
ஒளிக் கதிர்கள் தெளிவற்ற
மாலை நேரத்துச் சூரியனோடு
கைகோர்த்தபடி
என் புழுதித் தெருவில்
இறங்கி நடக்கிறேன்
வெற்றுக் கால்களோடு….
நீண்ட நெருமுனை…
வளைவில்
முந்திச் சென்றான்
என் பால்ய கால நண்பன்...
அவன் இப்போது உயிருடன் இல்லை...
சுற்றிவளைக்கப்பட்ட
சிறு பகுதியில் இருந்து
தப்பிப் பிளைத்து தடுமாறி
வரும்போது
ஆமி அடித்த செல்லில்
உயிர்விட்டானாம்
என்று
சொல்லக் கேள்வி....
அவனும் நானும் கூடி
வயல் விதைப்போம்
பள்ளி செல்வோம்
பந்தடிப்போம்
மாடு மேய்ப்போம்
குளத்து வானில்
குளித்து மகிழ்வோம்.....
அது அந்தக் காலம்
இப்போது
நான்
முழுவதுமாக மாறிவிட்டதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
நான் யாருடனும்
பேசுவதில்லையாம்
சிரிப்பதில்லையாம்...
பைத்தியம் என்றும் சிலர்
பழியுரைக்கிறார்கள்....
பாவம் அவர்கள்.....
அவர்களுக்குத் தெரியாது
நான் இப்போதும்
என் உறவுகளுடன்
நண்பர்களுடன்
கனவில் அடிக்கடி
சிரித்துப் பேசுவது......