நான் கதை எழுதின கதை

“என்னதான் மனிச வாழ்க்கை சுத்திச் சுழண்டாலும் மனிசன் என்பவன் கனவுகளைச் சுமக்கும் கூடம்தானே”

என்று சொன்ன சிக்மன் பிராய்ட்டின் கருத்து உண்மைதான் போலிருக்கிறது. ஏனக்கு சிக்மன் பிராய்டு என்றால் தனியொரு ஈடுபாடு.
மனிதர்கள் கனவுகளைச் சுமந்தலையும் ஜடங்கள்தானே. அவர்கள் தங்களால் கூற முடியாததை தம் ஆழ் மனதில் புதைத்து விடுகின்றனர். அது இன்று என் மனதை குடைந்து குடைந்து உறங்கவும் விடாமல் உண்ணவும் விடாமல் பெரும் பூதமாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

உண்மையில் என்னால் என்னதான் செய்ய முடிகிறது.

“நீ யார்? நீ ஒரு மனிதன் தானே….? ”

என்னை நானே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கேட்டுத் தோற்றுப் போகிறேன்.

“ உன்னால் என்னதான் உருப்படியாய் சொல்ல முடிகிறது? நீ எதற்குத்தான் துணிந்தவனாக இருக்கிறாய்?”

ஏன்று அடிக்கடி பல வினாக்கள் வந்து என்னுள் அச்சுறுத்துகின்றன.


“எழுத்தாளனாக இருந்து இந்த உலகத்தில் நீ என்னத்தைச் சாதித்து விட்டாய்… அல்லது இனி என்னதான் சாதிக்கப் போகிறாய்…வாள் முனையை விட பேனா முனை கூர்மை என்றாயே… உன்னால் என்னதான் கிழிக்க முடிந்தது… உன் பேனா முனை என்ன மழுங்கி விட்டதா…? “

மீண்டும் துரத்துகின்றன எண்ணற்ற வினாக்கள்.

என்னால் என்னதான் செய்ய முடியும். நானும் ஒரு சராசரி மனிதன்தானே. எனக்கு நானே “எழுத்தாளன்” என்று பட்டம் சூட்டி எழுதத் தொடங்கி எத்தனை வருசமாச்சுது… இதுவரை காலமும் இல்லாமல் இப்படிப் பல கேள்விகள் என்னைத் துழைத்து எடுப்பது ஏன்…?

“எத்தினை கதைகள் எழுதியும் என்ன பயன்…? உன்னால் கால்மார்க்ஸ் சொன்ன சமூகத்தை எழுத முடிந்ததா? சமூகத்துக்காக உன்னால் உண்மையாக உழைக்க முடிந்ததா? “

இன்னும் வினாக்கள் என்னை நோக்கி நீண்டு கொண்டிருந்தன.


எனக்கு அருகில் முன் இருக்கையில் ஒரு சிங்கள்ப் பெண் முகத்தில் எவ்விதமான சலனமும் இல்லாமல் பொட்டில்லா முகத்திலும் பொங்கி வழியும் அழகும் மகிழ்வும் இழையோட… ஆஹா… என்ன வாழ்வு…

“நானும் இருக்கிறேன்…சீ தூ…”

என என்னை நானே மனதுக்குள் திட்டித் தீர்த்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு தடைவ என் சட்டைப் பையில் கைவிட்டு அடையாள அட்டையை உறுதிப் படுத்திக்கொண்டு கண்ணாடி யன்னலூடாக வெளியில் பார்க்க முனைகிறேன். மழைத் துளிகள் முகத்தில் விழுந்து குளிரூட்டின.
கண்களை மூடியபடி முகத்தை மெதுவாக உள்ளிழுத்துக் கொண்டேன். ஆமை வாழ்க்கைதான் நமக்குப் பழகிப் போனதாயிற்றே…

மூடிய கண்களினூடே விம்பங்கள் வந்து தொலைத்தன… நேற்றிரவு நான் கதை எழுத முனைந்ததும் பின் அது சரிப்படாது போகவே அது இன்றைய இரவுக்கு ஒத்தி வைக்கப் பட்டதும் மனதில் வந்து போனது.

இணையத் தளங்களினூடே அன்றாடம் பொங்கி வழிகின்ற இறப்புச் செய்திகளும் பட்டினிச் சாவு பற்றிய குறிப்புக்களும் என்னை உறங்க விடாது இறுகப் பற்றிக் கொண்டு இதயத்தைக் கனக்கப் பண்ணி, துழைத்து, துருவியெடுத்துக் கொண்டிருந்தது.

இப்போது மூடிய கண்களை விழித்து வெளியே பார்க்கிறேன்… நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது.
இப்போது அந்தச் சிங்களப் பெண் யாருடனோ சிரித்துச் சிரித்து செல்லிடத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தாள்.
நான் மெதுவாக என் இருக்கையை விட்டு எழுந்து பேருந்தின் முன் வாசல் பகுதி நோக்கி நகர்கிறேன்.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மீண்டும் அடையாள அட்டையை உறுதிப் படுத்தியபடி வேகமாக நடக்கிறேன்.

“இண்டைக்கெண்டாலும் அந்தக் கதையை எழுதி முடிச்சிட வேணும்”

என்று மனதில் எண்ணியவாறு இன்னும் வேகமாக… என் வீட்டை நோக்கி முன்னேறினேன்.
வீட்டின் படலையைத் திறந்து அடியெடுத்து வைத்ததுதான் தாமதம்

“முகங்கால் கழுவிட்டு வாங்கோ” என்றாள் மனைவி.

“ம்…இப்ப அதுதான் அவசியம்…”

என்று வாயில் முணுமுணுத்தபடி துவாயை எடுத்துத் தோழில் போட்டுக் கொண்டு நடக்கிறேன்.

“என்ன தேத்தண்ணி வைக்கவோ அல்லது……”

மீண்டும் குறுக்கிட்டாள் என் தர்ம பத்தினி.

“என்னத்தை எண்டாலும் வை வாறன்…” என்றபடி மீண்டும் நடந்தேன்.

கைகால் கழுவி மீண்ட போது ஆவி பறந்தபடி என்னை எதிர்பார்த்து காத்திருந்தது தேனீர். எடுத்து வாயில் வைத்தபோது…. அந்தக் காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன…
தேனீர் தொண்டையைத் தாண்டிச் செல்ல மறுத்தது. அப்படியே வைத்து விட்டு என் மேசையை நோக்கி நகர்கிறேன்:

“இப்பிடியே எத்தினை நாளுக்குத்தான் இருக்கிறது. உங்கடை உடம்பு என்னத்துக்குத்தான் ஆகிறது… கவலை ஆருக்குத்தான் இல்லை…’சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்’ கொஞ்சமெண்டாலும் சாப்பிடலாம்தானே…”

என்று மனைவி சொல்வதை ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டபடி… நேற்றைய கதையினைத் தொடரும் ஆர்வத்துடன் இப்போது எழுதத் தொடங்குகிறேன்.

என் கண்முன்னே வன்னியின் இன்றை நிலைமைகள் படமாக விரிகின்றது…

“என்ரை குடும்பம் எப்பிடியோ…? வன்னியில் என் உறவுகள் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்கள் கடவுளே இந்தக் கஷ்ரத்துக்குள்ளை இவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சுக் கொண்டு எப்பிடித்தான் வாழுதுகளோ…? “

என்னையும் மீறி என் கண்களில் நீர்த் துளிகள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கின்றது.

“கொட்டுகின்ற செல் மழைக்கும் , வாட்டுகின்ற பட்டிணிக்கும் நடுவிலை எப்பிடித்தான் வாடுதுகளோ…? “

என் மனம் நார்நாராய்க் கிழிந்து காற்றில் பறந்தது.

“ஒரே நாட்டில் இருந்தும் போய் பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே…ஆபத்துக்கு உதவ முடியாமல் போய் விட்டேனே… என் உறவுகளின் நிலையை அறிய முடியாமல் அந்தரப் படுகிறேனே…”

என்னால் அழுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? எதுவுமே முடியாது என்ற முடிவுடன் மீண்டும் எழுத்தொடங்குகிறேன்…
இப்போது என் பேனா எழுத மறுக்கிறது. தாளின் மையப் பகுதியில் பொட்டிட்டு அதையே சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது பேனா… என்னால் எதுவுமே எழுத முடியவில்லை.

பொய்யை எழுதி எழுதி, கற்பனையை எழுதி எழுதி எழுத்தாளன் ஆனதுதான் மிச்சம்… உண்மையை எழுதினால் உயிர் வாழ முடியாதென்ற உண்மையை என்னைப் போலவே என் பேனாவும் அறிந்திருக்குமோ என்னவோ… அதற்கு மேலும் நகர மறுக்கிறது பேனா…
என்னால் முடியவில்லை… இதற்கு மேலும் என்னதான் செய்ய முடியும்…? ஒரு முடிவுடன் எழுந்தேன். எழுதிய தாள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து… ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி… குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகக் கிழித்து தீயிட்டு எரித்தேன்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்