அக்டோபர் 30, 2020

காலத்துயர்


காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது. உலகின் ஏதோ ஒரு மூலையில். எங்கோ ஒரு நாட்டில். தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.


ஒரு காகத்தின் கரைதல். சேவலின் கூவல். குருவிகளின் சங்கீத ஓசை. குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு.

வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட. மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு.

இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்று நாட்டுச் சூழலில் தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கிலச் சொற்களில் பேசிக் கொடுப்பதை உண்டு, குடித்து, உறங்கி, கண்ணீர் வடித்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

வாழ்க்கையைப் பல கோணங்களினூடாக பார்த்த அவனுக்கு இது ஒன்றும் புதிய விடயமில்லைத்தான் ஆனாலும் இதுவரை நிகழ்ந்த எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அருகிலிருந்து பங்கெடுத்த தோழ் கொடுத்த அவன் குடும்பம் இப்போது அவனுடன் இல்லை என்பதும் அவன் எந்தக் குடும்பத்துக்காக இத்தனை காலம் படாத துன்பமெல்லாம் பட்டானோ அவர்களை ஆளாக்க முடியவில்லையே என்ற கவலையும் அவன் மனதைக் கனமூட்டிக்கொண்டிருக்க இதய சுமை தாங்காது பாரம் தலைக்கேறியது.

இடம்பெயர்ந்து சிறு குடிசையில் வசித்த போதும் விறகு வெட்டிக் குடும்பத்தைப் பொன்போல் காத்து வந்தார் கணேஸ். மூத்த மகன் நன்றாகப் படித்த போதும் இளையவன் சீலனும் மகள் செல்லாவும் நன்றாகப் படிக்கவேண்டுமென்று படாத பாடெல்லாம் பட்டு உழைத்து வந்தார்.

காலச்சுழற்சியில் மகள் செல்லாவும் போராட்டத்தில் இணைந்துவிட ஆடிப்போன கணேஸ் மூத்தமகன் சுயனை உடனடியாக வௌிநாடொன்றுக்கு அனுப்பும் விருப்பம் கொண்டவராய். உறவுகளிடம் உதவி கேட்டு கூடவே தான் சேமித்த பணத்தையும் முதலிட்டு கொழும்புக்கு அனுப்பினார்.


நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. இன்று போகலாம் நாளை போகலாம் என ஏஜன்ஜி சொல்லி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.

இரவு பத்தைத் தாண்டியிருந்தது. தாய் தொலைபேசி அழைப்பில் இருப்பதாக வந்த செய்தி கேட்டு ஓடியவன் திகைப்புடன்

“அம்மா என்ன இந்த நேரத்திலை”மகனின் குரலைக் கேட்டதும்

“ஐயோ” மறுமுனையில் தாய் விமலா அழத்தொடங்கினாள். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விக்கிப்போய் வாயடைத்து நின்றான்.

“அப்பா விறகு வெட்ட போன இடத்தில”

“இடத்தில என்னம்மா சொல்லு”

“மிதிவெடிலை கால் ஒண்டு”

“கடவுளே” கண்கள் இருண்டு அவனுக்குள் ஏதோவெல்லாம் செய்யத் தொடங்கியது. இனம் புரியாத பீதி விரட்டியது.

“அம்மா அப்ப உடன நான் வாறன்”

“இல்லையப்பன் நீ வரவேண்டாம். இனி எங்கடை வாழ்க்கை உன்ரை கையிலைதான்” அவளால் எதுவுமே அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவனுக்கு இரவு முழுவதும் நரகமாக விளங்கியது. அதிகாலையில் இருளுடன் இருளாக ஏஜன்ஜி வந்தான். எல்லோரும் அவனுடன் போகத் தொடங்கினர். அத்தனையும் இளைஞர்கள்
“களவாக இத்தாலி போக கப்பல்தான் சிறந்தவழி” என்ற ஏஜன்ஜியின் பேச்சினை நம்பி வௌிக்கிட்டு விட்டனர்.

கப்பல் தள்ளாடித் தள்ளாடி பயணத்தைத் தொடர்ந்தது. ஒருநாள், இரண்டாம் நாள், இப்படி இடைநடுவில் பிடிபட்டு அந்நிய நாட்டுச் சிறையில் இப்படி தன்னுடைய வாழ்வு அடைபட்டு போகுமென்று அவன் எப்படி நினைத்திருப்பான்.

இப்போது அவனுடைய கனவில் அடிக்கடி அம்மா வந்து போகிறாள். அப்பா ஊன்று கோலுடன் நடக்க, அம்மா விறகு வெட்டி குடும்பத்தைக் கொண்டு நடத்துகிறாள். தம்பி சீலன் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டு அவளுடைய வலது கையாக,

தங்கை செல்லாவும் எங்கே? எப்படி இருக்கிறாளோ? நீளிருள் பொழுதுகளில் கூட இதுவே சிந்தனையாகச் சோர்ந்திருப்பான்.

காலம் உருண்டோடியது தன்மீதே அவனுக்கு வெறுப்பாக, எல்லாவற்றையும் மறக்க படாத பாடெல்லாம் பட்டுக்கொண்டிருந்தான். தனக்குப்  பயித்தியம் பிடித்து விட்டதோ என்றுகூட சிலவேளையில் எண்ணுவான்.

அன்றும் வழமைபோல விடிந்தது. நீண்ட நாட்களின் பின்னர் சிறை அதிகாரியின் வாகனக் கண்ணாடியில் முகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது அவனுக்கு. அவனால் நம்பவே முடியவில்லை கண்களை வெட்டி மீண்டும் பார்த்தான்.

பெரிய மீசை, நீண்ட தாடி,  சோர்ந்து போன உடம்புடன்,  நீண்ட முடியில் அழுக்குப்படிந்து பிசுபிசுத்துப்போய்,ம்  சிறுவயதில் அவன் சாப்பிட மறுக்கும் போது அம்மா பயமுறுத்தும் 'உம்மாண்டி' கண்ணாடிக்குள் இருந்து பயமுறுத்த மறுபடியும் அவனுக்குள் அம்மாவின் நினைவு எட்டிப்பார்த்தது.


அக்டோபர் 20, 2020

பிரியாவிடை


நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே  இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப்  போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல்,  மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது.  

 

அந்தப் பிரபலமான தொழிற்சாலையில் என்ஜினியரிங் மானேஜராகச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. மிகவும் புகழ் போன கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கம்பெனி அது. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பி விடுவது வழக்கம். இந்தப் புதிய பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து என் வீட்டு அலாரம் கொஞ்சம் வேகமாகவே செயற்பட ஆரம்பித்திருந்தது. 

 

இந்த ஒருவருட காலத்தில் குறைந்தது ஒரு பத்துப் பேரையாவது புதிதாக நேர்காணல் செய்து என் குழுவில் பணிக்கு அமர்த்தியிருப்பேன். ஆனால் முதல் முறையாக இந்த வாரம் ஒருவருக்குப் பிரியாவிடை அளிக்கப் போகிறேன் என்பதை நினைக்க மனம் படபடப்பாக இருந்தது. 

 

கரோலின் பூர்வீகம் ஜப்பான். வயதுக்கும் தோற்றத்துக்கும் தொடர்பே இல்லாமல் மிகவும் உயர்ந்த, அழகிய தோற்றத்தில் மேக்கப் இல்லாமலே பளபளக்கும் சிரித்த முகம் அவளது. கராத்தேயில் பிளாக் பெல்ட் எடுத்திருப்பதாக ஒருதடவை சொல்லியதாக ஞாபகம். 

 

அவளின் கணவன் ஜேம்ஸ் இவளுக்கு இரண்டாவது கணவன். இவள் அவனுக்கு மூன்றாவது மனைவி. ஜேம்ஸைப் போலவே அவளின் முன்னைய கணவனும் அமெரிக்கக்காரன்தான்.

 

இந்தக் கம்பெனியில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் அனுபவசாலி. அறுபத்தைந்து வயதிலும் துடிப்பாக வேலை செய்யக் கூடிய ஒரு புத்திக் கூர்மையான என்ஜினீயர். அவளுக்கு நிகரான ஒருவரை உருவாக்கக் குறைந்தது ஐந்து வருடங்களாவது தேவை. அப்படி ஒரு இன்ஜினீயரை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்.

 

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அவளின் ரிட்டயர்மெண்ட் பைல் என் லேப்டாப் பையில் அடைந்து கிடந்தது.


“போனதும் முதல் வேலையாக இன்று அவளுடைய ரிட்டயர்மெண்ட் பைலில் சைன் பண்ண வேணும்”.


“இந்தக் கொரோனா காலத்தில் சரியாக பிரியாவிடை கூடக் கொடுக்க முடியவில்லையே”


என்ற வருத்தம் இன்னொரு பக்கம் வாட்டிக் கொண்டிருந்தது.  

 

சந்திச் சமிக்கை விளக்கின் சிவப்பில் நின்றபோது,


“இன்னும் பதினைந்து வினாடிகளில் பச்சை விழும்”


என்பது புரிந்தது. பச்சை விளக்கு விழுந்ததும் காரின் வேகத்தைக் கூட்டினேன். ஒரு அடிக்குமேல் குவிந்திருந்த பனியில் சிக்கிச் சில்லுகள் 

 

“ஸ்...ச்…” 

 

எனச் சத்தமிட்டபடி முக்கி மீண்டும் வலுப் பெற்றன. ஸ்டேரிங் வீலை மிகவும் மெதுவாகச் சுற்றிக் கார் போகும் போக்கில் விட்டேன். 

 

“பிரேக் பிடிக்காதே” 

 

அடிக்கடி காலுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தது புத்தி. மெதுவாக… மிகவும் மெதுவாக ஸ்டேரிங் வீலை இடது பக்கம் திருப்பி எனது பாதைக்கு விட்டேன். 

 

அதிகாலைவேளை, பனிப்பொழிவு நாள் என்பதால் என்னையும் பனியையும் தவிர வீதியில் அந்த நேரத்தில் யாருமே இருக்கவில்லை. வீதி ஓரளவுக்கு வெறிச்சோடிப் போய் இருந்தது என்றே சொல்ல வேண்டும். 

 

வலமும் இடமுமாகச் சுழன்று கழைத்துப்போன வைப்பர் இறுகிக்,


“கிரீச்... கிரீச்…”


என்ற உரசலுடன் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு நிண்டது. உறைபனியை உருகவைக்கும் திரவத்தை இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பீச்சியடித்து மீண்டும் வைப்பரை இயக்கினேன். மிகவும் மிருதுவாக இடமும் வலமுமாகச் சாமரம் வீசிக் கொண்டிருந்தது. 

 

கண்ணைக் கூர்மையாக்கியபடி  பனிப் பொழிவால்  மூடுவதும் விழிப்பதுமாக இருக்கும் கண்ணாடியினூடே வீதியை உற்று நோக்கியபடி காரைச் செலுத்திக் கிட்டத்தட்ட ஒருமணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் ஒருவாறாக கம்பெனியின் பார்க்கிங்கில் காரைப் பார்க் பண்ணியபோதுதான்,

 

“அட மடப்பயலே ஸ்னோ பூட்ஸை மறந்துபோய் விட்டிட்டு வந்திட்டாயேடா”


என்று பொறித் தட்டியது.  அவசரத்தில் வழமையான சப்பாத்தைப் போட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்பது அப்போதுதான் புரிந்தது. 

 

பனியில் காலை எடுத்து வைத்தபோது உறைந்து போயிருந்த பனிக்கு மேல் குவிந்திருந்த புதிய பனியில் கால் புதைந்து சறுக்கியது. இன்னொரு பக்கம் காலுறைகள் நனைந்து பாதங்கள் விறைப்பெடுத்தன.

 

மெதுவாக அடிமேல் அடிவைத்துத் தவளாத குறையாய்க் கம்பெனியின் பாதுகாப்புக் கதவில் உள்நுழைவு அட்டையைத் தொட்டபோது கதவு தானாகத் திறந்து கொண்டு


“உள்ளே வா”


என்பது போல ஒற்றைக் காலில் நின்றது. 

 

“கவனம் வெளியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்”


ஒரு பெண்ணின் மென்மையான குரல் ஆங்கிலத்தில் ஒலித்து ஓய்ந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது. 

 

காலையில் இருந்து மத்தியானத்துக்கு இடையில் இரண்டு மூன்று மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியதாயிற்று. இதற்கிடையில் ஜூம் மீட்டிங், டீம்ஸ் மீட்டிங் என்று HR உடன் இரண்டு ஒன்லைன் மீட்டிங்குகள். சனி ஞாயிறு கிடைத்த ஓய்வு எல்லாம் கூட்டிக் கழித்துத் திங்களில் வேலையாக மாறிவிடுவதால், எனக்கு இந்தத் திங்கள் கிழமைகள் பிடிக்காமலே போய்விட்டன.

 

கையெழுத்துப் போட்டு வைத்திருந்த கரோலின் பைல் மேசையில் இருந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தது.


“சாப்பிட்டு முடித்தபின் இதை ஸ்கான் செய்து ஈமெயிலில் HRக்கு அனுப்ப வேணும். அதுக்கு முதல் கரோலிடம் போன் பண்ணி உறுதிப்படுத்த வேணும்”


மனதில் நினைத்தபடி சாப்பிட்டு முடித்த போது கைப்பேசி அலறியது.

 

“ஹல்லோ…”

 

“உங்களை மீட் பண்ண ஒரு பத்து நிமிடம் தருவீர்களா?”


மறு முனையில் கரோல் பேசினாள்.

 

“ஆம் ஒரு மணிக்கு வாருங்கள்”


சொல்லி விட்டு அவளுடைய பைலை எடுத்து ஸ்கேன் செய்து முடித்த போது,

 

“உள்ளே வரலாமா…”


கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். கருப்பு பான்ட், கறுப்புச் சட்டை, கறுப்புக் கோட், அரையடி உயரக் குதி போட்ட காலணி. அவள் உயரத்துக்கு என்னால் நிமிர்ந்து பார்க்க முடியாது. 

 

“உக்காருங்கள்…” என்றேன். 

 

“முதலில் மன்னியுங்கள்... நான் உங்களுக்கு நிறைய வேலை குடுத்திட்டேன். ஆனால் இப்ப ஒரு சின்னச் சிக்கல்” 

 

“சொல்லுங்கள்”

 

“பேமிலி ப்ரோப்ளம்... நான் இப்ப ரிட்டயர்மெண்ட் செய்யிற ஐடியா இல்லை... என் முடிவை மாற்றி விட்டேன்”

 

“என்னது?” 

 

வெள்ளிக்கும் திங்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை என்னால் உணர முடியவில்லை. அவளே தொடர்ந்தாள்.

 

“எனக்கும் என் கணவருக்கும் இடையில ஒரு சின்ன முரண்பாடு. இந்தக் கொரோனா காலத்தில அவர் நிறையவே மாறிட்டார். நாங்கள் பிரியிறது எண்டு முடிவெடுத்திட்டோம். எங்கட ரெண்டு பேரின்ர பெயரில வீடு இருக்கிறதால அத விக்கப் போட்டிருக்கிறோம். அது வித்த பிறகு நான் என் பெயரில ஒரு வீடு வாங்க வேணும் வேலையை விட்டால் லோன் எடுக்க கஷ்டம். அதனால இன்னும் ஒரு ரெண்டு வருசம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன்”


அவள் சொல்லச் சொல்ல மேசையில் இருந்த அவளது பைல் என்னைப் பார்த்துக் கேலியுடன் சிரிப்பது போல இருந்தது.



அக்டோபர் 13, 2020

கடவுளின் குழந்தை




முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.

இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. 

***

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். 

அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.

 நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பிஞ்சுக் கைகளின் அசைவு இந்தப் பின்பனி காலத்தில் இன்னும் கிடைக்கவில்லை. 

அவர்கள் எங்காவது குடிபெயர்ந்து விட்டார்களா? அப்படியாயின் அங்கு தெரிந்த வெளிச்சம்?  நகரும் உருவங்கள்?  பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

“சிலவேளை புதிதாக யாரும் குடிவந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்காது.” மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

அவளது தாயும் தந்தையும் வழமையாக வெயில் கால மாலைப் பொழுதில் வீட்டின் முன் முற்றத்தில் மது அருந்தியபடியோ அல்லது புகைத்த படியோ ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவள் சைக்கிள் ஓட்டி அல்லது பந்தடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். பல வேளைகளில் தாயும் தந்தையும் அவளுடன் விளையாடியும் பார்த்திருக்கிறான். பெரும்பாலான மாலை வேளைகளில் அந்த வீட்டின் கார் பாதையில் யாரும் உள்நுளையாதபடி தற்காலிகமாக தடுப்பு வேலி போடப்பட்டிருக்கும். இப்போது எதுவும் அங்கில்லை. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  

அவனால் சரியாக உறங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அந்தக் கையசைப்பு,  சிரிப்பு,  எல்லாம் அவனை வட்டமிட்டபடியே இருந்தது. 

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு போவதுபோல் அந்த வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். 

தூண்டில் போடுபவர்கள் ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். மின்னேசோட்டாவின் ஒரு சிறு நகரின் அழகிய ஆற்றங்கரையை அண்மித்ததாகத்தான் அந்த வீடு இருந்தது.

***

இந்த இடத்துக்கு ஆரம்பத்தில் அவன் குடிபுகுந்த போது அவனுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது. ஊருக்கு புதியவனாக இருந்தமையால் அவனுடன் அமெரிக்கர்களுக்கான அறிமுகம் கிடைக்க நாளானது. அவன் அடிப்படையில் ஒரு இந்து சமயத்தவனாக இருந்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கழிப்பதனால் நாளடைவில் பலரின் அறிமுகம் அவனைத்தேடி வந்தது.

“குட்மோர்னிங் மிஸ்டர் சேகர் ”

சத்தம் வந்த திசையில் பார்த்தான். மிகவும் அறிமுகமான அந்த நபர். 

“குட்மோர்னிங் ஆமிசேர்” 

அவர் ஒரு காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியமையினால் அவருக்கு அப் பெயரை அவன் சூட்டியிருந்தான்.

அடிக்கடி தேவாலயத்தில் சந்திக்கும் மிகவும் முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயர் “ராயன் ரொபலிங்க்” எல்லோரும் அவரை “ராயன்” என்று அழைப்பர்கள். மிகவும் மரியாதைக்குரிய நபராக எல்லோராலும் மதிக்கப்படுபவர் அவர்.

“கிட்டவா இருக்கிறீர்கள்?” 

“ஆம் அதுதான் என்வீடு”

மூன்றாவது வீட்டைச் சுட்டிக் காட்டி, “அதுதான் என் வீடு நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம்” என்றார் ராயன். 

அவனுக்கு பிரகாசமான ஒரு ஒளி பிறந்தது. அவன் யாரைப் பற்றி அறிய வேண்டி வந்தானோ அவர்களின் வீடும் மிஸ்டர் ராயன் வீடும் எதிரெதிரே இருந்தது.

“நன்றி” சொல்லிவிட்டு நிச்சயமாக வருவதாக உறுதியளித்த பின் கையசைத்து விடைபெற்றான்.

***

அன்று வேலைநாள் இல்லையாதலால் மாலையே ஆமிசேரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். நல்லகாலம் அவர் வீட்டிலேயே இருந்தார். 

“உள்ளே வாருங்கள்” மிகவும் பரிவுடன் உபசரித்தார். 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

அப்படியே நாய் பற்றிய பேச்சின் இடையே சிறிது நேரத்தில் ஆமிசேரின் துணைவி சுடச்சுடச் சூப்புடன் வந்தாள். அவளையும் அவன் ஓரிரு தடவை ஆமிசேருடன் தேவாலயத்தில் பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் அவனுக்கான பழக்கம் அதிகமானதாக இருக்கவில்லை. இப்போது எதிர் வீட்டைச் சுட்டிக் காட்டி, 

“அங்கு ஒரு சிறுமி போன வருடம் விளையாடியதாகவும் இந்த வருடம் அவளை அந்த வீட்டில் காண முடியவில்லையே”  ஆமிசேர் இப்போது எதுவும் பேசவில்லை. அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. நீண்ட அமைதிக்குப் பின் அவரின் துணைவி பேசத் தொடங்கினாள். அவள் பேச்சில் ஒரு விதமான கரகரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் பேசப் பேச அவன் அப்படியே உறைந்து போய் விட்டான். அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து அந்த பிஞ்சு குழந்தையைப்  பற்றிய விசாரிப்பில் இறங்கவில்லையாதலால் அப்படியே காற்றுப் போன பலூனாகி விட்டான்.

“கடவுளே நீ இத்தனை கொடுமைக்காரனா?”

“எதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தை உன்னிடம் அழைத்தாய்?’’

“அவளைப் பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“அச் சிறு பிஞ்சு புற்றுநோய் வந்து இறந்த நாளில் இருந்து அவளின் தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியில் போவதும் இல்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர். இப்போது தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்’’

மிஸ்ஸிஸ் ராயன் பேசி முடிக்க, கண்களில் வழிந்த நீரை கையால் துடைத்தபடி, எதுவும் பேச முடியாதவனாக அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

***

ஒரு கோப்பை தேநீருடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு வேலைக்கு போகத் தயாரானான். அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறு மழலையின் அழகிய முகம் பட்டெனத் தோன்றி மறைவதால் இப்போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூடக் கிடையாது.

அன்று மாலை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அச் சிறு பிஞ்சின் தாயும் தந்தையும் அவன் வீட்டின் முன் தெருவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. கணவனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

 “கடவுள் இருக்கிறான்” 

மனதுக்குள் நினைத்தபடி உள்ளே சென்று மறைந்தான்.