செப்டம்பர் 28, 2009

எங்கள் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள்


எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

செப்டம்பர் 25, 2009

ஆறாந்திணை - 05

பாலை :- மணலும் மணல் சார்ந்த இடமும்.


மணல் தின்ற புல்வெளி

அனல் தின்ற பனந்தோப்பு

புதையுண்டு எரியுண்ட

மீதிக் காடுகள் எல்லாம்

மணல் மேடாய்த் திட்டுகளாய்...


எரியுண்ட தேசத்தில்

சிதைவுகள் மட்டுமே மீதியாக...

கால் மிதிக்கும் இடமெல்லாம்

பல்லிளிக்கும் கூரிய முட்கள்

யுத்த காண்டம் முடிந்த பின்னர்

சிதைவுகளாய் எச்சசொச்சம்.


வாழ்விழந்த வயல்வெளிகள்

பொலிவிழந்து...

பூவிழந்து தளிரிழந்து...

கருகி நிற்கும் மரங்கொடிகள்...

சிதைவுகளைச் சுமந்தபடி

தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்...


மீண்டும் ஓர் நாள்

தோண்டப்படுவதற்காய்

காத்திருக்கும் மண்தரைகள்

எல்லாம் ஒன்றுகூடி

எரியுண்ட தேசத்தின்

காட்சிகளாகிப் படமெடுக்க

நான் மட்டும் ...

இழந்தவற்றைத் தேடியபடி

மீண்டும்... மீண்டும்...........


செப்டம்பர் 24, 2009

ஆறாந்திணை - 04

குறிஞ்சி :- மலையும் மலைசார்ந்த இடமும்.




மலையொத்த மனிதரெல்லாம்

ஏதிலியாய்வாழ்விழந்து

ஒருவர் பின் ஒருவராக

சிறைப்பட நடந்தனர்.



சிறுமலைகள் கூடிநின்ற

பூமியைப் புறங்கண்ட

பின்னொரு நாளில்

மலைக்காடுகள் ஒன்றுகூடி

மலைகளை மெல்ல மெல்லத்

தின்றுகொண்டிருந்தன.



மக்களையும் மண்ணையும்

நீண்ட மலைத் தொடர்கள்

பிரித்துக் கூறு போட்டபோது

சூரியன் மலை இடுக்கில்

விழுந்து இறந்து போனான்.

நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக

உதிர்ந்துகொண்டிருந்தன.

நிலவு தேய்ந்து தேய்ந்து

மறைந்து போனது.

இன்னும்....

மனிதர் மட்டும் ஏதிலியாய்

இழந்தவற்றை நினைத்தபடி

வான் பார்த்து............



செப்டம்பர் 22, 2009

இனி சினிமா.....?

எங்கே போகிறது தமிழ் சினிமாவும் தொலைகாட்சிகளும் என்னும்படியாக அண்மைக்கால நிகழ்வுகள் அமைகின்றன.

போட்டி போட்டு படங்களை வாங்கும் தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகை நிறுவனங்கள் தமது படத்துக்கு மட்டும் முன்னுரிமை தருகின்றன.


சில சனல்களில் செய்தியின்போதுகூட தமது படங்கள் பற்றிய பேச்சுத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் விலை கொடுத்து வாங்கிய படம் ஓடாது எனத் தெரிந்தும் ஆறு ஏழு வாரங்களாக தமது தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் வைத்து கொண்டாடி ரசிகர்களை தன்பால் கவர்ந்திழுத்து ஒருமுறையாவது படத்தை பார்க்கவைத்து வீணே மூன்று மணி நேரத்தை தொலைத்து பணத்தையும் வீணாக்க வைக்கும் இவர்களை என்ன செய்வது?


முன்னர் ஒருகாலத்தில் பாடல்களை எல்லா சேனல்களிலும் பார்க்க முடிந்தது இன்று காலம் மாறிவிட்டது.

அந்தந்த படப் பாடல் காட்சிகளை பார்க்க வேண்டுமாயின் குறிப்பிட்ட படத்தை வாங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. இதில் பில்டப்பு வேற.


ஆதங்கத்துடன் தியா.....

கண்ணீர்


ஊனை உருக்கி

உடலை வருத்தி

தினம்

சோற்றுக்கு வழியின்றி

சொந்த மண்ணைப் பிரிந்து

அகதி முகாமில்

இடர்படும் தமிழன்

உண்ட சோற்றில் உப்பில்லை

கண்ணீர் துளி விழுந்து

கசக்கிறது சோறு…

செப்டம்பர் 20, 2009

ஆறாந்திணை - 03

நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும்



பல்லாயிரம் உயிர் தின்றும்
அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல்
இரைச்சல் நிறைந்த உலகின்
சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம்.

எம் மனம் போல்
அமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.

பெருகி வந்து உயிர் குடித்து
உயிர்ச் சுவடழித்து - எம்
நிம்மதியைக் குலைத்து
எம்மை நிர்க்கதியாக்கிய அலை.

மணல்த் திட்டால் மூடி
எதுவும் நடவாதது போல்
பாசாங்கு செய்யும்
நீண்ட கரை

எல்லாம் ஒன்றுகூடி
இரைகிறது
இன்னும் வேண்டுமென்று.


செப்டம்பர் 19, 2009

ஆறாந்திணை - 02

முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும்



ஆயிரமாயிரம் நினைவலைகள்


முட்டி மோதின.


நினைவழியாப் பொழுதுகளில்


உடும்பு முயல் மான்


வேட்டையாடிய காடுகள்


தனிமையில் உறையக் கண்டேன் .


காட்டாற்றின் கரையினிலே


கதையளந்த காலம் போய்


மாயத் தோற்றங்கள்


மனத் திரையில்


கோலமிடக் கண்டேன்.


மவுனமாக வரையப்பட்ட


என் கவிதையின் வரிகள் போல்


அசைவற்றுக் கிடக்கிறது


என் பூர்வீகக் காடு.

செப்டம்பர் 18, 2009

தாய்



சுதன் லண்டனில் இருந்து வந்து முன்று நாளாகியிருந்தது. ஏழு வருட லண்டன் வாழ்க்கை அவனை எவ்வளவோ மாற்றியிருந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் தனது நண்பர்களைச் சந்தித்த சந்தோஷத்தில் அவர்களுடன் பீச்சு பார்க் என்று எல்லா இடமும் சுற்றினான்.

வகைவகையான வெளிநாட்டு உணவுகள், குளிர்பானங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினான்.

வீடு திரும்பும்போது மணி இரவு பத்தைத் தாண்டியிருந்தது. அவனின் வரவுக்காக தாய் விழித்திருந்தாள்.


“அம்மா பசிக்குது” “………………..”


“அம்மா பசிக்குது சோறு இருக்கா…? ”


“இரப்பு வாறன்”

என்றபடி தாய் அடுப்படிக்கு ஓடினாள்.

இருந்த சோறு கறி எல்லாம் போட்டு குழைத்து திரணையாக்கி ஒரு உருண்டையாக கையில் கொடுத்தாள் தாய்.


“ ஆ… என்ன அருமை இப்பிடி ஒரு சாப்பாடு சாப்பிட்டு ஏழு வருஷமாச்சு… இப்பதான் சாப்பிட்டமாதிரி திருப்தியாக இருக்கு…” என்றான்.


அவனை லண்டன் வாழ்க்கை எவ்வளவோ மாற்றியிருந்தாலும் ஒரு தாயாக அவனிடம் எந்த மாற்றத்தையும் காணாது வியந்து நின்றாள்.

செப்டம்பர் 17, 2009

தொடரும் காதல்




இப்போதுதான்
பத்து ஆண்டுகள் கழித்து

திரும்பி வந்திருக்கிறேன்.


எம் இரு விழிகள் சந்தித்து

கதைபயின்ற அந்தக் கட்டிடம்

வெட்டிச் சாய்க்கப்படாமல்

இன்னும் கிளை விட்டு

நிழல் பரப்பும் பெருமரம்...

'சில்' என்ற காற்று வீசும்

பெருவெளி மைதானம்

கல்லில் வடிக்கப்பட்ட இருக்கைகள்

எல்லாம் அப்படியே இருந்தன

எம் இருவரது இதயம் போல்.


பெருமரத்தின் நிழற்பரப்பில்

நிலம் மறைத்துப் போர்வையாக

உதிர்ந்திருந்த இதழ்கள்

காற்றில் தாளம் போட்டன.


எம் கண்கள் கதை பயின்ற

பல்கலை வளாகம்

இப்போது அந்நியமாய் போனாலும்

எம் இருவர் காதல் மட்டும்

வாழ்வாகி வலம் கொளிக்க

கண்டேன் இன்று.



செப்டம்பர் 16, 2009

ஆறாந்திணை - 01

மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும்



எதுவும் விதைக்கப்படாத

வயல்வெளிகள்

யாரும் புதிதெடுக்காத

தரிசுநிலங்களாக…

கண்மூடித் திறப்பதற்குள்

கற்சிலையாய் அமைந்துபோன

மனிதர்கள்


வாழ்தல் எப்படிக் கொடூரமானது?

கரடுமுரடான பாதை போல்

கடினமானதா என்ன?

எதுவுமே புரிவதில்லை…


கால் பதிக்க முடியாத

சேற்று வயல்வெளிகள்

கட்டாந்தரையாகிக்

கண்ணீர் வடிக்கக் கண்டேன்.



ஆற்றுப்படுக்கைகளில்

ஆங்காங்கே

பிளவுகள்.. வெடிப்புகள்.


உடைப்பெடுத்துப் பாயும்

வெற்றுக்குளங்களில்

செத்துக் கிடந்தன

நீர்க்காக்கைகள்.

குளக்கட்டின் மரநிழலில்

சிலையாகச் சமைந்திருந்தார்

பிள்ளையார்…

செப்டம்பர் 15, 2009

காதல் வானம் - பாகம் - 03


பட்டென்று வெடித்துப் பூக்கும் பருத்தியாய் இமை திறந்த சுரபி கைகளைமேலே தூக்கி சோம்பல் நீக்கி நெட்டி முறித்தாள்.


“ஒரு பொம்பிளைப் பிள்ளை நித்திரையால எழும்புற நேரத்தை பாரன்…அந்தப் புள்ளையும்இருக்குது அதைப் பாத்தெண்டாலும் வேளைக்கு எழும்பலாம் தானே…பாவம் அந்தப்பிள்ளைவிடியக்காலமையும் குருவிக் காவலுக்கு போட்டுது.”


செண்பகம் வாய்கு வந்தபடி பேசிக்கொண்டு தன் கருமங்களில் கண்ணுங்கருத்துமாயிருந்தாள்.


“அம்மா இத்தினை நாளும் நான் விடிய நாலு மணிக்கெல்லாம் எழும்புறனான்தானேஇப்பதானே இப்பிடி கனநேரம் நித்திரை கொள்ள கிடைச்சிருக்குது…கேட்டால் வேளைக்குஎழும்பி செய்து தருவன்தானே அதுக்கேனணை இப்பிடி கத்துறாய்…”


“அதில்லை மோனே கொப்பா வயலுக்கு வரப்பு வெட்ட போனவர்…சுமதியும் குருவிக் காவலுக்கு குளத்தடி வயலுக்கு போட்டாள். சாப்பாடு கொண்டுபோக வேணும்…சிறுபோக விதைப்பெண்டால் சும்மாயே…”


“நான் இண்டைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகட்டே அம்மா…”


“என்ன மோனே லூசுத்தனமாய் கதைக்கிறாய் கொப்பான்ரை குணம் தெரியும் தானேவயல் பக்கம் உன்னை விடக்கூடாதெண்டு பொத்திப் பொத்தி அந்தாள் வளக்குது நீ என்னண்டால்…”


“இப்ப படிப்பு இல்லைத்தானேயம்மா ஒருநாளைக்கு…”


“முதல்லை நீ எழும்பி முகத்தை கழுவி குளி பாப்பம். உன்ரை வேலையை மட்டும்நீ ஒழுங்காய் செய்தால் அதுவே கோடி புண்ணியம்…”


வெங்காயம் வெட்டிப் போட்டு பால் விட்டு கரைத்த பழங்கஞ்சிப் பானையை எடுத்துபையில் வைத்தபடி…சுமதிக்கு போட்டு வைத்திருந்த புட்டுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு,


“நான் போட்டு வாறன் மோனே…”

என்றபடி செண்பகம் நடக்கத் தொடங்கினாள்.


“அம்மா நான் இண்டைக்கு காசிக்குஞ்சியோட பாலைப்பழம் வெட்ட காட்டுக்கு போறன்…அப்பாட்டை நேற்றைக்கே சொல்லிட்டன் அவர் போகச்சொல்லி சொன்னவர்எதுக்கும் ஒருக்கால் இப்பவும் சொல்லி விடுங்கோ…”


செண்பகம் தொலைவில் சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தவள்தானும் காட்டுக்கு போக வெளிக்கிட்டாள். இதுவரை நாளில் அவள் பலமுறைபாலைப்பழம், வீரைப்பழம், உலுவிந்தம்பழம், கரம்பைபழம் பிடுங்க காட்டுக்குபோயிருக்கிறாள்.

அப்ப எல்லாம் தகப்பன் பக்கத்துணைக்கு போவது வழக்கம்.முதன்முறையாக தந்தையின் துணையின்றி காட்டுக்கு போகப்போகிறாள்.


“காசியண்ணையோடை எண்டால் பயமில்லை போட்டுவா…”


என்று தந்தை கூறியதுமுதல்அவளுக்கு எப்ப விடியும் எப்ப காட்டுக்கு போகலாம் என்றிருந்தது. இப்போதுஅதற்காக காத்திருக்கிறாள்…காசி பெரிய வேட்டைக்காரன் “குஞ்சி” என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும்அவரைத் தெரியும். “காசிக்குஞ்சி” என்றுதான் சின்ன வட்டனுகள் முதல் பெரிசுகள்வரை அவரை அழைப்பது வழக்கம்.

ஏந்தப் பெரிய மிருகம் என்றாலும் காசியை கண்டால்ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிடுமளவிற்கு பெருத்த உடம்பு பலம் கொண்டமனிசன் அவர். கறுத்து பருத்த உடம்பு சுருண்டு திரண்ட கேசம் என காசியின் தோற்றமேமுதலில் பார்த்தவர்களுக்கு வயிற்றில் புளிகரைக்கும்.

ஆனால் அந்த உருவத்தினுள்இத்தனை தயவு தாட்சணியமா என்பதை அவருடன் பழகிப் பார்த்தவர்கள்தான்புரிந்து கொள்ள முடியும்.நீண்ட நேரமாக காத்திருந்த சுரபிக்கு இருப்புக்கொள்ளவில்லை எழுந்து அங்குமிங்குமாக நடந்தாள்.

காட்டுக்குப் போவதற்கான அடுக்குகளை எடுத்துக்கொண்டு வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வேலிக் கடப்பை கடக்க… அவள் சற்றும் எதிர்பாராத விதமாக…


வளரும் ......

செப்டம்பர் 13, 2009

பேசும் பேனாமுனை

என் பேனா

செங்குத்தாய் ...

கொஞ்சம் கோணலாய்

நிலைக் குத்திக்

கண்ணீர் வடிக்கிறது .
வார்த்தைகள் செய்து கொடுத்த

இட வசதிக்குள்

வாழப் பிடிக்காமலோ

என்னவோ

மீண்டும் மீண்டும்

வெற்றுத் தாள்களில்

கோடுகளாய்

வளைவுகளாய்

புள்ளிகளாய்

இன்னும் பலவாய்

தன்னை நுழைத்து

திருப்திப் பட்டுக்கொள்கிறது

செப்டம்பர் 12, 2009

மனிதாபிமானம்

பேருந்தில் அந்த ஊனமுற்றவர் மிகவும் சிரமப்பட்டு ஏறி ஒவ்வொருவராக மன்றாடிப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.

சிலர் பார்த்தும் பாராது போல் இருந்தனர். வேறு சிலர் முகத்தை வெளியே திருப்பி கண்ணாடி யன்னலூடாக வெளியே பார்த்து விறைத்திருந்தனர்

இன்னும் பலர் காதில் வயர் மாட்டி கைப்பேசியில் பாடல் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருந்தனர்.


அந்த ஊனமுற்ற முதியவரோ ஏமாற்றத்துடன் எல்லோரையும் பார்த்தார். யாரும் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை.

ஈற்றில் வெறுமையான தன் பிச்சைப் பாத்திரத்தை ஒருதடவை பார்த்துப் பெருமூச்சு விட்டபடி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டார்.


அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு...

அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.........


செப்டம்பர் 11, 2009

காதல் வானம் - பாகம் - 02

காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள்.

“பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…”


“விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…”


“ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே”


“இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…”


“அதுசரி அவையின்ரை பிரச்சினையை அவையளே தீர்க்கலாம்தானே அதுக்கேன் உன்னை கூப்பிட்டவை… நீயென்ன சமாதான நீதவானே…”


“நீயென்ன ஒண்டும் தெரியாமல் பேய்க்கதை கதைக்கிறாய்… பரணரூபன் வீட்டிலை ஒண்டென்றால் அது என்ரை வீட்டை நடந்தமாரித்தான்…அவனார் என்ரை நண்பனெல்லே… அதைவிடு அவன்ரை தங்கச்சிக்காக எண்டாலும்…அவளும் என்னோடை நல்லமாரித்தானே…”


“நல்லமாரி எண்டால்…”


“நல்லமாரி எண்டால் நல்லமாரித்தான்…”

சீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க,


“உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…”


“ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவும் உன்னை பாக்க வேணும் எண்டு சொன்னவா முடிஞ்சா ஒருக்கா அந்தப்பக்கம் வாவன்…”

என்றான் ஏளனமாக


“பாத்தியே அத்தான் கதையோடை கதையாய் நடந்த தூரங்கூடத் தெரியேல்ல..”


கோடைகாலமென்பதால் குளத்தில் அவ்வளவாக தண்ணீர் இல்லையென்றாலும் சிறுபோக விதைப்புக்கு ஏற்றாப்போல அரைக்குளம் தண்ணீருக்கு மேல் நிறைந்து கரையில் வந்து முட்டி மோதி தாளம் போட்டுக்கொண்டிருந்தது. மருதமரங்கள் குளக்கட்டின் ஓரத்தில் எல்லைக் காவலர்களாக ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன…

அவற்றின் வேர்கள் குளக்கட்டை பேர்த்து உட்புகுந்து பாதுகாப்பு வலையமைத்து குளத்தை காவல் செய்தன. வழுவழுப்பான மருதமரத்தின் ஒரு பக்க வேரிலே ஆசுவாசமாக இருந்த சுரபி குளத்தை பார்த்து அதன் அழகில் புலனை செலுத்தத் தொடங்கினாள்.


“குளத்தை பாத்தியே அத்தான் எவ்வளவு வடிவாயிருக்கெண்டு…”


தாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு பஞ்சணை போல புதுக்கோலம் பூண்டு கண்ணுக்கு களிப்பூட்டிக்கொண்டிருந்தது குளம். இடையிடையே அல்லிகள் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டன. பாவம் அல்லிகள் கொட்டாவி விட்டே காலத்தைக் கடத்துகின்றன போலும். சூரியகாந்தி சூரியனின் திசையெல்லாம் திரும்பி நாள் முழுக்க தவமிருந்து காதல் செய்ய அல்லிகளோ கள்ளத்தனமாக சூரியனுடன் உறவாடவல்லவா முனைகின்றன.


“ஆ…தாமரைப்பூ… எவ்வளவு வடிவாயிருக்குது”


வாயைப் பிளந்தாள் சுரபி அவன் என்ன நினைத்தானோ சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு உடனே குளத்தில் இறங்கி கைநிறைய தாமரைப் பூக்களைப் பிடுங்கி வந்து அவளிடம் கொடுத்தான். அவள் மெய்மறந்து தாமரைப் பூவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கொத்துக் கொத்தாக தாமரைப்பூவை கையில் வைத்து குழந்கைபோல சுரபி விளையாடுவதை பார்த்து மனம் லயித்திருந்தான். நீல நிற வானத்தையே உள்வாங்கி போர்வையாக போர்த்திக் கொண்டு மலேரியா காய்ச்சல் வந்து கிடப்பவர் போல் அலைக்கரங்கள் உதறலெடுக்க நடுங்கிக் கொண்டிருந்தது குளத்து நீர்.

நீண்ட காலமாக குளத்துக்குள் தவமிருக்கும் கருமைநிறமான பட்ட மரங்கள் கொக்குகளின்… நாரைகளின்…மீன்கொத்திப் பறவைகளின் இருப்பிடங்களாக… தொலைவில் கரையோரமெல்லாம் விளாத்தி மரங்கள் வேலியமைத்து மழை காலத்தில் குளத்துக்கு தண்ணீர் வரும் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. திடீரென மீன் கொத்தும் பறவைகள் குளத்தில் விழுவதும் எழும்புவதுமான ஆரவாரித்துக்கொண்டிருக்க நீர்க்காக்கைகள் தங்களின் கரிய உடலை ஊறப்போட்டு நீரில் மூழ்குவதும் மேலே வருவதுமாக வித்தை காட்டிக்கொண்டிருந்தன.

பெரிய சிறகுகளை உடைய ஆலாப்பறவைகள் தங்களின் நீண்ட பனங்கிழங்கு போன்ற அலகுகளினால் மீன்களைக் கொத்தி பந்தாடிக்கொண்டிருந்தன.


“சுரபி இந்த இடத்தில தான் போன கிழமை நான் ஒரு பெரிய கரடியை கண்டனான்”


“என்ன கரடியோ…ஐயோ…”


“ஓம் … முகமெல்லாம் சடை மூடியபடி கரடிப்புள்ள வந்து கொண்டிருந்தார். நானும் என்ன நடக்குதெண்டு பாத்துக்கொண்டிருந்தன்…அந்த மரத்தடில வந்ததும் நிமிந்து எழும்பி ரண்டு கால்ல நிண்டுதுபார்… எனக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கிட்டுது…”


“பிறகு…”

என்றாள் சுரபி ஒருவித நடுக்கத்துடன்…


“பிறகென்ன பிறகு என்னைக் கண்டதும் கரடிக்கு பயம் வந்திட்டுது… அது ஒரே ஓட்டமாய் ஓடிட்டுது…”


“ஓமத்தான் அது ஏதோ புது மிருகமெண்டு நினைச்சு பயந்து ஓடியிருக்குமோ தெரியாது”

என்றாள் கிண்டலாக, மாலைச் சூரியன் மருதமரத்தடியில் ஒழித்துக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. இருவரும் நேரம் போனதுகூடத் தெரியாமல் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.


“அத்தான் நேரம் போகுது நான் வீட்டை போகப் போறன்”

என்றாள் சுரபி. அதை ஆமோதிப்பது போல தலையசைத்த சீலன், தூரத்தில் கையை காட்டி,


“அங்கை பாரன் ஒரு மான்கிளையை”

என்றான்.


“ஆ… என்ன வடியாயிருக்கு படத்திலை வாறது போல…ஆ..ஆ”

அதன் அழகில் லயித்தாள் சுரபி.


“நீ பின்னேரத்தில இந்தப் பக்கம் வந்தாலெல்லோ…இதெல்லாம் நெடுக நடக்கிறதுதான், உனக்குத்தான் புதிசு…சும்மா வாயைப் பிளக்காதை…வலையன்கட்டு பாலம்போல கிடக்கு”


“சும்மா போ அத்தான் உனக்கு எல்லாத்துக்கும் ஒரு நக்கல்தான்… நவ்வி எண்டால் மான் எண்டு ஒருபொருள் இருக்கெண்டு உனக்கு தெரியுமேயத்தான்…ராமாயணத்திலையும் கலிங்கத்துப் பரணியிலயும் நவ்வியெண்டதுக்கு மான் எண்டுதான் பொருள் சொல்லியிருக்கினம் நான் படிச்சனான்…”


என்று சுரபி கூறிக்கொண்டிருக்க அவனுடைய முகத்தில் ஒருவித விகாரப் புன்னகை தோன்றி நொடிப் பொழுதில் மறைந்தது.


“உன்ரை படிப்பும் கத்தரிக்காயும் உதைப் படிச்சும் கடைசியிலை மண்ணைக் கிண்டிற பிழைப்புத்தானே… சும்மா படிப்பு படிப்பெண்டு உங்கை என்ன நடக்கிதோ ஆர்கண்டர்…”


“உனக்கு படிக்கிறதெண்டால் பாவக்காய் தின்னிறமாரியெண்டு எனக்கு தெரியுந்தானே அதுக்காக எல்லாரையும் படிக்கக் கூடாது எண்டு நீ நினைக்கிறது ஆகத்தான் ஓவர்…ஓ.. சொல்லிப் போட்டன்…”


“ஏன் நான் சொன்னதிலை என்ன பிழையிருக்குது…படிச்சு கிழிச்சு கடைசியில பார் காசுதான் செலவழிஞ்சது மிச்சமாயிருக்கும்… கலியாணத்துக்கு பிறகு மனிசனுக்கு சமைச்சுப் போடத் தெரிஞ்சால் காணும் அதுதான் பொம்புளப் புள்ளக்கு அழகு…”


“உனக்கெங்கே படிப்பைப் பற்றி விளங்கப் போகுது சும்மா போஅத்தான்… அதை விடு உன்னோடை சண்டை பிடிச்சு என்ன பலன் இருண்டிட்டுது நான் வீட்டை போகப்போறன்…”


சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினாள் சுரபி. செய்வதறியாமல் அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.


செப்டம்பர் 10, 2009

பள்ளிக்கூடம்


“குட்மோர்னிங் சேர்… குட்மோர்னிங் ரீச்சர்…”

என்றபடி பாடசாலை வளவினுள் பவ்யமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ரம்யா.

சிறு வயது முதலே பள்ளிக்கூடம் போவது என்றால் ஒவ்வொருநாளும் பெரிய போராட்டம்தான்.

ஆனால் இன்று…

வழமைக்கு மாறாக தானாக எழுந்து குளித்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு மடிப்புக் குலையாத உடையணிந்து …

பார்க்கவே பெரிய அழகியாட்டம்…முதல் தடவையாக பள்ளிக்கூட ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடவுளை வேண்டிக்கொண்டு நிமிர

“குட்மோர்னிங் ரீச்சர்…”

என்றாள் ஒரு சிறுமி பதிலுக்கு

“குட்மோர்னிங்”

என்றபடி சிறு புன்முறுவலித்தாள் ரம்யா.

செப்டம்பர் 09, 2009

மழை பற்றி...


மனிதர் கூடி

மனிதர் கூடி

பூமி இப்போ பாரமாச்சு

வயல்வெளிகள்

குளங்கள் தோறும்

கட்டிடங்கள் நிரம்பிப் போச்சு

காடு மலை சோலையெல்லாம்

கட்டாந்தரை ஆகியாச்சு - இனி

கண்ணீர் விட்டு அழுதால் மட்டும்

தண்ணீர் என்ற நிலையாய் போச்சு

செப்டம்பர் 08, 2009

காணாமல் போனவன்



“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ”

இது தினசரி புவனாவின் மகன் தினேஷ் கேட்கும் கேள்வி.

“இந்தக் காலண்டர் முடிய அப்பா வருவாரடா”

கண் கலங்க பதில் கூறுவாள் புவனா.

“எப்ப அம்மா இந்தக் காலண்டர் முடியும்? ”

ஒண்டொண்டாய் ஒவ்வரு நாளும் கிழிக்க எப்பாவது ஒருநாள் முடியும்”

நாளுக்கு நாள் காலண்டர் பக்கங்கள் குறைந்து கொண்டு போனது… இப்போது பழைய இடத்தில் புதிய காலண்டர்

“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ”

தினேஷின் அதே கேள்வி…

“இந்தக் காலண்டர் முடிய வருவாரடா……..”

கண் கலங்கினாள் புவனா.

காதல் வானம் - பாகம்-01

“சக்தியை நோக்க சரவணபவனார்
திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிங்கினியாட…”

பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது.

“திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை”

செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள்.
தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் கேட்பார்கள். இடையிடையே மணியம் விதானையார் மைக்கைப் பிடித்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
பூசாரி ஆறுமுகம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். மஞ்சள் சால்வை கட்டிய சில தொண்டர்கள் அங்குமிங்கும் அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.
செண்பகமோ எப்ப திரை விலகும் எப்ப முருகனருள் கிடைக்கும் என விழிகள் அகலத் திறந்து முருகன் சந்னிதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஊரின் ஒரேயொரு சைவக் கோயில் அந்த சிறிய முருகன் கோயில்தான்.
குளக்கட்டுப் பிள்ளையாரும் முருகனும் தான் அவளுடைய நீதிமன்றங்கள். இருபது வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலை இருந்து முருகன் வேல் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த போது முன்னின்று உழைத்தவர்களில் இவளுடைய கணவன் அம்பிகைபாலனுக்கும் பெரும் பங்குண்டு.
முருகன் கோயில் அமைந்துள்ள இரண்டேக்கர் காணியில் அரை ஏக்கருக்கு சொந்தக்காரனும் இவன்தான். தன்னுடைய விடா முயற்சியாலும் உடல் வலிமையாலும் நிலத்தைப் புரட்டி எடுத்து தொழில் செய்யும் விவசாயிகளில் அம்பிகைபாகனும் ஒருவன். முறுக்கேறிய உடல் திரண்டு பருத்த கைகள் மண்ணிறத்திலான கேசம் என ஐம்பது வயதாகி விட்டது என்ற அடையாளமே இன்றி அவனது தோற்றம் அமைந்திருந்தது.
வேலியோரம் இருந்த புல் பூண்டுகளை செதுக்கி கோயில் சூழலை துப்புரவாக வைத்திருப்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்த அவனுடன் சில இளவட்டங்களும் கூடித் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இடையிடையே தன் கணவனின் பார்வைப் பரிமாற்றத்தை ருசித்த வண்ணம் கந்தன் அருளுக்காக ஏங்கிக் கிடந்தாள் செண்பகம். ஆனால், சில நிமிஷங்களில்…

“அக்காள் உன்னைக் கண்டு பிடிக்கவே முடியல்லை… அந்தப் பக்கம் சமையல் வேலை நடக்குது மரக்கறி வெட்ட ஆளில்லையக்கா வாறியே…”

அவளுக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. இருந்தாலும்,

“முருகன் சன்னிதி தானே… நாங்கள் என்ன உவையளுக்கே பணிவிடை செய்யிறம் முருகனுக்குதானே”

என்ற முடிவுடன் எதுவும் பேசாமல்,
“உம்”
என்றபடி எழுந்து நடக்கத் தொடங்கினாள். அப்போது வேலியோரம் அம்பிகைபாலன் யாரோ கொடுத்த தண்ணீரை ஒரு மூச்சு பிடித்துக்கொண்டிருந்தான். சமையல் வேலையில் எல்லோரும் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். செண்பகம் தன்பாட்டில் மரக்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவளருகில் வந்து அமர்ந்தாள் செல்லம்மா கிழவி.
வரிஷத்திலை ஒருமுறை வாற பெரிய விழாக்களில் இதுவும் ஒன்று என்பதனால் ஊரிலுள்ள எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதுதான் வழமை.

“என்ன பெத்தா எப்பிடியணை இருக்கிறியள்”

செண்பகம்தான் முதலில் பேச்சு கொடுத்தாள்.

“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில இருக்கிறம் மோனே”

என்றவாறு இன்னும் அருகில் வந்தாள் கிழவி. ஊரிலை உள்ள பழைய கால மனிசர்களில் கிழவியும் ஒருத்தி. 'பெத்தா' என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும் தெரியும். மனிசி பதினொன்று பெத்ததாலயோ என்னவோ பெத்தா என்ற பெயர் நிலைச்சு விட்டது. காசி பெரிய வேட்டைக்காரன் “காசிக்குஞ்சியின் மனிசி” என்றால் ஊரிலை ஒரு தனி மரியாதை.

“என்ன மோனே உன்ரை பொட்டை எப்பிடி இருக்கிறாள் மோனே… வெளியிலை வாறதையே காணல்ல”

என்றாள் கிழவி.

“அவள் பெத்தா தானுண்டு தன்ரை வேலையுண்டு என்று வீட்டுக்கையும் தோட்டத்துக்கையுமாய் அடங்கிக் கிடக்கிறாள்… இப்பதானேணை கம்பஸ் முடிச்சு வந்தவள் வேலையும் கிடைக்கலை அதுதான்…”

“அது சரி மோனே உதுகள் உங்கடை இனசனம் இருக்க… பெட்டைக்கு மாப்பிளை எடுக்கேலாமல் போட்டுதே உங்களாலை…அதுவும் மூத்தவள் இருக்க இளையவளுக்கு அதுக்குள்ளை என்னமோனே அவசரம் வந்து வெளியிலை பிடிச்சு அனுப்பினிங்கள்… ஏதோ நடக்கட்டும்… நெருப்பில்லாமல் புகையுமே…”

என்றாள் மிகவும் தாழ்ந்த குரலில்.

“உதெல்லாம் ஆரணை உனக்கு சொன்னது?”

என்றாள் சற்று இறுகிய குரலில்.

“உதுக்கே மோனே ஊரிலை ஆக்களில்லை… உன்ரை கொண்ணன் பொஞ்சாதிதான் சொன்னவள்…”

பெரிய சக்கரைப் பூசணிக்காயை உருட்டிச் சீவியபடி கிழவி சொல்லிக்கொண்டிருந்தாள். செண்பகம் குரலில் ஒரு நிராசையுடன்,

“வேற ஒண்டும் சொல்லலையோ?”
என்றாள்.
“இல்ல மோனே ஏன்?”
ஓன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு,

“நான்…நான்…போக வேணுமணை பூசை தொடங்கப் போகுது போல கிடக்கு…”

என்றபடி மெதுவாக எழுந்தாள். அவளுக்குள் பெரும் மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் அதனை மறக்க அவள் மனம் ஒப்பவில்லை. நடந்த அந்த சம்பவம் தானே இத்தனைக்கும் காரணம். அது நடந்திராவிட்டால் இண்டைக்கு… ............

வளரும் ......

செப்டம்பர் 07, 2009

ஒற்றை வார்த்தை


வேலை முடித்து

மாலை வேளையில்

சாலை நெரிசலில்

சிக்கித் தவித்து

விரையும் வண்டியில்

வீடு விரைந்து

இருட்டும் பொழுதிலே

கட்டியணைத்து

நெஞ்சில் புதைத்து

முத்தம் கொடுத்து

ஆரத் தழுவி

உச்சி மோர்ந்து

உள்ளம் குளிர

என்

செல்லக் குழந்தை

சொல்லி அழைக்கும்

"அம்மா" என்ற

ஒற்றை வார்த்தையில்

அத்தனை களைப்பும்

அமுங்கிப் போகும்

செப்டம்பர் 06, 2009

இனிவரும் காலம்...


உலகம் இப்போ

ஒரு உருண்டை வீடு

அதில் மனிதர் எல்லாம் -தினம்

அலையும் வெறும் கூடு


இயந்திரங்கள் மனிதராகி

வேர்வை சிந்தாது உழைக்கலாம்

மனிதரெல்லாம் ஒன்று கூடி

இயந்திரமாய்ப் பிளைக்கலாம்


காலம் போற போக்கில் நாளை

கலியாணங்கள் நடக்கலாம்

ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத

தம்பதியர் கூடியே

தத்துப் பிள்ளை தத்தெடுக்க

இயந்திரங்கள் சமைக்கலாம்


வீட்டுக் காவல் வேலைகென

இயந்திரத்தில் நாய்களாய்

தோட்டம் முதல்

தொலைவு வரை

ஓடியோடி உழைத்திட

இயந்திரமாய் மனிதனை

சந்தையிலும் வாங்கலாம் .



செப்டம்பர் 01, 2009

அதிரூப நாயகியே


கண்களைப் பார்க்கிறேன்
கனிவு தெரிகிறது
உதடுகள் எதையோ
சொல்ல நினைக்கிறது
புருவம் உயர்ந்து
விரிந்து எழுந்து
தாளம் போடுகிறது
கூந்தல் வழிந்து
தோளில் தவழ்ந்து
நளினமாடுகிறது
போட்டுமின்றி
பூவுமின்றி-உன்
பிறைநுதலில் ஒரு
அழகிய கோலம் கண்டேன்
அலங்காரம் ஏதுமின்றி
அழகாகத் தெரிகிறாயே
அதிரூப நாயகியே
கருணை மலை பொழிந்து
காட்சி தரும் கன்னிகையே
இத்தனை அழகாக
உனைப் படைத்தான்
தாள் வணக்கம்