ஈடுபட்டிருப்பினும் அனுபவ முதிர்ச்சியின்மை காரணமாக அம்முயற்சி இன்னும் இம்மண்ணோடு சுவறவில்லைப்போல் தெரிகிறது.

ஈழத்துக் கவிதைப் பரப்பானது நீண்டு விரிந்த ஒரு வரண்முறையான நெடுவழியில் பயணித்து இன்றைய நிலையினை அடைந்துள்ள தற்காலச் சூழலில், முது கவிஞர்களின் சுவடுகளிடையே பயணிக்க இளங் கவிஞர்கள் பலர் முயன்று கொண்டிருப்பினும் அவர்களுக்கான காத்திரமான களமும், படைப்புச் சூழலும், வசதிவாய்ப்புக்களும் அதிகரிக்குமிடத்து உயிரோட்டமான இன்னும் பல கவிதைகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும் என்பது மட்டும் உறுதி.