5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன,

1.மரபு வழிப்பட்ட நிலை
2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு
3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி
4. அண்மைக்காலப் போக்கு

இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.

5.2.1. மரபு வழிப்பட்ட நிலை

மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி.கணேசையர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர், கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் கவிதைகள் இத்தகைய மரபு நிலைப்பட்டன என்பதை மனங்கொள்ள வேண்டும்.

மரபுக் கவிஞராக இனங்காணப்பட்ட சுவாமி.விபுலாநந்தர் பாரதியின் தாக்கத்தினால் உந்தப்பட்டு கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர். ‘கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர், ஈசன் உவந்தளிக்கும் இன்மலர்’ போன்ற மரபுக் கவிதைகளினை எழுதிப் புகழடைந்தவர். இவருடைய வரிசையில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் ‘பகவத்கீதை வெண்பா’வும் குறிப்பிடத்தக்கது. ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பிற்காலத்தில் பலரும் அழைக்க இம்மரபுக் கவிதையே காரணமாக இருந்ததெனலாம்.

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மரபில் கூடப் புதுமை படைக்கும் அளவிற்கு எளிமையான பாடல்களைப் பாடி மரபையும் தாண்டிக் குழந்தைக் கவிஞராகவும் இடம்பிடித்துள்ளார். இவர் பாடிய பாடல்களின் உள்ளடக்கத்தினைக் கருத்திற் கொண்டு அவற்றைப் பின்வருமாறு நோக்க முடிகின்றது.
எளிமையான தன்மை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் கூறுகளைப் படைத்தல்
சந்தச் சிறப்புடன் சுவைபடப் பாடுதல்
சிறுவர் விரும்பும் மெட்டுடன் பாடுதல்
கதைப் பாடல்களைப் பாடுதல்…

என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வகையில் பெரும்பாலான பிள்ளைகள் நினைவில் வைத்திருக்குமளவிற்கு இனிமையும் எளிமையும் உடைய கவிதைகளைப் பாடினார். எடுத்துக்காட்டாக, ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை …’ என்ற பாடல் முலம் இன்றும் சிறுவர்களின் நெஞ்சில் நிறைந்துள்ளமையினைக் கூறலாம். ‘இலவு காத்த கிளி, கத்தரி வெருளி, பவளக்கொடி’ போன்ற கதைப்பாடல்களையும் ‘மகாவலி கங்கை, கன்னியாய் வெந்நீரூற்று, இலங்கை வளம்’ போன்ற நாட்டுச் சிறப்புக் கூறும் பாடல்களையும் பாடிச் சிறப்புப் பெற்றார்.



5.2.2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு

1930களிலிருந்தே இலங்கை அரசியலில் தமிழ், சிங்கள இனத்துவ அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகள் இலங்கை முழுவதுக்குமான தேசியத்தையும், இடதுசாரிக் கட்சிகள் வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தையும் சமாந்தரமாக வளர்த்தெடுக்கத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1930 களில் இருந்து தினசரி, வார பத்திரிகைகளும் , சஞ்சிகைகளும் தோன்ற ஆரம்பிக்க சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் சமூக மறுமலர்ச்சி சார்பான கருத்துக்கள் படைப்பிலக்கியங்களினூடே முனைப்புப் பெற்றன.

19ஆம் நூற்றாண்டின் கனகி புராணத்துடனேயே சமூக மறுமலர்ச்சிக்கான கருத்துக்கள் தோன்றி விட்டதெனினும், நவீன உள்ளடக்கத்தையும், மரபுசார் வடிவங்களையும் பெற்றுச் செந்நெறிப்பாங்கான செய்யுள் இலக்கிய வடிவம் ஒன்று தோற்றம் பெறச் சுதந்திரத்துக்கு முந்திய காலம் பேருதவி புரிந்தது. சமூகச் சார்புடைய கவிதைகளில் முற்போக்கான விடயங்களே அதிகம் பேசப்பட்டன.

பாவலர் துரையப்பாப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர்க.கணபதிப்பிள்ளை(காதலியாற்றுப்படை), அழக.சுந்தரதேசிகர் (சி.வை.தாமோதரம்பிள்ளையின் மகன்) போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றனர். எனினும் இவர்கள் மூவரும் 1950 களின் பின்னர்தான் தமிழ்க் கவிதையுலகில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்க் கவிதையின் பிதாமகன் மகாகவி பாரதியின் சமகாலத்தவரான பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை(1872-1929) அவர்கள் எளிமையான முறையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்த எண்ணற்ற பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், 1901இல் உதயதாரகை சஞ்சிகையினதும் 1921இல் இந்துசாதனம் சஞ்சிகையினதும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1907இல் வெளியிட்ட ‘மாணவர்’ சஞ்சிகையின் மூலம் கவிதைக்கான களம் அமைத்துக் கொடுத்தார்;. அதிபராகவும், ஆசிரியராகவும், சிறந்த முகாமையாளராகவும் பல பதவிகனை வகித்த இவர் எளிமையான சொற்களில் பொதுமக்கள் சார்பான ‘கும்மி’ இலக்கிய வடிவங்களை வெளியிட்டார். ‘யாழ்ப்பாண சுதேசகும்மி, கீதாசார மஞ்சரி, சிவமணிமாலை, இதோபதேச மஞ்சரி, எங்கள் தேசநிலை’ போன்ற கவிதை நூல்களையும் தனிப் பாடல்களையும் பாடியுள்ள பாவலர் சிறந்த கவித்துவ வீச்சைக் கொண்டவர்.



5.2.3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி

1950 களின் பின்னர் ஈழத்து இலக்கியப்பரப்பு விரிந்து பரந்து செல்லத் தொடங்கியது. அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், மத்தியதர வர்க்கத்தினரின் தோற்றம் என்பன ஈழத் தமிழர் வாழ்வியலில் முனைப்பான தாக்கத்தினை உண்டுபண்ண, சமகாலத்தில் மொழி-இன உணர்வும், சமூகப் பிரக்ஞையும், முற்போக்கு சார்பான சிந்தனைகளும் மேலெழுந்தன. இதேவேளை மலையக மக்களின் வாழ்வியற் சிக்கல்களும் அவற்றை எதிர்கொள்ள அவர்கள் நடாத்திய போராட்டங்களும் முஸ்லீம்களின் அபிலாசைகளும் இக்காலக் கவிதைப் போக்கையே மாற்றியமைத்தன.

1943இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும்(14) அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்.

தமிழ்நாட்டில் நவீன கவிதை வளர பாரதிக்குப் பின் பாரதிதாஸன், பிச்சமூர்த்தி போன்றோர் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனரோ அதேபோல ஈழத்தில் நவீனகவிதை வளர பாவலர் துரையப்பாபிள்ளைக்குப் பின் மஹாகவி(உருத்திரமூர்த்தி) முக்கியம் பெறுகின்றார்.

மஹாகவி தமது சமகால ஓட்டத்தினைச் சரியாக இனங்கண்டுகொண்டு கவிதை படைத்தவர். யாப்புவழிச் செய்யுள் ஓசைக்குப் பதிலாகப் பேச்சோசைப் பாங்கினைத் தன் கவிதைகளில் அறிமுகஞ் செய்து, செய்யுள் அடிகளை உடைத்தெழுதி உணர்ச்சி அழுத்த வேறுபாடுகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தினார்.

எளிமையும் கவித்துவ வீறும் கொண்ட கவிதைகளைப் படைக்க காட்சிப்படுத்தல் (தேரும் திங்களும்), இசை (குறும்பா), போன்ற உத்திகளைக் கையாண்டார். ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்ற கவிதை மூலம் மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை அனுபவங்களைப்பாடி தனது மானிட நேயத்தை வெளிக்காட்டினார். ‘தேரும் திங்களும், கண்மணியாள் காதை, கோடை, குறும்பா, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், வீடும் வெளியும், வள்ளி’ போன்ற கவிதை நூல்கள் இவரின் கவியாற்றலுக்குச் சான்றுரைப்பன.

தான் வாழ்ந்த காலநிலையை நன்குணர்ந்து பாரதிக்குப் பின் நவீனகவிதையைப் புதிய தாளத்துக்கு இட்டுச்சென்று ஈழத்தில் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தினைப் பெற்றுள்ளார்.

மஹாகவியின் சமகாலத்தவரான நீலாவணன் கிழக்கிலங்கையின் சிறந்த கவிஞர். கிராமிய மண்வாசனையுடன் சமகால சமூகப் பிரக்ஞையையும் சித்திரிப்பனவாக இவரது கவிதைகள் அமைந்து காணப்பட்டன. ஆன்மீக நோக்குடைய(பசும்பால்) கவிதைகளையும், பாநாடகங்கள், காவியம், மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றையும் இவர் எமுதினார்.

சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகிய இருவரும் முன்னைய இருவரில் இருந்தும் வேறுபட்ட பண்புடையோர். செல்வராசன் கவிதைகளில் அங்கதச் சுவை மேலோங்கி இருக்க, தத்துவம், நடத்தைவிமர்சனம், பகுத்தறிவு என முரண்பட்ட தன்மைகளை தனது கவிதைகளில் தந்தவர் முருகையன்.

1960 களின் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் ‘படிமம்’ எனப்பட்ட ‘குறியீடு’ ஒருவகையான இருண்மைத் தன்மையினைக் கொண்டுவர, அதுவரை காலமும் பேசாப்பொருளாக ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல்சார் நடத்தைகளும் கவிதைகளில் பாடப்பட்டன.

தருமு சிவராம், தா.இராமலிங்கம், போன்றோர் பாலியல் உணர்ச்சிகளை தமது கவிதைகளில் நுட்பமாகக் கையாண்டிருக்க, மு.பொ ஒருவிதமான ஆத்மார்த்தத் தளத்தில் நின்றுகொண்டு கவிதைகளைப் படைத்தார். சன்முகம் சிவலிங்கம், நுஃமான், மு.பொ, போன்ற சிலர் முற்போக்கு சார்பான விடயங்களைக் கலைத்துவ உணர்வுடன் கூறிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் பொதுவுடைமைச் சிந்தனையின்பால் ஈற்கப்பட்ட அ.ஜேசுராசா, சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம் போன்ற கணிசமானோர் தனிமனித உணர்வுகளுக்கும் சொந்த அனுபவங்களுக்கும் முதன்மையளித்துக் கவிதைகளைப் படைத்தனர்.

மரபுக்குள் நின்றுகொண்டு நவீனம் சார்புக் கவிதைகளைத் தந்த காசியானந்தன், வர்க்க அடிப்படையில் சமூகத்தை நோக்கிய சுபத்திரன் ஆகியோரும் கலைப்பெறுமானம் மிக்க கவித்துவமான பல கவிதைகளை எழுதினர். சிறந்த படிமங்கள் நிறைந்த நீண்ட கருத்துக்கள் செறிந்த கவிதைகளின் வரவானது ஈழத்துக் கவிதையின் தனித்துவத்தை பேணிக்காத்து புதுமையான வழிக்கு இட்டுச்சென்றது.



5.2.4. ஈழத்தின் அண்மைக்காலக் கவிதைப் போக்கு

ஈழத்துக் கவிதைகள் 1980கள் வரை சாதி, சமயம் என்ற வரன்முறைக்குள் நின்றுகொண்டே பெரும்பாலும் வளர்ச்சி கண்டன. இன்னொரு வகையில் சொன்னால் தம்முடைய காலப்பகுதியில் தாம் எதனால் பாதிக்கப் படுகிறார்களோ அல்லது ஈர்க்கப்படுகிறார்களோ அந்த ஈர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கியங்கள் தோன்றியிருப்பதை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.

இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வு பல்வேறுபட்ட ஆதிக்கக் கூறுகளினால் கட்டுண்டு கிடக்கிறது. இதில் பிரதானம் இனத்துவ ஆதிக்கநிலை, பின்வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, மதமேலாதிக்கம், பெண்ணிய அடிமைத்தனம், பிரதேச வேறுபாடுகள் போன்றனவாகும். இத்தகைய கருத்தியல் நிலைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவே ஈழத்தில் தற்காலக் கவிதைகளும் பிறக்கின்றன.

1980 களின் பின்னைய இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் அரசியல், பெண்ணியம் போன்றன முனைப்புப் பெறுவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் வந்த புதிய பரம்பரையில் பெண்களின் பங்கு கணிசமானதாக இருந்தது. அரசியல் ஒடுக்குமுறை மிகுந்திருந்த இக்காலத்தில் இலக்கியங்களும் அதையே பேசின. கவிதை விமர்சகரான எம்.பௌசர் குறிப்பிடுவது போல “ஈழத்துத் தமிழ்க் கவிதையில் -இலக்கியத்தில் பெரும் அரசியல்வாடை அடிக்கிறதென மூக்கைப் பொத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்”(15) என்ற கருத்து இவ்விடத்தில் வலுவுடையதாக உள்ளது.

இனவன்முறைகள் முன்னைய காலங்களைவிட 1980களின் பின்னர் அதிகரித்தமையினால் அதற்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே கவிதைகளும் படைக்கப்பட்டன. போரினை உள்ளிருந்து எதிர்ப்போர் வெளியிருந்து பார்ப்போர் என இரு வேறுபட்ட இயங்கியல் தளத்தினூடே இக்காலக் கவிதைகள் எழுதப்பட்டன. தமிழ்த்தேசிய உணர்வின் காரணமாயும் மனிதாபிமான நோக்கிலும் என எதிர்ப்புக் குரல்கள் போருக்கெதிராக மேற்;கிளம்பின.
“…………………………….
கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன…….”(16)

எனப் போரின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் இழப்புக்களையும் எந்தவிதமான பூச்சுப் புனைவுமின்றிக் கூறும் கவிஞர் அஸ்வகோஸின் வரிகள் இத்தகைய இயல்புடன் விளங்கக் காணலாம்.

1983இல் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான இன வன்முறையின் பின்னரான காலப்பகுதியில் வந்த கவிதைகள் போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், கொடூரங்களையும், தமிழின எழுச்சியையும் பாடுவனவாக அமைந்தன. யாழ் நூலக எரிப்பு, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைகள், தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகள் என்பன ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ண, அதன் விளைவாக புதுவை இரத்தினதுரை, நிலாந்தன், அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், கலா, சேரன் என நீண்டு செல்லும் பட்டியலையுடைய கவிஞர் குழாமொன்று தோன்ற வழிபிறந்தது.

கவிஞர் சு.வில்வரத்தினம் நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதை அவருடைய கவிதைகளில் இருந்து அறிய முடிகின்றது.
“பறம்புமலை
பாரி மறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வென்றெரி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றில்
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே
பாரி மகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
………………………..
………………………
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.”(17)

தனது தொலைநோக்குப் பார்வையினூடே சங்கப் புலவர் ஒளவையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி இடப்பெயர்வின் அவலத்தினை எடுத்துக் கூறியமை சிறப்பாக உள்ளது.

1980களின் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சொல்லமுடியாத பல சிக்கல்களை அனுபவித்தார்கள். பிரயாண அவலம், வீசாச் சிக்கல், தங்குமிடம் இன்மை, நிறவெறி, புதிய பண்பாட்டுச் சூழல், அந்நியஇடம், தாயகம் பற்றிய ஏக்கம் என்பன அவர்களை வாட்டிவதைக்க தமது இலக்கியங்களிலும் அவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.(18)

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பிரதீபா, விந்தியன், அருந்ததி, மைத்திரேயி, ஊர்வசி, அவ்வை, தமயந்தி, சுகன், பாலமோகன் போன்ற சுட்டிக்காட்டத்தக்க இன்னும் பலர் தமது ஆதங்கங்களைக் கவிதைகளினூடாகக் கொண்டுவந்தனர். “சொல்லாத சேதிகள், மறையாத மறுபாதி, மரணத்துள் வாழ்வோம்” போன்ற கவிதைத் தொகுதிகள் புலம்பெயர் கவிஞர்களின் கவித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் உள்ளன.

வ.ஐ.ச.ஜெயபாலன் தனது ‘உயிர்த்தெழுந்த நாட்கள்’ என்ற நீண்ட கவிதையிலே தமிழர்களின் சோக வரலாற்றினை ஓரளவுக்கு எடுத்துக்கூற சேரனின் ‘கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்’ என்ற கவிதை அதனை மேலும் வலுவுடையதாக்கியது.
“ எனக்கு ‘விசா’ தந்த அதிகாரி
மனைவிக்கு
‘விசா’ தர மறுக்கிறான்
யாழ்ப்பாண வடலிகளின் நிழலில்
அம்மம்மா
‘போய்ச் சேர்ந்து விட்டாலும்’
சென்று திரும்பல்
இயலுமோ சொல்…?”(19)

என நீண்டு செல்லும் இளவாலை விஜயேந்திரனின் கவிதைமூலம் சொந்த நாட்டுக்கே சென்று திரும்ப முடியாத அவலநிலை உணரப்பட்டது. வ.ஐ.ச.ஜெயபாலன் தன்னுடைய கவிதைகளில் புலம்பெயர் மக்களின் பல்வேறுபட்ட உணர்ச்சிகளைச் சித்திரிக்க முற்பட்டுள்ளமை அவரது கவிதைகளினூடே புலப்படுகின்றது.

“நான் மந்தையைப் பிரிந்த தனிஆடு
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பியநான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிரில்…”(20)

தாய்நாட்டின் பிரிவும் புகுந்த நாட்டின் தனிமையும் கொடிதிலும் கொடிது என்பதை உணர்த்த அவர் கையாண்ட வரிகள் அற்புதமானவை.

மேலைநாட்டு ஆண்-பெண் சமத்துவ நிலையின் தாக்கத்தினை பெண்ணியம் சார்புடைய கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. புலம்பெயர் சூழல், போராட்டக்களம், என்பன சமூக அமைப்பில் இருந்த பெண்களுக்கான மரபுவழித் தளைகளை உடைத்தெறிந்து புதுமை படைக்கும் சூழலை அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இதன் விளைவே பெண் கவிஞர்களின் பல்கிப் பெருகிய தோற்றமாகும்.

நிருபாவின் ‘மாப்பிள்ளைக்கு வந்தனங்கள்’ என்ற தனிக் கவிதையில் வரும்
“…பூமியை விட்டு நான்
செவ்வாயில் வாழச் சென்றால்
சூரியனையும் சந்திரனையும்
சீதனமாக் கேட்பீரோ?”(21)

என்ற வரிகளும், பாமினியின்

“மாப்பிள்ளை வாங்கலியோ
மாப்பிள்ளை வாங்கலியோ
மாத வருமானமுள்ள
உள்நாட்டு மாப்பிள்ளைக்கு
கைரொக்கத்துடன்
கணிசமான தொகையும்……”(22)

எனத் தொடரும் கவிதையும் சீதனத்துக்கு எதிராகத் திரண்ட பெண்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

“எங்களைப் பாருங்கள்-எங்கள்
சேலைகளையும் ரவிக்கைகளையும் அல்ல
எமது உணர்ச்சிகளை……”(23)

“எனக்கு முகமில்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை………”(24)

“… அகதியாதலால்
ஆடையில் இருந்து
உறுப்புக்கள் வரைக்கும்
பார்வைகளால்
விசாரிக்கப்பட்டு
வயோதிபரில் இருந்து
இளைஞர் வரைக்கும்
காமப் பார்வையை
என்மேல் பதிப்பர்
பெண்ணாதலால்”(25)

அடுப்பங்கரையில் சாம்பல் பூச்சிகளாய் ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய இத்தகைய கவிதைகள் ஆவேசத்தின் குரலாகவும், அடக்குமுறையின் வெளிப்பாடாகவும் உள்ளமை விசேடமானது. போராளிக் கவிஞர்களான கஸ்தூரி, வானதி, பாரதி போன்றோரும் பெண்ணியம் சார்புடைய கவிதைகளை எழுதித் தம்மையும் அடயாளப்படுத்தினர்.

பாலுறவில் பேசாப்பொருளாக இருந்த உணர்வுகளும் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. ஆண்-பெண் உறவில் திருப்தி காணாத நிலையில் தமது ஏக்கத்தை வெளிப்படுத்தவும் கவிதைகளைத் தெரிவு செய்தனர்.(26) இத்தகைய புரிதலின் வெளிப்பாடாக ரஞ்சினியின் ‘புரிதலின் அவலம்’ என்ற கவிதை விளங்கக் காணலாம்

எண்பதுகளின் பின்னர் ‘சோலைக்கிளி’யின் வரவானது இனஉணர்வு வழிவந்த மாற்றங்களுக்கு இடமளிப்பதாக அமைந்திருந்தது. படிமக் கவிஞராகத் தன்னை இனங்காட்டிய இவருடைய கவிதைகளில் படிமங்களே மொழியாக அமைந்து விடுவதனால் கவிதைகளின் வனப்பும் சிறப்புடன் பேணப்படுகின்றது.(27)

தொன்னூறுகளில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது இருப்பை மேலும் இழக்கத் தொடங்கியது. விடுதலைக்கான இருப்பும் இருப்புக்கான விடுதலையும் இக்காலத்தில் அதிகம் சிலாகிக்கப் பட்டது. படிமம், குறியீடு, உருவகம் போன்ற வனப்புக்கள் அதிகம் நிறைந்திருந்த போதிலும் அவை கவிதைக்கு ஒருவகையான அழகு சேர்ப்பனவாகவே அமைந்திருந்தமை சிறப்பானது.

அஸ்வகோஸ், கருணாகரன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி கருணாகரன், அறபாத், ஆத்மா, றஸ்மி, போன்ற இளம் கவிஞர்கள் 1990களின் பின்னர் கவிதை முயற்சியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, முற்காலக் கவிஞர்களின் ஆளுமையில் இருந்து முற்றிலும் விடுபட்டு சூழலுக்கேற்ற விதத்தில் அசாதாரண எளிமையும் படிமப் பிரயோகச் செறிவும் உடையனவாகத் தமது கவிதைகளைப் படைத்தனர்.

ஈழத்துக் கவிதை இலக்கியத்தின் மற்றொரு கூறாக அமைவது முஸ்லீம் தேசியவாதம் ஆகும்.வடபகுதி முஸலீம்கள் வெளியேறியதன் பின்னர்தான் கவிதைகளில் முஸ்லீம்களின் பங்கு தக்கமுறையில் பிரதிபலிக்கத் தொடங்கியது.(28) எம்.பௌசர், றஸ்மி, ஆத்மா, சிராஸ்டீன், ஸஹ{ப், ஹனிபா போன்ற பல முஸலீம் எழுத்தாளர்களின் கவிதைகளில் முஸ்லீம் தேசியவாதம் முனைப்புப் பெற்றுள்ளதைக் காணலாம்.

அமரராகிவிட்ட குறிஞ்சித் தென்னவனின் பணி கவிதை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான கவிதைகளினை எழுதி மலையகக் கவிதைக்கான தன்னாலான பணியினைச் சிறப்புடன் செய்த இவருடைய கவிதைகள் அடங்கிய சிறு தொகுதி நூலொன்று நீண்ட நாளின்பின் நிறைவேறிய போது, “எனது நெடுநாட்க் கனவு நிறைவுறுகிறது”(29) என அகமகிழ்ந்தார்.

குறிஞ்சித் தென்னவனைத் தொடர்ந்து முரளிதரன், எலியாசன், மல்லிகை.சி.குமார் எனப்பலர் மலையகக் கவிதைக் களத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் எஸ்.முரளிதரன் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் யப்பானில் புகழடைந்த ‘ஹைக்கூ’ கவிதையாக்க முயற்சியில் ஈடுபட்டிருப்பினும் அனுபவ முதிர்ச்சியின்மை காரணமாக அம்முயற்சி இன்னும் இம்மண்ணோடு சுவறவில்லைப்போல் தெரிகிறது.

ஈழத்துக் கவிதைப் பரப்பானது நீண்டு விரிந்த ஒரு வரண்முறையான நெடுவழியில் பயணித்து இன்றைய நிலையினை அடைந்துள்ள தற்காலச் சூழலில், முது கவிஞர்களின் சுவடுகளிடையே பயணிக்க இளங் கவிஞர்கள் பலர் முயன்று கொண்டிருப்பினும் அவர்களுக்கான காத்திரமான களமும், படைப்புச் சூழலும், வசதிவாய்ப்புக்களும் அதிகரிக்குமிடத்து உயிரோட்டமான இன்னும் பல கவிதைகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்