5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி
படைப்பிலக்கியத்தின் விளைவாக, படைப்பின் தளத்தை சமூகத்துக்கு அறிமுகஞ்செய்து, ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வாசகர் மத்தியில் படைப்புக்கு ஓர் முக்கியத்துவம் தேடிக்கொடுப்பது விமர்சனமாகும். ‘விமர்சனம்’ என்ற வடசொல்லின் தமிழே திறனாய்வாகும். இதனை நலனாய்தல் எனவும் கூறுவர். இலக்கியங்களினூடே பொங்கி வழியும் பிம்பங்களை, திறன்களை, நலன்களை ஆராய்வதே இதன் தொழிற்பாடாகும். ஒரு இலக்கியத் திறனாய்வாளன் தன்னுடைய அறிவையும் பயிற்சியையும் கொண்டு இலக்கியத் தரத்தினை ஆய்ந்துணர்ந்து அதைப்பற்றிய தனது முடிவை வழங்குவான் என்று சேர் வில்லியம் ஹென்றி ஹட்சன் கூறுகின்றார்.(48) ‘திறனாய்வு’ என்பது வெறுமனையே காலத்தை வீணாக்கி, மறுபுறத்தில் திறனாய்வுக்குத் திறனாய்வு என்ற அடிப்படையில் நூல்கள் பல்கிப் பெருகி மூலநூலின் தரத்தினைக் குறைத்து மூலநூலினைப் படிக்கவிடாது வாசகனைத் தடுத்து விடுகின்றது.(49) என்று கூறுவோரும் நம்மிடையே உள்ளனர். உண்மையில் விமர்சனம் என்பது கலையின் நிகழ்வியக்கத்தின் ஒரு பெரும் பகுதியாக நின்று அழகியலை இயங்கச் செய்கின்றது.(50)
சங்ககாலத்து நக்கீரரின் வாதத்துடனேயே தமிழில் திறனாய்வு பிறந்து விட்டது. அதன்பின் வ.வே.சு.ஐயர், போப் ஐயர் போன்றோரும் கு.ப.ரா, பிச்சமூர்த்தி, ஆகியோரும் இலக்கிய விமர்சன முயற்சிகளில் நவீன காலத்தில் முன்னின்று உழைத்தனர். கிட்டத்தட்ட 1950 கள் வரை நா.வானமாமலையின் வரவே தமிழக விமர்சனத் துறையின் வளர்ச்சிக்கு உரம் போடுவதாக அமைந்தது. இந்நிலையில் ஈழத்தில் வித்துவ சிரோன்மணி ச.பொன்னம்பல பிள்ளை(1837-1897)யுடன் தான் விமர்சனம் வளரத் தொடங்கியது. உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், புன்னாலைக் கட்டுவன் சி.கணேசையர் போன்றோரும் இலக்கிய இரசனை வழி வந்தவர்களே.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வித்துவசிரோன்மணி பொன்னம்பல பிள்ளையிடம் கல்வி கற்றமையால் இயல்பாகவே இரசனையுடன் நூல்களைப் படைத்தார். இரசிகமணி கனக.செந்தில்நாதன், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், அல்வாயூர்.மு.செல்லையா, கா.பொ.இரத்தினம், சதாசிவ ஐயர், வேந்தனார் போன்றோரும் இலக்கிய இரசனையில் ஈடுபாடுடையவர்களே. சுவாமி.விபுலாநந்தர் விமர்சன ரீதியாக எழுதிப் பல ஆக்கங்களை வெளியிட்டவர். மேலைநாட்டுக் கலை இலக்கியங்கள், பண்பாட்டம்சங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் அவற்றை தமிழ்க் கலை இலக்கியங்களோடும், பண்பாட்டம்சங்களோடும் தொடர்புபடுத்தி ஒப்பு நோக்க முயன்ற வகையில் அடிகளார் முக்கியம் பெறுகின்றார்.
1960 இல் போராசிரியர்களான க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் கொடுத்த விமர்சன ரீதியான பங்களிப்பு விமர்சன ரீதியில் புதிய எல்லைகளைத் தொட உதவி புரிந்தது. இவர்களில் கைலாசபதி சமூகவியல் பார்வையினூடே விமர்சனங்களை முன்வைப்பதில் கைதேர்ந்து விளங்கினார். ‘கவிதைநயம்’(1970), ‘இலக்கியமும் திறனாய்வும்’(1972) ஆகிய இரு நூல்களும் இவருடைய இத்தகைய முயற்சிக்குச் சான்றாக அமைவன.
அனுகரணக் கொள்கை, பயன்வழிக் கொள்கை, வெளிப்பாட்டுக் கொள்கை, புறநிலைக் கொள்கை எனத் திறனாய்வியல் அணுகுமுறைகள் பற்றி பேராசான் கைலாசபதி அவர்கள் முன்வைத்த ‘நால்வகைக் கொள்கைகள்’ திறனாய்வியல் கோட்பாட்டில் முக்கியம் பெறுகின்றன. தமிழகத்தின் இலக்கிய விமர்சகரான ‘க.நா.சு’ அவர்களுக்கும் க. கைலாசபதி அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த இலக்கியச் சர்ச்சை புறக்கணிக்க முடியாத ஒரு இடத்தினைப் பெறுகின்றது.(51) சிறுகதைகள், கவிதைகள், குழந்தை இலக்கியங்கள், நாடகங்கள், நாவல்கள், இலக்கிய முன்னோடிகள் பற்றிய ஆய்வுகள், சாதியம், பெண்ணியம், மொழியுணர்வு நிலை, நாட்டு நல நாட்டம், ஆகியனவற்றை நவீன இலக்கியங்களின் அடிப்படைக் கூறுகளாக ஏற்று, திறனாய்வினை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி அவற்றை உலகு தழுவிய பார்வையில் நின்று நோக்கிய வகையில் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் முக்கியம் பெறுகின்றார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் விமர்சனங்கள் வரலாறு, சமூகம் என்ற இருநிலைப்பட்ட இயங்கியல் தளங்களினூடே நகர்ந்து பார்வை வீச்சினை ஆழ - அகலப் படுத்தியுள்ளது. இவருடைய நூல்களில் பொதுவாக அரசியல், சமூக, பொருளாதார பின்னணிகள் அதிகம் பேசப்படுவதையும் ஒருவிதமான மார்க்ஸிய சிந்தனைத் தளத்தின் விரிவான பார்வை வீச்சினையும் அவதானிக்க முடிகின்றது. கவிஞர் முருகையன், சி.சிவசேகரம் போன்றோர் பிற்காலத்தில் இவருடைய பிரதிபலிப்புக்களாகவே விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சித்திரலேகா மௌனகுரு, எம்.ஏ.நுஃமான், மௌனகுரு, போன்றோர் விமர்சனத்தில் அழகியல் ரீதியில் தனிமனித உணர்வுகளைத் தேட முயன்றனர்.(52) மு.தளையசிங்கம், நா.சுப்பிரமணியன், போன்றோர் ஆர்த்மார்த்த ரீதியில் இலக்கியங்கள் மீது பார்வை செலுத்தினர்.
சிதம்பரப்பிள்ளை சிவகுமாரன், சில்லையூர் செல்வராசா, தெளிவத்தை யோசப், அந்தனி ஜீவா, அருட்தந்தை எஸ்.ஜெபநேசன், குப்பிளான் ஐ.சண்முகன், ந.இரவீந்திரன் போன்றோரும் ஈழத்து விமர்சனத் துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். ஈழத்து விமர்சனம் இன்றைய நிலையில் மார்க்ஸிய சிந்தனையில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதனைக் காணமுடிகின்றது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், பொருளியல், கல்வி, தொடர்பாடல் என பல்வேறு அம்சங்கள் விமர்சன ரீதியில் இன்று நோக்கப்படுகின்றன.
தவிர்க்கமுடியாமல் படைப்புக்களும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற ரீதியில் பார்வைக்குள்ளாகின்றன. இதனால் எழுத்தாளர்கள் விமர்சகர்களுக்குப் பயப்பிட வேண்டியுள்ளதென்ற குறையும் இன்றுண்டு.எனினும் கொள்கைப் பிடிப்புடன் வெளியீட்டுக் களத்துள் தம்மை இணைத்துக்கொண்ட எழுத்தாளர்கள் விமர்சனங்களுக்குப் பயப்படுவதில்லை. இன்றைய விமர்சகர்கள் சிலர் எழுத்தாளரை எல்லை மீறி விமர்சித்து விடுகின்றனர். வேறுசிலர் அளவுக்கதிகமாகப் புகழ்ந்து தள்ளி விடுகின்றனர். இன்னும் சிலர் விமர்சனங்களை வெறும் வாழ்த்துரைகள் போல எழுதிக் கொட்டுகின்றனர். இதனால் கனதி குறைந்த இலக்கியங்கள் கூட ஒருவகையான இலக்கிய அந்தஸ்தைப் பெற்று விடுகின்றன.
உண்மையில் நல்ல படைப்பு என்பது நல்ல மனோநிலையுடன் சம்மந்தப்பட்ட விடயமாகும். ஒரு படைப்பின் உற்பத்திக்கு எவரும் கட்டளையிட முடியாது. அதற்குத் தூண்டாத் துணையாக, ஊக்கியாக விமர்சனங்கள் இருக்கலாமே தவிர நிர்ப்பந்தம் செய்வனவாக இருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல என்பதை இன்றைய விமர்சகர்கள் உணர்ந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் இன்னும் பல தரமான இலக்கியங்கள் தோன்ற வழி கிடைக்கும்

கருத்துகள்
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-