கடவுளின் குழந்தை




முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.

இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. 

***

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். 

அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.

 நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பிஞ்சுக் கைகளின் அசைவு இந்தப் பின்பனி காலத்தில் இன்னும் கிடைக்கவில்லை. 

அவர்கள் எங்காவது குடிபெயர்ந்து விட்டார்களா? அப்படியாயின் அங்கு தெரிந்த வெளிச்சம்?  நகரும் உருவங்கள்?  பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

“சிலவேளை புதிதாக யாரும் குடிவந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்காது.” மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

அவளது தாயும் தந்தையும் வழமையாக வெயில் கால மாலைப் பொழுதில் வீட்டின் முன் முற்றத்தில் மது அருந்தியபடியோ அல்லது புகைத்த படியோ ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவள் சைக்கிள் ஓட்டி அல்லது பந்தடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். பல வேளைகளில் தாயும் தந்தையும் அவளுடன் விளையாடியும் பார்த்திருக்கிறான். பெரும்பாலான மாலை வேளைகளில் அந்த வீட்டின் கார் பாதையில் யாரும் உள்நுளையாதபடி தற்காலிகமாக தடுப்பு வேலி போடப்பட்டிருக்கும். இப்போது எதுவும் அங்கில்லை. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  

அவனால் சரியாக உறங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அந்தக் கையசைப்பு,  சிரிப்பு,  எல்லாம் அவனை வட்டமிட்டபடியே இருந்தது. 

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு போவதுபோல் அந்த வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். 

தூண்டில் போடுபவர்கள் ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். மின்னேசோட்டாவின் ஒரு சிறு நகரின் அழகிய ஆற்றங்கரையை அண்மித்ததாகத்தான் அந்த வீடு இருந்தது.

***

இந்த இடத்துக்கு ஆரம்பத்தில் அவன் குடிபுகுந்த போது அவனுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது. ஊருக்கு புதியவனாக இருந்தமையால் அவனுடன் அமெரிக்கர்களுக்கான அறிமுகம் கிடைக்க நாளானது. அவன் அடிப்படையில் ஒரு இந்து சமயத்தவனாக இருந்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கழிப்பதனால் நாளடைவில் பலரின் அறிமுகம் அவனைத்தேடி வந்தது.

“குட்மோர்னிங் மிஸ்டர் சேகர் ”

சத்தம் வந்த திசையில் பார்த்தான். மிகவும் அறிமுகமான அந்த நபர். 

“குட்மோர்னிங் ஆமிசேர்” 

அவர் ஒரு காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியமையினால் அவருக்கு அப் பெயரை அவன் சூட்டியிருந்தான்.

அடிக்கடி தேவாலயத்தில் சந்திக்கும் மிகவும் முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயர் “ராயன் ரொபலிங்க்” எல்லோரும் அவரை “ராயன்” என்று அழைப்பர்கள். மிகவும் மரியாதைக்குரிய நபராக எல்லோராலும் மதிக்கப்படுபவர் அவர்.

“கிட்டவா இருக்கிறீர்கள்?” 

“ஆம் அதுதான் என்வீடு”

மூன்றாவது வீட்டைச் சுட்டிக் காட்டி, “அதுதான் என் வீடு நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம்” என்றார் ராயன். 

அவனுக்கு பிரகாசமான ஒரு ஒளி பிறந்தது. அவன் யாரைப் பற்றி அறிய வேண்டி வந்தானோ அவர்களின் வீடும் மிஸ்டர் ராயன் வீடும் எதிரெதிரே இருந்தது.

“நன்றி” சொல்லிவிட்டு நிச்சயமாக வருவதாக உறுதியளித்த பின் கையசைத்து விடைபெற்றான்.

***

அன்று வேலைநாள் இல்லையாதலால் மாலையே ஆமிசேரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். நல்லகாலம் அவர் வீட்டிலேயே இருந்தார். 

“உள்ளே வாருங்கள்” மிகவும் பரிவுடன் உபசரித்தார். 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

அப்படியே நாய் பற்றிய பேச்சின் இடையே சிறிது நேரத்தில் ஆமிசேரின் துணைவி சுடச்சுடச் சூப்புடன் வந்தாள். அவளையும் அவன் ஓரிரு தடவை ஆமிசேருடன் தேவாலயத்தில் பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் அவனுக்கான பழக்கம் அதிகமானதாக இருக்கவில்லை. இப்போது எதிர் வீட்டைச் சுட்டிக் காட்டி, 

“அங்கு ஒரு சிறுமி போன வருடம் விளையாடியதாகவும் இந்த வருடம் அவளை அந்த வீட்டில் காண முடியவில்லையே”  ஆமிசேர் இப்போது எதுவும் பேசவில்லை. அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. நீண்ட அமைதிக்குப் பின் அவரின் துணைவி பேசத் தொடங்கினாள். அவள் பேச்சில் ஒரு விதமான கரகரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் பேசப் பேச அவன் அப்படியே உறைந்து போய் விட்டான். அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து அந்த பிஞ்சு குழந்தையைப்  பற்றிய விசாரிப்பில் இறங்கவில்லையாதலால் அப்படியே காற்றுப் போன பலூனாகி விட்டான்.

“கடவுளே நீ இத்தனை கொடுமைக்காரனா?”

“எதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தை உன்னிடம் அழைத்தாய்?’’

“அவளைப் பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“அச் சிறு பிஞ்சு புற்றுநோய் வந்து இறந்த நாளில் இருந்து அவளின் தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியில் போவதும் இல்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர். இப்போது தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்’’

மிஸ்ஸிஸ் ராயன் பேசி முடிக்க, கண்களில் வழிந்த நீரை கையால் துடைத்தபடி, எதுவும் பேச முடியாதவனாக அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

***

ஒரு கோப்பை தேநீருடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு வேலைக்கு போகத் தயாரானான். அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறு மழலையின் அழகிய முகம் பட்டெனத் தோன்றி மறைவதால் இப்போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூடக் கிடையாது.

அன்று மாலை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அச் சிறு பிஞ்சின் தாயும் தந்தையும் அவன் வீட்டின் முன் தெருவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. கணவனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

 “கடவுள் இருக்கிறான்” 

மனதுக்குள் நினைத்தபடி உள்ளே சென்று மறைந்தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி