5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின.

மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின.

தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார்.

தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வெளியிட்டு வ.வே.சு.ஐயர் தனக்கென ஓர் இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டார்.

தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிப் (1876) பல ஆண்டுகளின் பின்னர்தான் (1881-1925) சிறுகதை இலக்கியம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. ‘சிறுகதையின் தேய்வும் நாவலின் தோற்றமும்’ என்ற கட்டுரையில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், ‘தமிழ்ச் சிறுகதையின் தந்தை என மதிக்கப்பட்ட வ.வே.சு. ஐயர் தம்மை ஒரு கலைஞன் என்று கருதவில்லை.’(31) என்ற அடிப்படையிலான ஓர் கருத்தை முன்வைக்க,

‘காந்தி, சுதந்திரச் சங்கு போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் இடம்பெற்றனஎனினும் அவை இலக்கியச் சோதனையைத் தம் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவில்லை. மணிக்கொடியே இவ் இலட்சியத்துடன் தோன்றிய முதல் பத்திரிகை’(32)

என்று கூறிய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கருத்தும் நோக்கத் தக்கது. உண்மையில் தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த புதுமைப்பித்தன் முதல் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் வரை பின்னாளில் தோன்றிய பல சிறுகதை எழுத்தாளர்கட்கெல்லாம் களம் அமைத்துக் கொடுத்த பெருமை மணிக்கொடிக்கே உரியது. இத்தகைய இயங்கியல் தளத்தினூடே நின்று கொண்டு ஈழத்துச் சிறுகதை பற்றிய மதிப்பீட்டைச் செய்வதே பொருத்தமானதாக அமையும்.5.3.1. 1950 கள் வரையிலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

தமிழ் நாட்டினைப் போல ஈழத்திலும் முதலில் நாவல்களே தோன்றின. அதனைத் தொடர்ந்தே சிறுகதைகள் எழுதப்பட்டன. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வின் பாதிப்பே ஈழத்துச் சிறுகதைகளின் தோற்றத்துக்கான பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன எனினும் காலம் செல்லச்செல்ல உருவ, உத்தி, உள்ளடக்க முறைகளில் வித்தியாசமான பண்புகளைக் கொண்டனவாக ஈழத்தில் சிறுகதைகள் படைக்கப்பட்டன.
1960 கள் வரையிலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினைக் கூர்ந்து நோக்குகின்ற போது வெளிப்படையான மூன்று பண்புகளை அவதானிக்க முடிகின்றது. அவையாவன,


1. சரித்திர, புராண, சமூக வயப்பட்ட பண்பு
2. சாதி, வர்க்க, இன, தேசிய ஒருமைப்பாட்டியல்பு
3. சமூக வயப்பட்ட போக்கு,

என்பனவாம். இதில் இலங்கையர்கோன், சிவபாதசுந்தரம், சம்மந்தன், வைத்தியலிங்கம், நடேசையர் போன்றோர் முதற் கட்டத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுடைய சிறுகதைகளில் பெரும்பாலும் கதைகளின் மொழியாக இலக்கிய நடையே வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவர்கள் மேனகை, அகலிகை, பூதத்தேவன் கோட்டை, போன்ற புராண இதிகாசக் கதைகளையும், பாற்கஞ்சி, வெள்ளிப்பாதசரம், போன்ற கிராமிய, குடும்ப, மனித விழுமியக் கதைகளையும் படைத்தனர்.

இலங்கையர்கோன் (ந.சிவஞானசுந்தரம்-ஏழாலை) ஏறத்தாழ 30 சிறுகதைகள் வரை எழுதியுள்ளார். கு.ப.ரா.வின் கூடிய செல்வாக்குடைய இவரின் கதைகளில் குடும்ப உறவு, கிராமிய மண்வாசனை, கிராமிய வாழ்வியற் கோலங்கள், மனோரதியப் பாங்கு, உருவ நேர்த்தி முதலிய பண்புகளை அவதானிக்க முடிகின்றது. பேச்சுவழக்கினை இயல்பாகவே பயன்படுத்திய இவர் 1950 களின் பின்னர் நாடக ஆசிரியராகப் புதிய பரிமாணம் பெற்றார்.

சி.வைத்திய லிங்கம் எழுதிய ‘கங்காதீபம்’ என்ற சிறுகதைத் தொகுதியானது மெல்லிய உணர்வுகளும், கிராமிய மண்வாசனையும் கொண்ட பல சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கின்றது. சம்மந்தனுடைய சிறுகதைகள் கவிரசனையுடைய தூய மொழிப்பிரயோகம் அமைந்து கதைக்கு இயல்பான அழகினைத் தந்தன. மனிதன், சலனம், சபலம், மதம் போன்ற சிறுகதைகளைச் சான்றாகக் கூறலாம்.

1930-1940 கள் வரையான காலகட்டம் இவ்வாறிருக்க நாற்பதுகளின் பின்னர் பிரக்ஞை பூர்வமான முறையில் மக்களின் வாழ்க்கைமுறை சிறுகதைகளில் கையாளப்பட்டது. இக்காலப் பகுதியில் தோன்றிய ஒருகுழு ‘மறுமலர்ச்சி’ என்ற சங்கத்தை நிறுவி அதன்மூலம் ‘மறுமலர்ச்சி’ என்ற சஞ்சிகையைப் பிரசுரித்து நவீன இலக்கிய வளர்ச்சிக்கு ஒத்தாசை புரிந்தது.

வரதர், அ.ந. கந்தசாமி, அ.செ. முருகானந்தன், சொக்கன், சு.வே போன்றோர் மறுமலர்ச்சிக் குழுவில் இருந்துகொண்டு ஆக்கபூர்வமான கலை இலக்கியப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்து ‘மணிக்கொடி’போல் ஈழத்தில் ‘மறுமலர்ச்சி’ சிறுகதைத் துறைக்குப் புதிய உத்வேகத்தினைக் கொடுத்தது. இதன் விளைவாக மறுமலர்ச்சியின் 24 இதழ்களில் 52 சிறுகதைகள் வெளியாகின.

மறுமலர்ச்சியில் வெளிவந்த 16படைப்பாளிகளின் 25 சிறுகதைகள் அண்மையில் ‘மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பாக செங்கை ஆழியானால் (கலாநிதி க. குணராசாவினால்) தொகுக்கப்பட்டது. இதேபோல இவரால் ‘ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகை சிறுகதைகள்(2தொகுதி)’ போன்றனவும் தொகுப்பாக வெளியிடப்பட்டன.

இரண்டாவது கட்டம் 1950 களின் பின்னரான காலத்தினைக் கொண்டமைகின்றது. வ.அ.இராசரத்தினம், டொமினிக் ஜீவா, டானியல், செ.கணேசலிங்கன், பித்தன், அ.ஸ.அப்துல்ஸமது போன்றோர் இக்காலத்தில் சாதி, வர்க்கம், இனப்பாகுபாடு, தேசிய ஒற்றுமை போன்ற பல விடயங்களை முன்னிலைப்படுத்தி கதைகளை எழுதினர்.
ஐம்பதுகளில் எழுதத் தொடங்கிய இப்புதிய பரம்பரையினரில் ஒருசாரார் மார்க்ஸிய கோட்பாட்டின் அடிப்படையில் தமது இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தனர். மறுசாரார் எத்தகைய கோட்பாடுகளுமின்றி மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் தமது இலக்கியப் பிரக்ஞையை வெளிப்படுத்த முயன்றனர்.(33)

ஐம்பதுகளில் ஏற்பட்ட இத்தகைய புதிய போக்கானது அரசியல் விழிப்புணர்வும் சமூகச் சார்புப் பண்பும் கொண்டனவாக சமகாலத்தில் வளர்ச்சி கண்டது. இத்தகைய முற்போக்குச் சிந்தனை வலுவடைய முன்னரைவிட தேசியம், மண்வாசனை உணர்வுகளும் வலுவடையத் தொடங்கின.

மூன்றாவது கட்டம் முன்னைய இருநிலைப்பட்ட தன்மைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையுடன் விளங்கியது. செ.கதிர்காமநாதன், வ.அ.இராசரத்தினம், செ.யோகநாதன், செங்கைஆழியான் போன்றோரின் கதைகள் சமூக வயப்பட்ட தன்மையுடன் விளங்கின. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், தென்னிலங்கை மலையக மக்களின் வாழ்வியற் சிக்கல்கள், கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் போன்ற முற்போக்கான விடயங்கள் பரிசோதனை முயற்சியாக இக்காலக் கதைகளில் கையாளப்பட்டன.

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல், சமூகத் தளங்கள் பிரச்சினைகளுக்கே அதிகம் களம் அமைத்துக் கொடுத்தன. இதனால் அரசியல்-சமூக ரீதியான விழிப்புணர்வுகள் கலையுலகில் ஏற்பட ஆரம்பித்தன. அதன் வெளிப்பாடாகப் பலர் சிறுகதைத் துறைக்கு தம்மாலான பங்களிப்புக்களை நல்கத் தொடங்கினர்.

இவர்களில் பலர் 1940 களில் இருந்தே சிறுகதை எழுதி வருபவர்கள். இன்னும் சிலர் 1950 களில் சிறுகதை எழுதத் தொடங்கியவர்கள். வேறுசிலர் இன்றுவரை நல்ல சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் எனவே ‘முட்டை முந்தியதா பெட்டை முந்தியதா?’ என்ற விவாதங்களினை விடுத்து வெறும் பட்டியல் படுத்தலாகவன்றி அரசியல்-சமூகம் என்ற இரு நிலைகளில் ஊடாடி சுதந்திரத்தின் பின்னதான ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியினைத தனியாக நோக்குவதே பொருத்தமானதாக அமையும்.
5.3.2. 1950 களுக்கு பின்னைய ஈழத்து தமிழ்ச் சிறுகதைப் போக்கு.

1950 களின் பின்னர் இலங்கையின் இலக்கியத் தளத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தாக்கம் தீவிரமாக ஊடுருவியது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதிக்கொடுமை என்பன அவற்றின் நிறங்களுடன் அப்படியே தீட்டப்பட்டன. சோசலிச யதார்த்த வாதமும் தத்துவசார்பு வாதமும் ஒன்றுக்கொன்று சமாந்தரமான முறையில் மேற்கிளம்பின.
இன்னொருபக்கம் யதார்த்தவாதத்தை ஆயுதமாகக் கொண்ட சிலர் படைப்புக்களை வெளியிட, வேறுசிலர் திட்டவட்டமான கொள்கை இன்றிய சிறுகதைகளையும் படைத்தனர். உண்மையில் ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், இனம், சமூகம் போன்றவற்றில் கரிசனையுடன்செயற்பட்டு தமக்குள்ள சமூகப் பொறுப்பினை நன்குணர்ந்து இலக்கியங்களைப் படைப்பது அவசியமாகின்றது. இத்தகைய பன்முகப்பட்ட நிலையினை 1950களின் பின்னைய ஈழத்துச் சிறுகதைகளில் (புனைகதைகளில்) அவதானிக்க முடிகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள்முதல் நாம் கடந்துவந்த பாதை கடினமானது. 1956 களுக்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களின் அடிப்படையில் நின்று நோக்குகின்றபோது இந்த உண்மை தெரியவரும். இதனால் சுதந்திரத்தின் பின்னதான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கினை நாம்: 1980 வரையான காலகட்டம், 1980 களின் பின்னைய காலம் என இருநிலைப்பட்ட வரையறைகளுக்கு உட்பட்டே நோக்க வேண்டியுள்ளது.

முதலாவது காலகட்டம் 1956 களுடன் தொடங்குகின்றது. போக்குவரத்துச் சாதனங்கள், பாடசாலைகள் போன்றன இக்காலத்தில்தான் அரச மயமாயின. சிங்களமொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதனால் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மிகுதியான ஆர்வத்துடன் தாய்மொழிப் பற்றினை வெளிப்படுத்தினர். கே.டானியல், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன், அ.ந.கந்தசாமி, செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், யோ.பெனடிற்பாலன், க.தணிகாசலம் போன்ற பலர் பெரும் உத்வேகத்துடன் சிறுகதைகளைப் படைத்தனர்.

தூதன், ஈழமுரசு, ஈழகேசரி, தேசாபிமானி, சரஸ்வதி, தாமரை, சுதந்திரன், தினகரன், வீரகேசரி, ஈழநாடு, மரகதம், போன்ற பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் கே.டானியலின் சிறுகதைகளைப் பிரசுரித்து 150க்கு மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுத வழிகாட்டின. இவருடைய கதைகளில் மண்வாசனை பண்பு மேலோங்கி இருக்கக் காணலாம்.

மருதூர் கொத்தன், பவானி ஆழ்வார்பிள்ளை, குந்தவை, சாந்தன், அ.யேசுராசா, நந்தினி சேவியர், திக்வெல்லை கமால், ஆகியோரின் வருகையுடன் 1970களின் பின்னர் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் புதிய அனுபவப் பகிர்வுகளினையும் சுமக்கத் தொடங்கின. இத்தகைய ஆரோக்கியமான நிலையில் எழுதப் புகுந்த மலையக எழுத்தாளர்கள் பலரும் தமது தோட்டங்களில் அறிமுகஞ் செய்யப்பட்ட அநீதியான சட்டங்கள், தோட்டத் துரைமாரின் கெடுபிடிகள், அரசியல் தொந்தரவுகள் போன்றவற்றுக்கு வளைந்து கொடுக்காமல் சீற்றத்துடன் தம்மை வெளிப்படுத்தும் பரம்பரையினராகத் தோற்றமளித்தனர்.

1980களின் பின்னர் மலையக எழுத்தாளர்களின் உத்வேகம் மேலும் வலுப்பெறத் தொடங்கியது. எஸ்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ (1980), மாத்தளை சோமுவின் ‘அவர்களின் தேசம்’ (1995), ப.ஆப்தீனின் ‘இரவின் ராகங்கள்’ (1996), கே.கோவிந்தராசனின் ‘பசியாவரம்’ (1996), போன்ற நூற்றுக் கணக்கான சிறுகதைத் தொகுதிகள் மலையகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டன.(34) எழுபதுகளின் பிற்கூற்றிலிருந்து எழுதத் தொடங்கிய முல்லைமணி வே.சுப்பிரமணியம், அ.பாலமனோகரன், வன்னியூர் கவிராயர், அகளங்கன், தாமரைச்செல்வி, அன்ரனி மனோகரன், பரந்தன் புஸ்பா போன்றோரும் தரமான சிறுகதைகள் சிலவற்றைப் படைத்துள்ளனர்.
1980களில் அடுத்த காலகட்டம் ஆரம்பமாகின்றது. 1983இல் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக ‘இலங்கைத் தேசியம்’ என்ற பொதுமை நிலை பின்தள்ளப்பட்டு ‘தமிழ்த் தேசியம்’ என்ற சிறப்புணர்வு வலுவடையத் தொடங்கியது. இதனால் புதிய கோசங்களுடன் தமிழ்ச் சமூகம் மேற்கிளம்பியது. அதன் இன்னொரு கட்டமாக போர் ஏற்பட்டு நாடு சொல்ல முடியாத பல இடர்பாடுகளைச் சந்தித்தது. இதனால் மக்கள் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் தமது அசைவியக்கத்தினை மேற்கொண்டனர். இத்தகைய பின்னணியில் தோன்றிய இலக்கியங்களும் கால மாற்றத்துக்கு ஏற்ப அவற்றினைப் பதிவு செய்தன.

எண்பதுக்குப் பின்னர் தோன்றிய சிறுகதைகளின் உள்ளடக்கத்தினைக் கருத்தில் கொண்டு அவற்றில் யுத்தச் சூழலில் எழுந்தவை, புலம்பெயர் அனுபவங்கள் பற்றியன, பெண்ணியம் சார்பான கருத்துடையன என மூன்று போக்குகளை இனங்காண முடிகின்றதெனினும் பாதிக்கு மேலான சிறுகதைகள் யுத்தச் சூழலில் எழுந்தனவாக, யுத்தத்தின் பின்விளைவுகளைக் கூறுவனவாக இருப்பதும் அவதானத்துக்குரியது.

புதிய பிரச்சினைகளும், புதிய அனுபவங்களும் எமது எழுத்தாளர்களை ஊன்பதைக்க வைத்துள்ளது. தரைமார்க்கமாகவும், ஆகாயமார்க்கமாயும், கடல்மார்க்கமாயும் நடைபெற்ற தாக்குதல்களும் பீரங்கி வெடிகள், கண்ணிவெடிகள் என்பவற்றுக்கு ஆளாகி மனித உடைமைகள், உயிர்கள், உயர் ஒழுக்கங்கள் போன்றன பெரும் இழப்புக்குள்ளாக பல்லாயிரம் இளைஞர்கள் பாதுகாப்புத் தேடியும், பணம் தேடியும் உலகின் பல்வேறு திசைகளுக்கும் புலம் பெயர்ந்தனர்.(35)

அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட போரும்-அதன் விளைவுகளும் -சிதைந்து போன எமது தேசத்தின் எச்சங்களும் புனைகதைகளில் கருவாக்கப் பட்டன. க.பாலசுந்தரத்தின் ‘அந்நிய விருந்தாளி’இ த.கலாமணியின் ‘நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்’, த.தணிகாசலத்தின் ‘பிரம்படி’சுதாராஜின் ‘ஒருநாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள்’இ ரஞ்சகுமாரின் ‘மோகவாசல்’இ திருக்கோவில் கவியுகனின் ‘வாழ்தல் என்பது’இ செங்கை ஆழியானின் ‘யாழ்ப்பாணத்து ராத்திரிகள்’இ தெணியானின் ‘உவப்பு’இ நந்தியின் ‘கேள்விகள் உருவாகின்றன’ போன்ற சில சிறுகதைத் தொகுதிகளினை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம்.

யுத்தச் சூழலில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் புலம்பெயர் எழுத்தாளர்களின் ஓர் அங்கமாகத் திகழ்கின்றது. அவற்றின் தாக்கம் சமகால இலக்கியங்களிலும் தென்பட்டு நிற்கின்றது. இவர்கள் ஆரம்பத்தில் போரியல் அவலங்களைப் பற்றி எழுதினாலும் பின்னர் தாம் புலம்பெயர்ந்த நாடுகளின் வாழ்க்கை அனுபவங்களினையும், சிக்கல்களையும், மனவுணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தத் தொடங்கினர். கலாசாரச் சிக்கல், அந்நிய கலாசாரத்துடன் ஒன்றமுடியாத அவலநிலை ஆகியவற்றையும் கருப்பொருட்களாகக் கொண்டனர். இளவாலை விஜயேந்திரன், கருணாகர முர்த்தி, அரவிந்தன், பார்த்தீபன், சுரேஸ் சுப்பிரமணியம் போன்றோரின் சிறுகதைகள் நல்ல எமுத்துக் காட்டுக்கள்.

கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, தேவகௌரி, சந்திரா தியாகராசா முதலியோரின் சிறுகதைகளில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வு கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருகின்றது. சமூக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் ஆணாதிக்கத்துக்கு எதிரான உணர்வுகளை பெண்ணியம் சார்புடைய எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளினூடே வெளிப்படுத்தினர். பவானி ஆழ்வார்பிள்ளையின் ‘கடவுளும் மனிதரும்’ சிறுகதைத் தொகுதி மேற்குறித்த முக்கியமான போக்குடன் விளங்குகின்றது.

கிட்டத்ததட்ட ஒரு நூற்றாண்டின் விளிம்பில் நிற்கின்ற ஈழத்துச் சிறுகதைத் தடத்டை உற்று நோக்குகின்ற போது பலரின் தாக்கம் அதில் இருப்பதை உணர முடிகின்றது. இவர்களில் யார் சிறப்பானவர்கள்? யார் நல்ல கதையாசிரியர்கள்? என்ற வாதப்பிரதி வாதங்களைப் பின்தள்ளிவிட்டு பார்ப்பதே மேலானது. ஏனெனில் மாறுதலுக்குரிய காலத்தையும் மொழியையும் சரியான முறையில் பின்பற்றுபவனே காலம் தாண்டியும் பேசப்படுவான் என்பது இலக்கிய வரலாற்றுண்மையாகும்.

நம்மிடையே உள்ள மரபான கதைசொல்லும் முறைகளினையும் நமது நிலவியல்சார் தொன்மங்களினையும் வரலாற்றின் தடங்களையும் நுகர்வுக் கலாசாரத்தின் எதிர்பார்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை இன்றைய நவீன சிறுகதை எழுத்தாளர்களிடம் நிறையவே உள்ளது. ‘கதை சொல்லுதல் மரணத்துடனான விளையாட்டு’(36) என்கிறது அரேபிய தொல் கதை மரபு. யதார்த்தமாக பார்த்தால் வாழ்தல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமோ அதுவரை கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஏனெனில் பொதுவாகக் கதைகள் ஓரிடத்தில் தங்குவதேயில்லை.(37) அவை எவர் வாயிலாவது அல்லது எந்த வழியிலாவது சொல்லப்பட்டு விடுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. என்பதை உணர்ந்து நவீன புனைகதை எழுத்தாளர்களும் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)