பிரியாவிடை


நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே  இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப்  போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல்,  மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது.  

 

அந்தப் பிரபலமான தொழிற்சாலையில் என்ஜினியரிங் மானேஜராகச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. மிகவும் புகழ் போன கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கம்பெனி அது. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பி விடுவது வழக்கம். இந்தப் புதிய பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து என் வீட்டு அலாரம் கொஞ்சம் வேகமாகவே செயற்பட ஆரம்பித்திருந்தது. 

 

இந்த ஒருவருட காலத்தில் குறைந்தது ஒரு பத்துப் பேரையாவது புதிதாக நேர்காணல் செய்து என் குழுவில் பணிக்கு அமர்த்தியிருப்பேன். ஆனால் முதல் முறையாக இந்த வாரம் ஒருவருக்குப் பிரியாவிடை அளிக்கப் போகிறேன் என்பதை நினைக்க மனம் படபடப்பாக இருந்தது. 

 

கரோலின் பூர்வீகம் ஜப்பான். வயதுக்கும் தோற்றத்துக்கும் தொடர்பே இல்லாமல் மிகவும் உயர்ந்த, அழகிய தோற்றத்தில் மேக்கப் இல்லாமலே பளபளக்கும் சிரித்த முகம் அவளது. கராத்தேயில் பிளாக் பெல்ட் எடுத்திருப்பதாக ஒருதடவை சொல்லியதாக ஞாபகம். 

 

அவளின் கணவன் ஜேம்ஸ் இவளுக்கு இரண்டாவது கணவன். இவள் அவனுக்கு மூன்றாவது மனைவி. ஜேம்ஸைப் போலவே அவளின் முன்னைய கணவனும் அமெரிக்கக்காரன்தான்.

 

இந்தக் கம்பெனியில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் அனுபவசாலி. அறுபத்தைந்து வயதிலும் துடிப்பாக வேலை செய்யக் கூடிய ஒரு புத்திக் கூர்மையான என்ஜினீயர். அவளுக்கு நிகரான ஒருவரை உருவாக்கக் குறைந்தது ஐந்து வருடங்களாவது தேவை. அப்படி ஒரு இன்ஜினீயரை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்.

 

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அவளின் ரிட்டயர்மெண்ட் பைல் என் லேப்டாப் பையில் அடைந்து கிடந்தது.


“போனதும் முதல் வேலையாக இன்று அவளுடைய ரிட்டயர்மெண்ட் பைலில் சைன் பண்ண வேணும்”.


“இந்தக் கொரோனா காலத்தில் சரியாக பிரியாவிடை கூடக் கொடுக்க முடியவில்லையே”


என்ற வருத்தம் இன்னொரு பக்கம் வாட்டிக் கொண்டிருந்தது.  

 

சந்திச் சமிக்கை விளக்கின் சிவப்பில் நின்றபோது,


“இன்னும் பதினைந்து வினாடிகளில் பச்சை விழும்”


என்பது புரிந்தது. பச்சை விளக்கு விழுந்ததும் காரின் வேகத்தைக் கூட்டினேன். ஒரு அடிக்குமேல் குவிந்திருந்த பனியில் சிக்கிச் சில்லுகள் 

 

“ஸ்...ச்…” 

 

எனச் சத்தமிட்டபடி முக்கி மீண்டும் வலுப் பெற்றன. ஸ்டேரிங் வீலை மிகவும் மெதுவாகச் சுற்றிக் கார் போகும் போக்கில் விட்டேன். 

 

“பிரேக் பிடிக்காதே” 

 

அடிக்கடி காலுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தது புத்தி. மெதுவாக… மிகவும் மெதுவாக ஸ்டேரிங் வீலை இடது பக்கம் திருப்பி எனது பாதைக்கு விட்டேன். 

 

அதிகாலைவேளை, பனிப்பொழிவு நாள் என்பதால் என்னையும் பனியையும் தவிர வீதியில் அந்த நேரத்தில் யாருமே இருக்கவில்லை. வீதி ஓரளவுக்கு வெறிச்சோடிப் போய் இருந்தது என்றே சொல்ல வேண்டும். 

 

வலமும் இடமுமாகச் சுழன்று கழைத்துப்போன வைப்பர் இறுகிக்,


“கிரீச்... கிரீச்…”


என்ற உரசலுடன் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு நிண்டது. உறைபனியை உருகவைக்கும் திரவத்தை இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பீச்சியடித்து மீண்டும் வைப்பரை இயக்கினேன். மிகவும் மிருதுவாக இடமும் வலமுமாகச் சாமரம் வீசிக் கொண்டிருந்தது. 

 

கண்ணைக் கூர்மையாக்கியபடி  பனிப் பொழிவால்  மூடுவதும் விழிப்பதுமாக இருக்கும் கண்ணாடியினூடே வீதியை உற்று நோக்கியபடி காரைச் செலுத்திக் கிட்டத்தட்ட ஒருமணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் ஒருவாறாக கம்பெனியின் பார்க்கிங்கில் காரைப் பார்க் பண்ணியபோதுதான்,

 

“அட மடப்பயலே ஸ்னோ பூட்ஸை மறந்துபோய் விட்டிட்டு வந்திட்டாயேடா”


என்று பொறித் தட்டியது.  அவசரத்தில் வழமையான சப்பாத்தைப் போட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்பது அப்போதுதான் புரிந்தது. 

 

பனியில் காலை எடுத்து வைத்தபோது உறைந்து போயிருந்த பனிக்கு மேல் குவிந்திருந்த புதிய பனியில் கால் புதைந்து சறுக்கியது. இன்னொரு பக்கம் காலுறைகள் நனைந்து பாதங்கள் விறைப்பெடுத்தன.

 

மெதுவாக அடிமேல் அடிவைத்துத் தவளாத குறையாய்க் கம்பெனியின் பாதுகாப்புக் கதவில் உள்நுழைவு அட்டையைத் தொட்டபோது கதவு தானாகத் திறந்து கொண்டு


“உள்ளே வா”


என்பது போல ஒற்றைக் காலில் நின்றது. 

 

“கவனம் வெளியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்”


ஒரு பெண்ணின் மென்மையான குரல் ஆங்கிலத்தில் ஒலித்து ஓய்ந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது. 

 

காலையில் இருந்து மத்தியானத்துக்கு இடையில் இரண்டு மூன்று மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியதாயிற்று. இதற்கிடையில் ஜூம் மீட்டிங், டீம்ஸ் மீட்டிங் என்று HR உடன் இரண்டு ஒன்லைன் மீட்டிங்குகள். சனி ஞாயிறு கிடைத்த ஓய்வு எல்லாம் கூட்டிக் கழித்துத் திங்களில் வேலையாக மாறிவிடுவதால், எனக்கு இந்தத் திங்கள் கிழமைகள் பிடிக்காமலே போய்விட்டன.

 

கையெழுத்துப் போட்டு வைத்திருந்த கரோலின் பைல் மேசையில் இருந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தது.


“சாப்பிட்டு முடித்தபின் இதை ஸ்கான் செய்து ஈமெயிலில் HRக்கு அனுப்ப வேணும். அதுக்கு முதல் கரோலிடம் போன் பண்ணி உறுதிப்படுத்த வேணும்”


மனதில் நினைத்தபடி சாப்பிட்டு முடித்த போது கைப்பேசி அலறியது.

 

“ஹல்லோ…”

 

“உங்களை மீட் பண்ண ஒரு பத்து நிமிடம் தருவீர்களா?”


மறு முனையில் கரோல் பேசினாள்.

 

“ஆம் ஒரு மணிக்கு வாருங்கள்”


சொல்லி விட்டு அவளுடைய பைலை எடுத்து ஸ்கேன் செய்து முடித்த போது,

 

“உள்ளே வரலாமா…”


கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். கருப்பு பான்ட், கறுப்புச் சட்டை, கறுப்புக் கோட், அரையடி உயரக் குதி போட்ட காலணி. அவள் உயரத்துக்கு என்னால் நிமிர்ந்து பார்க்க முடியாது. 

 

“உக்காருங்கள்…” என்றேன். 

 

“முதலில் மன்னியுங்கள்... நான் உங்களுக்கு நிறைய வேலை குடுத்திட்டேன். ஆனால் இப்ப ஒரு சின்னச் சிக்கல்” 

 

“சொல்லுங்கள்”

 

“பேமிலி ப்ரோப்ளம்... நான் இப்ப ரிட்டயர்மெண்ட் செய்யிற ஐடியா இல்லை... என் முடிவை மாற்றி விட்டேன்”

 

“என்னது?” 

 

வெள்ளிக்கும் திங்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை என்னால் உணர முடியவில்லை. அவளே தொடர்ந்தாள்.

 

“எனக்கும் என் கணவருக்கும் இடையில ஒரு சின்ன முரண்பாடு. இந்தக் கொரோனா காலத்தில அவர் நிறையவே மாறிட்டார். நாங்கள் பிரியிறது எண்டு முடிவெடுத்திட்டோம். எங்கட ரெண்டு பேரின்ர பெயரில வீடு இருக்கிறதால அத விக்கப் போட்டிருக்கிறோம். அது வித்த பிறகு நான் என் பெயரில ஒரு வீடு வாங்க வேணும் வேலையை விட்டால் லோன் எடுக்க கஷ்டம். அதனால இன்னும் ஒரு ரெண்டு வருசம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன்”


அவள் சொல்லச் சொல்ல மேசையில் இருந்த அவளது பைல் என்னைப் பார்த்துக் கேலியுடன் சிரிப்பது போல இருந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி