மூன்று கவிதைகள்

இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள்.

சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர்
பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின்
தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே
"
(கலித்தொகை - முல்லை - 13)

நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின்
சாயலைக் காணமுடிகின்றது.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவினில்
அலையோர வெண்மணலில்
நாம் பதித்த கால்த்தடங்கள்
இல்லாத இடங்களில்லை.
இற்றைத் திங்கள்
அதே வெண்மணலில்
என் கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை……
…………………………
………………………….
"

எனத் தொடர்கின்ற விஜயலட்சுமி சேகர் எழுதிய கவிதையில் சங்க காலத்து தொடர்ச்சியாக இன்றும்
கவிதைகள் படைப்பதைக் காணமுடிகின்றது. காட்சிகள் மாறவில்லை. களங்கள் மாறியுள்ளன.
பொருள் மாறவில்லை. நடை மாறியுள்ளது. வடிவம் மாறவில்லை. வாழ்க்கை மாறவில்லை.
அன்றும் இழந்தோம் இன்றும் இழந்தோம். கையறுநிலையே வாழ்க்கையாகி கவிப்பொருளாகி காலங்காலமாக
தொடர்கின்றது.

இதோ இதே பொருளில் அமைந்த, அண்மையில் மறைந்த படிமக் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின்(சு.வி) ஒரு கவிதை.

"பறம்புமலை
பாரி மறைந்து
பருதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வெண்றெறி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றிலே
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினு}டே
பாரிமகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
தானும் தளர்நடை நடந்தது நிலவும்
தள்ளாத வயதின் கபிலர் துணைபோல

நடந்து, இளைத்து, தேய்ந்து
நுரைவிழுந்து போனது
வெண்ணிலவம்தான்
கபிலரும்தான்
பாரிமகளிரும்தான்
பறம்புமலை வாழ்வும்தான்…

பாவம்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
பறம்பு மலைக்குன்றும்,
வென்றெரி முரசும்
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
ஏதிரொலிக்கின்றனவே
"

என்று முடிகின்றது சு.வி யின் கவிதை. சு.வி ஒரு யதார்த்தக் கவிஞன், படிமக் கவிஞன் என்ற
எல்லைகளைக் கடந்து தன்னை ஒரு தொன்மக் கவிஞனாகவும் நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு
இக் கவிதை பேருதவியாக இருந்திருக்கிறது

கருத்துகள்

  1. உங்கள் கவிதைக்கு கருத்து விளங்கி ,பதில் சொல்லும் புலமை எனக்கில்லை இருப்பினும் இவை தான் ஈழத்தில் அரங்கேறுகின்றன....வரலாறு மீண்டும் எழுதப்படும். i

    பதிலளிநீக்கு
  2. நன்றியக்கா
    தொடர்ந்து எனது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்
    -தியா-

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு தியா. சங்க கவிதையையும் இன்றைய கவிதையையும் அழகான பாலத்தில் இணைத்திருக்கின்றீர்கள். நிறைய எழுதுங்கள். இடுகை இடும் போது uyirodai@gmail.com க்கு ஒரு மடலும் இடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி உயிரோடை
    இனி உங்களுக்ளுடனும் நான் இணைந்திருப்பேன்
    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்