அக்டோபர் 08, 2013

தமிழ் இனி


Thamizh_Ini520x389.jpg
தமிழ் மொழி
 • நம் தாய்மொழி தமிழாகும்.
 • உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.
 • அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.
 • 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.
 • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
 • கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.
தமிழ் மொழி இதுவரை இழந்தவை
 • அகத்தியம்
 • பெருநாரை
 • பெருங்குருகு
 • முதுநாரை
 • முதுகுருகு
 • பஞ்சமரபு
 • பஞ்சபாரதீயம்
 • பதினாறு படலம்
 • வாய்ப்பியம்
 • இந்திரகாளியம்
 • குலோத்துங்கன் இசைநூல்
முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும்
தமிழ் வாழும் இடங்கள்
 • தமிழ்நாடு
 • இலங்கை
 • சிங்கப்பூர்
 • மலேசியா
 • பர்மா
 • மொரீசியஸ்
 • தென்னாபிரிக்கா
 • கயானா
 • பிஜி
 • சுரீனாம்
 • ட்ரிடாட்
 • டொபாகோ
போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை.
தமிழுக்குரிய இடம்
 1. 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளில் 20 வது இடம் வழங்கப்பட்டிருந்தது.
 2. இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுள் தமிழும் ஒன்று.
 3. தமிழ் நாட்டின் ஆட்சிமொழி.
 4. இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.
 5. சிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்று.
 6. தென்னாபிரிக்காவில் தமிழுக்கு அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் உள்ளது.
 7. இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற முதல் மொழி தமிழ். (இந்திய நாடாளுமன்றத்தில் 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)
தமிழ் வழக்குமொழி
“Ethnologue”  என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தமிழில் 22 வட்டார வழக்குகள் உள்ளதெனக் கூறுகின்றது.
 1. ஆதிதிராவிடர்
 2. ஐயர்
 3. ஐயங்கார்
 4. அரவா
 5. பருகண்டி
 6. கசுவா
 7. கொங்கர்
 8. கொரவா
 9. கொர்சி
 10. மதராஸி
 11. பரிகலா
 12. பாட்டுபாஷை
 13. இலங்கைத் தமிழ்
 14. மலேயா தமிழ்
 15. பர்மா தமிழ்
 16. தென்னாபிரிக்கத் தமிழ்
 17. திகாலு
 18. அரிஜன்
 19. சங்கேதி
 20. கெப்பார்
 21. மதுரை
 22. திருநெல்வேலி
முதலியனவே அவையாகும். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து 100க்கு மேற்பட்ட வட்டார மொழிகள் தமிழில் நிலைத்து விட்டமையே உண்மையாகும்.
அழிவை எதிர்நோக்கியபடி தமிழ்மொழி
 • பிறமொழி ஊடுருவல் அதிகரித்தமை
 • வட்டார வழக்குகள் தனிமொழியாகக் கிளர்வது
 • வருங்காலங்களில்  தொடர்ச்சியாக இரண்டு தலைமுறையினர் தமிழைக் கற்க ஆர்வமற்றவர்களாக இருத்தல்
 • புலம்பெயர் தமிழர்களிடையே –  குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரிடையே – தமிழ், பேச்சு மொழி அந்தஸ்தைக் கூட இழந்தமை
போன்ற பல காரணங்களினால் தமிழ் அழிவை நோக்கி நகரத் தொடங்கி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
இழிவு நிலை
 • தாய்மொழியில் பேசினால் கைதட்டும் கூட்டமாகத் தமிழர் இருப்பது.
 • தமிழில் பேசுவதை இழிவெனக் கருதுவது
 • “எனக்கு அவ்வளவாகத் தமிழ் வராது” எனக் கூச்சமின்றிச் சபையில் கூறுவதும் அதைப் பெருமையென எண்ணுவதும்.
இவ்வாறு இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
நாம் செய்யவேண்டியது என்ன?
 • தமிழைத் தமிழாகப் பேச வேண்டும்.
 • அறிவியல் மொழியாகத் தமிழை உயர்த்த வழி செய்ய வேண்டும்
 • ரைசியன் போல் யப்பான்காரன் போல் சீனக்காரன் போல் சொந்த மொழியில் எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை தமிழனுக்கும் பிறக்க வேண்டும்.
 • “தமிழரைக் கண்டால் தமிழில் பேசவேண்டும்”
 • நம் தமிழை நாம் வளர்த்தால்  நம்மைத் தமிழ் வளர்க்கும்.

- தியா -

இந்த பருவ  http://www.panippookkal.com/ithazh/ ல் வந்த எனது படைப்பு 

வலி சுமந்த பயணம்

valimai_sumantha_payanam_1_300x225.jpg


விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
                                                                                            (விழியிரண்டும்……)

சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை
வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்…
முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப்
பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…
                                                                                               (விழியிரண்டும்……)

பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே
ஏதிலியாய்ப்  பாவியராய் பயணிக்கும் நேரமிது…
வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி
மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது…
                                                                                            (விழியிரண்டும்……)

பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை
வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது…
கண்கள் சிந்தும் பூக்கள் தூவி… வலிகள் சுமந்து புது வழிகள் தேடி
வாய்கள் மூடி மௌனியாகி வாழ்தல் வேண்டி
கால்கள் போகும் பாதை நோக்கி நாங்கள் போகும் பயணமிது
                                                                                           (விழியிரண்டும்……)
- தியா -
 
 
இந்த பருவ http://www.panippookkal.com/ithazh/ ல் வந்த எனது படைப்பு 

மே 29, 2013

வந்த காலம் இது வசந்த காலம்
சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்

பனிப்பொழிவும் இனியில்லை
கடுங்குளிரும் இங்கில்லை
பார்க்கும் இடமெங்கும் பச்சை மயம்
பசுந்தரையில் படுத்திடலாம்
சோலையென வீடுதனைப்
புதுப் பொலிவு பண்ணிடலாம்

நதிகள் ஏரியென - இனி
விடுமுறைக்குச் சுற்றிடுவர்
முற்றும் மூடி முன்னர்
வீதியிலே போனவர்கள்
வெட்டவெளி மணலில்
வெற்றுடலாய் ஓய்வெடுப்பர்
பச்சை குத்தி நன்கு
பளிச்சென்று உடல் தெரிய
கச்சை போல் உடையைக்
கவசமாய் அணிந்து நிற்பர்

பச்சைப் பசேலென்று - இலை
துளிர்ப்பதர்க்கு முன்னாலே
முந்திவிடும் மொட்டுகள்
மனிதர்கள் போலிங்கே
மரங்களுக்கும் அவசரம்
இலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும்
பட்டென்று காய்த்துப் பழுத்துவிழும்  

மான் துள்ளும்
முயல் கொஞ்சும்
அணிலினங்கள் சல்லாபிக்கும்
காக்கை கூடு கட்டும்
குருவிகள் குதுகலிக்கும்
பூக்கள் கூட மகரந்தம் சொரிந்து
தம்மினம் பெருக்கும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
கவிதைபாடப் புறக் காட்சிகள் கிடைக்கும்
நேற்றுப்போல் இனியில்லை
பனிக்காலம் அது பழைய காலம்  
வந்த காலம் இது வசந்த காலம்
ஊரோடு ஒத்து நன்றாக வாழ்ந்திடுவோம்
வசந்தத்தை நாமும் வரவேற்புப் பண்ணிடுவோம்  


-தியா -


ஏப்ரல் 18, 2013

வ(ச)ந்த காலம் மாற்றம்

என்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத் தமிழ் இதழான பனிப்பூக்கள் இதழின் 04/16/2013 http://www.panippookkal.com/ithazh/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/ அன்றைய பதிப்பில் வெளிவந்தது 


vasatham_288x288நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக்  கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.

வீதியில் தொடை தெரிய
நடைப் பயணம் போனாள்  ஒரு யுவதி.
தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர்.

கடிகாரச் சிறு முள்ளின்
ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம்
வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து
பதுங்கிக் கொண்டது பசுந்தரை
ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை
தொடர்ந்து பொழியும் வெண்பனியில்
கருஞ்சாயம் போக்கி
மீண்டும் வெண்துகில் போர்த்திய படி
நீட்டி நிமிர்ந்து நீளுறக்கம் கொண்டிருந்தது…
வசந்தத்தின் வருகைக்காய்க் காத்திருந்து
தோற்றுப்போன மரங்கள்
மீண்டும் பனிப்பூக்கள் சுமந்த படி அணிவகுத்து நின்றன.

அகதியாகிப் போன
இரு சிறு குருவி பற்றிய நினைவில் மிதந்தபடி
நான் மட்டும் தனியாக வெளிபார்த்து.

- தியா -

ஏப்ரல் 16, 2013

குழந்தை மனசு


*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள்  http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/
இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. *****

விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.

 “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”

 “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”

 “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”

 நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.

 இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்திக் கொண்டாள். ஊருக்குப் போகும்போது எடுத்துச் செல்வதற்கென நிறைய விளையாட்டுப் பொருட்களையும் மற்றும் தன் விருப்பத்துக்குரிய சிலவற்றையும் பத்திரப் படுத்தித் தன்னுடனே வைத்திருந்தாள்.

 விமானம் புறப்படுவதற்கு இன்னும் சில வினாடிகளே இருப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப் பட்டு ஆசனத்தில் அமர்வது இடுப்பு பட்டி பூட்டுவது தொடர்பான விவரணங்களை ஒளிப் படமாகக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். என் மனைவி சாளரத்தினூடாக வெளியில் பார்த்து; “அமெரிக்காவே நான் போய்வருகிறேன்…” என்பது போல் புன்னகைத்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் இங்கு வந்த போது அவளுக்கு இந்த மண் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது அவளுடைய பூர்வீகமே மினசோட்டா என்பது போல் உணரத் தலைப்பட்டிருந்தாள்.

இரவு ஆகியிருந்ததால் மின்னொளியில் விமான நிலையம் மிகவும் அழகாகத் தெரிந்தது. தன்னைச் சாளரத்தின் பக்கம் இருக்க விடவில்லை என்பதனால் அடம் பிடித்துச் சிறிது நேரம் மௌன விரதம் இருந்த என் மகள் இப்போது விரதத்தை முடித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
kuzhanthai_manasu520x480-300x276.jpg
 

 “அப்பா யாழ்ப்பாணம் மினசோட்டா போல இருக்குமோ… அங்கைப் பெரிய கடைகள்… பெரிய பள்ளிக்கூடம்…எல்லாம் இருக்குமோ…” என்று தன் வழமையான நக்கீரர் பாணியைத் தொடர்ந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சென்னையில் இருந்து இங்கு வரும்போது

 “அப்பா அமெரிக்கா சென்னையைப் போல இருக்குமோ… அங்கைத் தியேட்டர்…பீச்…பார் இருக்குமோ…” என்று அவள் கேட்டவை இப்போது என் ஞாபகத்தில் எட்டி பார்த்தன.

 “இல்லையடா செல்லம் மினசோட்டா வேற யாழ்ப்பாணம் வேற ரண்டும் வித்தியாசமான  வடிவாயிருக்கும் இருக்கும்” என்று கூறியவாறே அவளின் தலையை என் விரல்களால் கோதி விட்டேன். அப்படியே அவள் உறங்கிவிட்டாள்.

 அபுதாபியில் அடுத்த விமானம் மாறுவதற்காக இறங்கியபோது அவள் யாழ்ப்பாணம் வந்துவிட்டது எனக் குதூகலித்துக் கொண்டாள்.

 “இது யாழ்ப்பாணம் இல்லையடா செல்லம்…அபுதாபி. இன்னும் ஒரு நாளிலை யாழ்ப்பாணத்துக்குப் போயிடலாம்.” எனச் சமாதானம் சொன்னாள் என் மனைவி.

நல்ல திரைப்படம் நல்ல சாப்பாடு என விமானப் பயணம் சலிப்பில்லாமல் போனதால் நேரம் போனதே தெரியவில்லை.
kuzhanthai_manasu_2_520x426-300x245.jpg கொழும்பை வந்தடைந்தபோது வியாழக்கிழமை அதிகாலை ஆகியிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியெங்கிலும் யுத்தத்தின் வடு ஆங்காங்கே எட்டி பார்த்தது. யுத்தம் முடிந்ததாகச் சொல்லப்பட்ட இந்த நான்கு வருடக் காலத்திலும் ஏதும் மாறுதல் நிகழ்ந்தது போல் என்னால் உணர முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தக் காலத்திலும் ஓர் சந்தோசம் இருந்தது. நாம் ஓடி உலாவிய மண்ணில் இப்போது நாகரிகமான மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான நிறைய ஆதாரங்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டிருந்தன. மருதமும் முல்லையும் நெய்தலும் சார்ந்த எம் நிலத்தில் பாலைக்கான சாயல் ஆங்காங்கே தென்பட்டது.

 “அப்பா நாங்கள் திங்கள் இரவு வெளிக்கிட்டனாங்கள் புதன் தானே இஞ்சை
வந்திருக்க வேணும் இண்டைக்கு வியாழன் எப்பிடி ஆனது… நீங்கள் ரண்டு நாளிலை போகலாமெண்டு பொய் சொல்லிப் போட்டிங்கள் என்ன” என்று என் மகள் கேட்டாள்

“இல்லையடா செல்லக்குட்டி நாங்கள் அங்கையிருந்து திங்களிரவு வெளிக்கிட்டனாங்கள் அப்ப இஞ்சைச் செவ்வாய் கிழமை காலமை இப்ப வியாழக்கிழமை காலமை ரண்டு நாள் சரிதானேடா செல்லம்…. அமெரிக்காவுக்கும் இஞ்சத்தைக்கும் இடையிலை அரை நாள் வித்தியாசம் அங்கை இரவு எண்டால் இஞ்சைப் பகல்… இப்ப அமெரிக்காவிலை புதன் இரவு இஞ்சை வியாழன் காலமை”

“அதெப்பிடி… போங்கப்பா நீங்கள் பொய் சொல்லுறீங்கள்….”என்றபடி சலித்துக் கொண்டாள்.

அவளுக்கு அகல-நெடுங்கோடு பற்றி படிப்பிக்கும் ஆற்றல் எனக்குமில்லை சொன்னாலும் புரியும் வயது அவளுக்குமில்லை என்பதனால் நான் அவள் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வெற்று கால்களுடன் மண்ணில் இறங்கி விளையாடப் பழகிக் கொண்டாள். கோழி, நாய், பூனை, ஆடு, மாடு என அனைத்தையும் ரசனையுடன் நல்ல நண்பர்களாக ஏற்று கொண்டிருந்தாள். அவளுக்குக் கரப்பான் பூச்சி மட்டும் இன்றுவரை நண்பராக மறுத்து விட்டது. இந்த மண்ணுக்குரிய வாழ்வை அவள் மிகவும் ரசிப்பதை அவளின் நடவடிக்கைகள் மூலம் உணர முடிந்து.

அவளுக்குத் தமிழ் சரளமாகக் கதைக்கத் தெரியுமென்பதனால்  சொந்தக்காரர்களுடன் அவளால் இயல்பாகப் பழக முடிந்தது.

“உங்கன்ரை மகள் எப்பிடி இவ்வளவு வடிவாய்த் தமிழ் கதைக்கிறா…” எனப் பலர் என்னிடம் கேட்டனர்.

“நாம் பிறப்பினால் தமிழர் அதன் பின்தான் அமெரிக்கர்… தாய்மொழியைச் சொல்லித்தர ஆள் எதுக்கு வீடே போதும்…அவளுக்கு தமிழுடன் ஆங்கிலம் எழுதக் கதைக்கத் தெரியும் அமெரிக்காவில் ஆங்கிலத்துடன் மேலதிகமாக இன்னும் சில மொழி தெரிந்தால் அதுக்குத் தனி மரியாதை அது அவள் எதிர் காலத்துக்கும் நல்லது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் பல நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதனால் அவர்கள் ஆங்கிலத்துடன் தமது பூர்வீக நாட்டு மொழியையும் தெரிந்து வைத்திருக்க விரும்புகின்றனர். அதுபோல் என் மகளும் தன் தாய்மொழியைப் படிப்பதில் என்ன தவறு”  என்றேன். அவர்கள் என்னை வியப்புடன் பார்த்தனர்.

இப்படியே வீடும் சொந்தமும் சுற்றமும் என நாட்கள் உருண்டோடின. மறுபடிக்கும் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டுக் குட்டிக்கும் “வீசா” எடுக்கும் படி என் மகள் அடம்பிடித்தாள். ஆட்டுக் குட்டியையும் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் வீட்டின் பின்னே உள்ள புல் வெளியில் கட்டி வளர்க்கப் போவதாகவும் கூறினாள்.

ஊரை விட்டுப் பிரியும் போது அழுகையும் ஆர்ப்பாட்டமுமாகக் கிளம்ப வேண்டியதாயிற்று. என் மகள் தான் அங்கிருந்து கிளம்பவே மாட்டேன் என்று அடம்பிடித்து அழத் தொடங்கினாள். அவளுக்குக் கிராம வாழ்க்கை பிடித்துப்போய் விட்டதாக எண்ணத் தோன்றியது. ஒருவாறாக அவளைச் சமாளித்து அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவுக்கு வருவதே பெரும் பாடாகியிருந்தது.

மறுநாளே மறுபடியும் வேலையில் இணைய வேண்டி இருந்தமையினால் வந்த களைப்பு தீர ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிட்டேன். மாலையில் வீடு வந்தபோது மனைவி வழமைபோல் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தாள்.

மகள் சில புத்தகங்களை நிலத்தில் பரப்பி எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நானும் அவளுடன் அமர்ந்து…

“இனி என் செல்லக்குட்டி எப்ப யாழ்ப்பாணம் போறது..” என்றேன்.

“போங்கப்பா நீங்கள் இப்பதானே போயிட்டு வந்தனாங்கள் நாளைக்குப் பள்ளிக்கூடம் அதை முதல்லை பாப்போம். யாழ்ப்பாணம் போறதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்ன…” என்றாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“என் செல்லக் குட்டியே”

என்று சொல்லியவாறு வாரியணைத்து ஒரு முத்தமிட்டேன்.

- தியா -
 

ஏப்ரல் 10, 2013

நாடோடி நான்...இன்று
 எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர்.

இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" .

எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர். நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம். அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர்.

மூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள். நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள். எமக்கு எதுவும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக...

கடைசியாக நான். என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லை. அவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்...

மற்றைய மூவருக்கும் தமக்கென மொழி , மதம், நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லை. அவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்...

எங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தது. அதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம். அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்...

அழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்தது. பெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது....  அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்...

இப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார். தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார்.

1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. இடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார். உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார்.

தாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள்.

தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள். ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்...

எங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில்  எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்...

கடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்...  தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்.........

முடிவில் அவர்களிடம்  ஒன்றை மட்டும்  சொல்வேன்

"உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால்  நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.