மே 23, 2010

இன்றைய ஈழம்











நாளை என் வீட்டில்
திருடர்கள் வரலாம்...
என் வீட்டுத் தெருவில்
காவலர்கள் போகிறார்கள்...


மே 20, 2010

கதறியழுகிறது கவலையில் கனமழை.....

கொட்டித் தீர்த்த கனமழையில்
நனைந்தபடி நடக்கிறேன்....
வண்டியில் பொதி ஏற்றி இழுத்தபடி
விரைந்து நடக்கிறான் ஓர்
ஏழைப் பொதி வண்டி இழுப்பாளன்....

நெடுவீதியில் பிரித்துப் போட்ட
கால்வாய்கள் அப்படியே
வாய்பிளந்து கிடக்கின்றன.....
நீண்ட பெருந்தெருவின்
நிரம்பிய வெள்ளத்தில் முட்டிமோதி
மல்லுக்கட்டிய வாகனங்கள்
வழியை மறித்தபடி......

கையில் பிடித்த குடையை
"லைலா" பறித்துச் செல்கிறது ......
தெருவோரம் மழையில்
தோணி விடும் சிறுவர்கள்......

அக்கினி வெயிலை
மறைத்த மழை மேகத்துக்கு
நன்றி தெரிவித்தபடி
பேருந்துக்கு நடக்கிறேன்.....

மே மாதம் நம் வாழ்வில்
மறக்கப்படக் கூடியதல்லவே.....
வானம் கண்ணீர் மழை பொழிந்து
மீண்டும் அழுதுதீர்த்தது.........

முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
எம் உறவுகளின்
ஆண்டுத் திவச விழாவில்
கறுப்புக் கொடி (குடை) பிடித்து
இன மத பேதமின்றி
அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்.......