5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை

ஈழத்து இலக்கிய வளர்ச்சியினை உற்று நோக்குவோர் நாட்டுக் கூத்தினையும் நாடகத்தையும் பிரித்து நோக்கியதாக அறியமுடியவில்லை. அவ்வாறு பிரித்து ஆய்வதும் பொருத்தமானதாக அமையாது. சிலர் நாட்டுக்கூத்தின் ஒருவகையே நாடகம் (1) என்பர். வேறுசிலர் நாட்டுக் கூத்தின் முதிர்ச்சியான தன்மையே நாடகம் (2) என்பர். நாட்டுக்கூத்தானது மக்களின் உணர்ச்சிகளை இசை, ஆடல், பாடல், உரையாடல் மூலம் வெளிக் கொண்டுவரப் பயன்பட்ட ஒரு உத்தியாகும். இது மாவட்டம், பிரதேசம் என்ற வகையில் பாரிய வேறுபாடுகளுடன் விளங்கியது. பிரதேசத்துக்குப் பிரதேசம் கூத்து மரபுகளும் வேறுபட்டிருந்தன.

மட்டக்களப்பில் :-மட்டக்களப்பில் வழங்கிவரும் கூத்து வகையினை வடமோடி, தென்மோடி, விலாசம் என மூன்றாக வகுப்பர். வடமோடியும் தென்மோடியுமே சிறப்பிடம் பெற்று விளங்கக் காணலாம். புராண-இதிகாசக் கதைகளின் தாக்கத்தினை வடமோடியிலும் இசைமரபைத் தென்மோடியிலும் காணக்கூடியதாக உள்ளது.(3)

மன்னாரில் :-மாதோட்டப்பாங்கு அல்லது தென்பாங்கு
யாழ்ப்பாணப்பாங்கு அல்லது வடபாங்கு என இரண்டு வகையான கூத்து மரபுகள் மன்னாரில் வழக்கத்தில் உள்ளன.(4) வடபாங்கில் கடவுள் வாழ்த்து விருத்தப்பாவில் அமைந்திருக்க தென்பாங்கில் வெண்பாவில் பாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில்:-வடமோடி, தென்மோடி என இருவகைக் கூத்து மரபுகள் இங்குமுள்ளன. கரையோரப் பகுதிகளில் ஆடப்பட்ட தென்மோடிக்கூத்தில் நவீன நாடகத்தின் சாயலும் உள்ளது.

முல்லைத்தீவில் :-கோவலனார் கூத்தே இப்பகுதிக்குரியதென இனங்காணப்பட்ட சிறப்பான கூத்தாகும்.(5) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆண்டுப் பூசையின்போது கோவலனார் கூத்து ஆடப்படுவது வழக்கம்.
மலையகத்தில் :-காமன் கூத்து, அருச்சுனன் தபசு என்பன மலையகத்துக்குரிய கூத்துக்களாக இனங்காணப்பட்ட நிலையில், ‘தப்பு’ எனப்படும் மேளவாத்தியக் கருவியும் இக்கூத்துக்களில் பிரதான ஆட்டக் கருவியாக உள்ளதைக் காணலாம்.(6)

மேற்கூறிய கருத்துநிலை நின்று நோக்கும்போது, தமிழர் வாழும் பிரதேசங்களில் பண்டைதொட்டு ஒருவகைக் கூத்து மரபு இருந்ததென்பதை அறிய முடிகின்றது. பிற்காலத்தின் நவீன நாடகங்களுக்கு ஊற்றுக்காலாக இருந்தவகையிலும் இவை முக்கியம் பெறுகின்றன.



5.1.1. சுதந்திரத்துக்கு முன்னைய ஈழத்தில் தமிழில்; நாடக வளர்ச்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிமுதல் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதி வரை, ஈழத்தில் தமிழக நாடகக் குழுவினரின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பின்னர் தமிழ்நாட்டில் ‘சினிமா மோகம்’ அதிகரிக்க ஈழத்தவர் தமக்கென ஒரு நாடக மரபினைப் பின்பற்றியும், தமிழகத்தில் இருந்து கடன்பட்டும் ஈழத்தமிழ் நாடகத்துறையை முன்னேற்றப் பாதையில் நகர்த்தினர்.

கலையரசு க.சொர்ணலிங்கத்தின் வருகையுடன் ஈழத்தில் நாடகம் நவீன தன்மையுடன் முன்நகரத் தொடங்கியது. மேலைத்தேச நாடக மரபுகளை உள்வாங்கி கட்டுக்கோப்புடன் நாடகம் படைக்கும் வல்லமை பெற்றவராக இவர் விளங்கினார். கனகசபையின் ‘நற்குணசேகரன்’ (1927), அழகசுந்தரதேசிகரின் ‘சந்திரகாசன்’ (1940), க.சிதம்பரநாதனின் ‘சாவித்திரிசரிதம்’ (1917), நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘உயிரிளங்குமரன்’ (1936) போன்ற பல நாடக நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன.(7)
இலங்கைத்தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஒளிபாய்ச்சிய பெருமை பேராசிரியர் கந்தசாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை(1903-1968) அவர்களையே சாரும். அவருடைய ஆற்றல் முழுவதையும் வெளிக்கொணர்ந்த துறையாக நாடகத்துறையே விளங்குகின்றது. இவருடைய காலப்பகுதியில் நடிப்பதற்குரிய நாடகங்கள் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்க படிப்பதற்குரிய நாடகங்களும் பெருமளவில் தோன்றின.

த. சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய ‘கலையருவி கணபதிப்பிள்ளை’ என்ற சிறுநூலில் கணபதிப்பிள்ளை அவர்களின் நாடகப்பணி பற்றிக் கூறப்பட்டுள்ளது. நானாடகம்(1940), இருநாடகம்(1952), சங்கிலி(1956) போன்ற பல நாடகங்களை எழுதி நாடகப் பதிப்புலகின் பிதாமகனாகத் திகழ்ந்தார்.

‘காதலியாற்றுப்படை’ என்னும் செய்யுள் நூலும் ‘வாழ்க்கையின் வினோதங்கள்’(1954), ‘பூஞ்சோலை’(1953) என்னும் நாவல்களும் பேராசிரியர் அவர்களின் மிகப்பெரிய படைப்புக்களாகும்.(8) யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு நாடகங்களை எழுதியும் மேடையேற்றியும் அரும்பணி புரிந்தார். பல்கலைக்கழக மட்டத்தில் பலரைக்கொண்டு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றினார். பிற்காலத்தில் கிராமிய மட்டத்திலும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் செல்வாக்கினை உணரமுடிந்தது.

பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருந்த வகையில் இவரின் பங்களிப்பென்பது தமிழ் இலக்கியத் துறைக்கு இன்றியமையாததாகும்.



5.1.2. 1950 களின் பின்னைய ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சி

இலங்கை சுதந்திரம் பெறமுன்னர் கிராமிய மட்டத்தில் இருந்த நாடகங்கள், சுதந்திரத்துக்குப் பின்னர் படிப்படியாக பல்கலைக்கழக, பாடசாலை மட்டங்களில் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டன. பிரதேச நாடக மன்றங்களின் பங்களிப்பும் இக்காலத்தில் பேருதவியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

1950களின் முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் இருந்த நாடகச்சூழல் போராசான் க.கணபதிப்பிள்ளையின் வருகையுடன் பாரிய மாற்றத்துக்குட்பட்டது. 1960களின் பின்னர் ஈழத்தமிழ் நாடகம் யதார்த்தம் என்ற புதிய நெறியுடன் புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்பட்டது. சி.மௌனகுரு, தாஸிசியஸ் ஆகியோரின் வருகை இதற்குப் பேருதவியாக அமைந்தது.

இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட என்.கே.ரகுநாதனின் ‘கந்தன் கருணை’ நாடகம் புதிய மெருகுடன் சமூக முரண்பாடுகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மஹாகவி, முருகையன், அம்பி ஆகியோரின் பானாடகங்கள் பல மேடையேற்றப்பட்டன. மஹாகவியின் ‘கோடை’, ‘புதியதொருவீடு’, முருகையனின் ‘கடூழியம்’, அம்பியின் ‘வேதாளம் சொன்னகதை’ போன்றன குறிப்பிடத்தக்க சில பாநாடகங்கள் ஆகும். அ. தாஸிசியஸ் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டு இவை மேடையேற்றப்பட்டன.

1970களில் முன்னெடுக்கப்பட்ட ‘அரங்கச் செயற்பாடு’ உலக நாடக வளர்ச்சி பற்றிய சிந்தனையை எம்மவரும் பின்பற்ற வழிசெய்தது. இக்காலகட்டத்தில் பேராதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் நாடகப் பணிகள் சிறப்பிடம் பெற்று விளங்கின.(9)

பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தனின்(1924-1989) நாட்டுக்கூத்து மீட்புப்பணி இக்காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது. “ஈழத் தமிழர்களுடைய நவீனநாடகம், நடனம், நாட்டியநாடகம் ஆகியவற்றில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, இவர் தெளிவுபடுத்திய மரபுவழி நாடக உத்திகள் என்னும் வற்றாத ஊற்றுக்கள்”(10) ஆதாரமாக இருக்கும் எனப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

நவீன நாடகங்கள் பலவற்றை எழுதி மேடையேற்றிய இவர் நாட்டுக்கூத்தினை நகரத்தவர் மத்தியில் அறிமுகஞ் செய்தார். கிராமியக் கலைஞர்களை தேசிய மட்டத்துக்கு அறிமுகஞ்செய்த இவர் போட்டிகளையும், கருத்தரங்குகளையும் நடாத்தி பரிசுக்குரிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட இவரை “நாட்டுக் கூத்துக்களின் மீட்புப் பணியாளர்”(11) எனவும் அழைப்பர்.

பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்கு நிகராகப் பேசப்பட வேண்டிய மற்றொருவர் குழந்தை.ம.சண்முகலிங்கன் ஆவார். தமிழ் நாடக வளர்ச்சியில் இவருடைய வருகையானது அரங்க நிலைப்பட்ட செயற்பாடுகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது. நாடக அரங்கக் கல்லூரியின் மூலம் தரமான பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்ற பெரிதும் உதவிபுரிந்த வகையில் இவரது பணி சிறப்பானது.



5.1.3. ஈழத்தில் அண்மைக்காலத் தமிழ் நாடக வளர்ச்சி

1980 களின் பின்னர் இன முரண்பாடு உச்சக்கட்டத்தை அடைந்த போது தமிழ் நாடகங்களும் புதியதொரு வடிவினைப் பெற்று வளரத் தொடங்கியது. வீதிநாடகங்களும் (1982) இக்காலத்தில் பாரியளவில் வளரத் தொடங்கியது. குழந்தை.ம.சண்முகலிங்கம், க.சிதம்பரநாதன், பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரின் விடாமுயற்சி காரணமாக யாழப்பாணப் பல்கலைக்கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட, கிரேக்க நாடக மரபின் சாயலை உடையது(12) எனப் பேராசிரியர் சி.மௌனகுருவினால் விதந்துரைக்கப்பட்ட நாடகமான ‘மண்சுமந்த மேனியர்’ இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பெருமைக்குரியது.

90களின் பின்னர் பாடசாலைகளை மையமாகக் கொண்டும் நிறைய நாடகங்கள் தோன்றின. ஏ.ரி.பொன்னுத்துரை, ஆர்.சி.நடராஜா, கோகிலா மகேந்திரன், குறமகள், போன்ற பல நாடக ஆசிரியர்களின் வருகை இக்காலத்தில் முக்கியமானதாக அமைந்தது. இவர்கள் பாடசாலை மாணவர்களுடன் தாமும் இணைந்தும் பல நாடகங்களைப் படைத்து அதில் வெற்றியும் பெற்றனர்.

இலங்கையர்கோன் அவர்களுடன் தொடங்கிய வானொலி நாடகமரபு இக்காலகட்டத்தில் பாரிய வளர்ச்சியினைக் கண்டது. அத்துடன் பல மொழிபெயர்ப்பு நாடகங்களும் இக்காலத்தில் வெளிவந்தன. கந்தையா சிறிகணேசன் அவர்களின் ‘நிதர்சனத்தின் புத்திரர்கள்’ நாடகநூல் 90களின் பின்வந்த நாடக நூல்களுள் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. நாடகத் தொகுதிகளும், சில நாடக ஆசிரியர்கள் இணைந்து வெளியிட்ட தொகுதிகளும், வானொலி நாடகத் தொகுதிகளும் தற்காலத்தில் தமிழ் நாடகத்துறையை மேலும் வளம்படுத்த உதவுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி