2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்

யாழ்ப்பாண மன்னர் கால இலக்கியங்களினை பொருள், வடிவ, பண்பு என்ற நெறிகளுள் எதனடிப்படையில் ஆராய்வதென்பதில் பலரும் பல்வேறு சிக்கல்களினை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் ஆய்வு வசதி கருதி ‘பண்பு’ அடிப்படையில் பின்வருமாறு பகுத்து ஆராயலாம்.
1. சமய சார்புடைய நூல்கள்
2. சோதிட நூல்கள்
3. வைத்திய நூல்கள்
4. தழுவல் நூல்கள் ஃ காவியம்
5. வரலாறு சார்புடைய நூல்கள்

2.1.1. சமய சார்புடைய நூல்கள்

யாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்னுமளவிற்கு இந்துசமயச் செல்வாக்கானது நிலைபெற்றிருந்ததனை அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசோச்சிய மன்னர்களும் மக்களும் மதப்பற்று மிக்கோராகவும் கோயிற் பண்பாட்டுடன் ஈடுபாடுடையவர்களாகவும் விளங்கினர். ஆலயத் தொண்டர்கள் ஆலயங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். ஆட்சிப் பரப்புக்குள் ஆலயங்களும், வழிபாட்டு மரபுகளும் நன்கு வேரூன்றி இருந்தமையினால் சமயச் சார்புடைய இலக்கியங்களும் தோற்றம் பெற்றன.

அக்காலத்தில் எழுந்த சமயச் சார்புடைய இலக்கியங்களினை இரண்டு பிரிவுகட்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடிகின்றது.
1. கற்றோரை மையமாகக் கொண்டெழுந்தவை.
2. அடிநிலை மக்களை மையமாகக் கொண்டவை.
3.
என்பனவாம்: எனினும் இன்றுள்ளவற்றுள் அடிநிலை மக்களுக்குரியனவான இலக்கியங்களினைக் காண முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் அடிநிலை மக்களுக்குரிய இலக்கியங்கள் பலவும் வாய்மொழி மரபினவாக இருந்தமையே எனலாம்.

அ. தக்கிண கைலாய புராணம்
ஆ. கதிரமலைப் பள்ளு
இ. கண்ணகி வழக்குரை
ஈ . திருக்கரைசைப் புராணம்
என்பன சமயச் சார்புடைய நூல்களாகும்.

அ. தக்கிண கைலாய புராணம்

தக்கிண கைலாய புராணத்தின் ஆசிரியர் யாரென்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
1. ஐந்தாம் செகராச சேகரன்(செயவீரசிங்கை ஆரியன்) இதை எழுதினான், என கா.சிதம்பரஐயர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் போன்றோர் கூறினர்.
2. பண்டிதராசனால் எழுதப்பட்டதென பு.பொ.வைத்தியலிங்க தேசிகர், சி.கணேசையர் போன்றோர் கூறினர்.
3. தனது குருவாகிய சைவராச பண்டிதர் வேண்டியதால் ஐந்தாம் செகராச சேகரன் தக்கிண கைலாய புராணத்தைப் பாடினான் என அரசகேசரி தனது சிறப்புப் பாயிரச் செய்தியில் கூறியுள்ளார்.(6)

இவ்வாறான சிக்கல்கள் இருப்பினும் இது யாழ்ப்பாண இராச்சிய கால நூல் என்பதில் ஒருமித்த கருத்ததையே எல்லோரும் கொண்டுள்ளனர். 7சருக்கங்களினையும் 635செய்யுட்களினையும் கொண்டு கோணேச்சரப் பெருமான் சமேத மாதுமை அம்மையை வாழ்த்திப் பாடிய தல புராணமாக விளங்குகின்றது. கற்பனை நயம் செறிந்த இந்நூல் சிறந்த நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக்காட்டாகவுள்ளது.


ஆ. கதிரமலைப் பள்ளு

கதிரையப்பர் பள்ளு என்று அழைக்கப்பட்ட இப் பிரபந்தமானது எமக்குக் கிடைத்த காலத்தால் முற்பட்ட பள்ளு இலக்கியமாகும். 1906 ஆம் ஆண்டில் முதன்முதலாக இது நூலுருப்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த தா.கைலாசபிள்ளை என்பவரே அப்பணியைச் செய்தார்.

இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முள்ளியவளையில் எழுந்தருளியுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. இதற்கும் ஓர் காரணம் உண்டு. கதிர்காம யாத்திரிகர்களின் நடைப் பயண வழியில் காட்டு விநாயகர் ஆலயம் அமைந்திருப்பதே அதுவாகும். பன்றிப் பள்ளு, குருவிப் பள்ளு வரிசையில் கதிரமலைப் பள்ளும் இப்பகுதிக்குரியதாக இருக்கலாமோ? என்ற ஐயம் வலுவுடையதாகவுள்ளது.


இ. கண்ணகி வழக்குரை

ஐந்தாம் செகராச சேகரனால் எழுதப்பட்ட நூல் கண்ணகிவழக்குரை ஆகும்.(7) இதன் பதிப்பாசிரியர் வீ.சி.கந்தையா, ‘காங்கேயன்’ என்பவர்தான் நூலாசிரியர் என்று கூறியுள்ளார். கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை என்ற இரு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இந்நூலின் ஆசிரியரை இனங்காண ஆரியர் கோன், அதியரசன், தேவையர்கோன், காங்கேயன், சகவீரன்; போன்ற பெயர்கள் நூலில் அகச் சான்றுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயரால் சிறைப் பிடிக்கப்பட்ட ‘வெற்றிவேற் சட்டம்பியார்’ இதைப் பாடினார் என்ற கருத்தும் வலுவுடையதாகவுள்ளது. இந்நூல் இரண்டு கதைப் பதிப்புக்காளாக வெளிவந்தமையினால் ஒரே நோக்கில் அவற்றை நோக்குவது பயனுடையதாகும்.

கோவலனார் கதை கண்ணகி வழக்குரை

1. கோவலர் கண்ணகை அம்மன் 1. வரம்பெறு காதை
அ. கோவலனார் பிறந்த கதை
ஆ. அம்மன் பிறந்த கதை

2. தூரி ஓட்டம் 2. கப்பல் வைத்த காதை
அ. மீகாமன் கதை
ஆ.தூரியோட்டு
இ. கப்பல் வைத்தல்

3. கடலோட்டுக் காதை 3. கடலோட்டு காதை
அ. வெடியரசன் போர் அ. வெடியரசன் போர்
ஆ. நீலகேசரி புலம்பல் ஆ. நீலகேசி புலம்பலும்
வீரநாராயணன் கதையும்
இ. வீரநாராயணதேவன் போர் இ. மணி வாங்கின கதை
ஈ . விளங்கு தேவன் போர் ஈ . விளங்கு தேவன் போர்

4. மணமாலை 4. கலியாணக் காதை

5. அரங்கேற்றுக் காதை 5. மாதவி அரங்கேற்று காதை

6. கோவலரைப் பொன்னுக்கு - 6. பொன்னுக்கு மறிப்புக் காதை
மறித்த காதை அ. பொன்னுக்கு மறிப்பு
ஆ. இரங்கிய காதல்

7. சிலம்பு கூறல் 7. வழிநடைக் காதை
அ. வயந்தமாலை தூது
ஆ. வழிநடை

8. உயிர் மீட்சிக் காதை 8. அடைக்கலக் காதை

9. வழக்குரை-மதுரை தகனம் 9. கொலைக் களக் காதை
அ. சிலம்பு கூறல்
ஆ. கொலைக் களக் கதை
இ. அம்மன் கனாக்கண்ட கதை
ஈ . உயிர் மீட்புக் கதை10. குளிர்ச்சி 10. குளிர்ச்சிக் காதை
அ. குளிர்ச்சி
ஆ. வழக்குரைக் காவியம்

என இரண்டு பதிப்பும் வைப்பு முறையில் மாறுபாட்டுடன் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஏட்டு வடிவில் பேணப்பட்டு வரும் இந்த நூலானது பெரும்பாலும் சிலப்பதிகாரக் கதையினைப் பின்பற்றி அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது.

ஈ . திருக்கரைசைப் புராணம்

திருகோணமலையின் வெருகல் ஆற்றங்கரையிலுள்ள ‘கரைசை’ என்னும் இடத்தில் குடிகொண்ட சிவனைப் பாடும் தலபுராணமே இதுவாகும். இந்நூலை யார் பாடினார் என அறிய முடியவில்லை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் பொழிப்புரையுடன் திருகோணமலை வே.அகிலேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்புராணத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக பாயிரத்தில் 14 செய்யுட்கள் உள்ளன. அதைவிட நான்கு சருக்கங்களிலும் மொத்தம் 155 செய்யுட்கள் காணப்படுகின்றன.

சிலேடையணி மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வர்ணனை மிகுந்து விளங்கும் இந்நூலில் விருத்தப்பாவே பயன்படுத்தப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ‘மாவலி’ ஆற்றினை “அகத்தியத் தாபனம்” என்ற சிறப்புப் பெயரினால் இந்நூல் சுட்டுகின்றமை விசேடமானது.

2.1.2. சோதிட நூல்கள்

நாட்டு வளத்தைப் பேணுவதற்கும் அரச கருமங்களினை நாள், கோள், நிமிர்த்தம் பார்த்துத் தொடங்கவும் அக்கால மன்னர்கள் சோதிடக் கலையினைப் பேணி வந்திருக்கலாம். என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் மன்னர்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தவும் இக்கலை பெரிதும் உதவியதனை அறிய முடிகின்றது.

இந்நிலையில்;: சரசோதிமாலை, செகராசசேகரமாலை ஆகிய இரு சோதிட நூல்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றது.

அ. சரசோதி மாலை

தம்பதெனியாவில் அரசு புரிந்த நாலாம் பராக்கிரமபாகுவினுடைய அரச சபையில் கி.பி.1310இல் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை(8) என்னும் காலத்தால் முந்திய சோதிட நூலானது தேனுவரைப்பெருமாள் என அழைக்கப்பட்ட போசராச பண்டிதரால் இயற்றப்பட்டது என்பதற்கும் அவரது குலம், அரங்கேற்றம் நிகழ்ந்த இடம் எது என்பதற்கும் தகுந்த ஆதாரங்களை இந்நூலின் இறுதிச் செய்யுள் வழங்குகின்றது.

ஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன.

ஆ. செகராசசேகர மாலை

யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் இதுவாகும். உவமை, சிலேடை, உருவகம் என்பன நிறைந்து இலக்கிய நயம் தோன்ற இந்நூல் பாடப்பட்டுள்ளது.

படலம் என்னும் பகுப்பு முறைக்கமைவாக மகளிர் வினைப் படலம், மைந்தர் வினைப் படலம், மணவினைப் படலம், கூழ் வினைப் படலம், வேந்தர் வினைப் படலம், கோசரப் படலம், யாத்திரைப் படலம் என்னும் 7படலங்களும் பொருட் பகுப்புக்கு ஏற்ப அடுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

வாக்கிய பஞ்சாங்க ஆசான் கொக்குவில் சி.இரகுநாதஐயர் இதற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். செகராசசேகரனின் புகழ் இந்நூலில் ஆங்காங்கே விளித்துக் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமண குலத்தினர் என்பதற்கு இந்நூலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு வேண்டிய நற்கருமங்களை ஆற்றவேண்டிய நாள், கோள் தொடர்பான கருத்துக்களும் இதில் நிறைய உண்டு.

2.1.3. வைத்திய நூல்கள்

ஈழத்தில் மருத்துவ நூல்களின் தொடக்கத்தினை ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து அறிய முடிகின்றது. செகராசசேகரம் பரராசசேகரம் ஆகிய இரு நூல்களுமே தொடக்க காலத்து வைத்திய நூல்களாக இனங்காணப்பட்டன. இவை இரண்டும் வடமொழி ஆயுர்வேத நூல்களைத் தழுவி எழுந்தன என்றும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் இலங்கையில் மருத்துவ அறிவு பரவியிருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.(9)

அ. செகராசசேகரம்

இந்நூல் நோய்களையும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும் கூறுகின்றது. 15 வகையான சுரம் பற்றியும், 13 வகையான சன்னி பற்றியும், 85 வகையான வாத வகைகளினையும், 21 வகையான மூல வியாதிகளினையும் அவை எல்லாவற்றுக்குமான மூலிகைகளினையும் இந்நூலில் விரிவாகக் காண முடிகின்றது.

ஆ. பரராசசேகரம்

40 வகையான சன்னி, 40 வகைப் பித்தரோகம், 64 வகைச் சுரம், 96வகைச் சிற்பனரோகம், 40 வகை மேகரோகம், 108 வகை உதரரோகம், 13வகை மூலரோகம் போன்றவற்றையும் அவற்றுக்கான ஆயுர்வேதக் குறிப்புக்களையும் இதில் காணமுடிகின்றது. நீரிழிவு, கரப்பான், பிளவை, கிரந்தி, விக்கல், வலி, கசம், வாந்தி போன்ற வியாதிகளுக்கும் இதில் தீர்வு கூறப்பட்டுள்ளது.

2.1.4. தழுவல் நூல் அல்லது காவியம் அல்லது மொழிபெயர்ப்பு நூல்

ஈழத்தில் முதல் காவியத்தைச் செய்த பெருமை ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் வந்த நீர்வேலி அரசகேசரிக்கே உரியது. யாழ்.நல்லூரில் பிறந்த இவர் 1616இல் இக்காவியத்தைப் பாடினார் என்பர். வடமொழியில் காளிதாஸ மகாகவியினால் எழுதப்பட்ட இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பே அரசகேசரியின் காவியமாகும்.

இரகுவம்சம்


திலீபமகாராசா காமதேனுவை வழிபட்டு ‘இரகு’ என்பவனைப் புத்திரனாகப் பெற்ற கதையும், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் போன்றோரின் குல வரலாறும் இக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என முக்காண்டங்களை உடைய இக்காவியம் முறையே 16, 6, 4 படலங்களை ஒவ்வொரு காண்டத்துக்கும் உரியதாகக் கொண்டு காப்புச்செய்யுள், பாயிரச்செய்யுள் உட்பட 2444பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது.

சொல்லணி, பொருளணிகள் மிகுந்து அரிதான சொற்கள் பயின்று வருவனவாக இதன் செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளமை அரசகேசரியின் புலமைக்குச் சிறந்த சான்றாக உள்ளது. நாவலரின் மருமகனான வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளை இக்காப்பியத்தை கி.பி.1887இல் பதிப்பித்து வெளியிட்டார். வித்துவான் சரவணமுத்து அவர்கள் இதற்குப் பொழிப்புரை எழுதினார்.

இக்காப்பியத்தினை ஆதாரமாகக் கொண்டு சுன்னாகம் அ.குமாரசுவாமி புலவர் அவர்கள் ‘இரகுவமிச கருப்பொருள்’ ‘இரகுவமிச சாராமிர்தம்’ என்ற இரண்டு வசன நூல்களினை எழுதினார்.

2.1.5. வரலாற்று நூல்கள்

யாழ்ப்பாண மன்னர் காலத்து வரலாறு கூறும் நூல்களாக எமக்கு இன்று கைலாயமாலையும் வையாபாடலும் கிடைக்கின்றது. கோணேசர் கல்வெட்டு எழுந்த காலம் பற்றி பலரும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டு காணப்படுகின்றனர்.

அ. கைலாயமாலை

கைலாயமாலை என்ற வரலாற்று நூலானது முத்துராயர் என்னும் புலவரினால் அருளப்பட்டது என்பதற்கு அந்நூலில் வரும் வெண்பா ஒன்று சான்றாக அமைகின்றது.எனினும் இவ்வெண்பா நூலாசிரியரால் எழுதப்பட்டதா? இடைச் சொருகலா? என்பதில் பலரிடையேயும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

யாழ்ப்பாண மன்னர் காலத்து அரசுக்கு அனுசரனை புரிந்த நிலவுடைமை வர்க்கத்தினரின் தொன்மையும் சிறப்பும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளமையினால் இது ஆளும் வர்க்கத்துக்குச் சார்பான ஓர் நூல் என்பதை உணர முடிகின்றது. குறிப்பாக இந்நூலில் வரும் நல்லூர் சட்டநாதர் ஆலய வரலாறும் அதைக் கட்டுவித்த சிங்கையாரியனின் வரலாறும் இதை எமக்குத் தெளிவாக உணர்த்தி நிக்கின்றன.

ஆ. வையாபாடல்

செகராசசேகரனின் அவைப்புலவரான வையாபுரிஐயர் செய்த இந்த நூலானது இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களையும் அவர்களின் குலம், குடிகள் பரவிய விதம் போன்றவற்றை உரைக்கின்றது. கூலங்கைச் சக்கரவர்த்தியின் பெருமையினை உரைப்பதனூடாக ஆரியச்சக்கரவர்த்திகளைப் புகழும் நூலாகத் திகழ்கின்றது.

வன்னி அடங்காப்பற்றில் வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றிய செய்திகளையும் இந்நூல் தருகின்றது. ஈழத்தில் நாச்சிமார் வழிபாடு எப்போது? எப்படி? பரவியது என்ற செய்தியையும் இதிலிருந்து அறிய முடிகின்றது. அதேநேரம் இந்நூலில் இடைச் சொருகல்கள் உள்ளன. என்ற ஆ.சதாசிவம் அவர்களின் கருத்தினையும் எளிதில் நிராகரிக்க முடியாமல் உள்ளது.

இ. கோணேசர் கல்வெட்டு

‘கல்வெட்டு’ம் தனித்துவமான ஓர் இலக்கிய வடிவமாக நிலவி வந்தமையினை நாம் ‘கோணேசர் கல்வெட்டின்’ மூலம் தெளிவாக உணரலாம் குளக்கோட்டு மன்னனால் கோணேசர் கோயில் கட்டப்பட்டமை, அவனது குலமரபு, சந்ததி பற்றிய விவரம், பணிகள் தொடர்பான விடயங்களினை இந்நூல் விரிவாகத் தருகின்றது. இந்நூலில் பல இடங்களில் இடைச்சொருகல் காணப்படுவதாக இதை ஆய்வுசெய்த ஈழத்தறிஞர் பலரும் குறிப்பிடும் அதேயிடத்து பேராசிரியர் சி.பத்மநாதன் இதனை ஓர் தொகுப்பு நூல் எனக் கருதுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதன் காலம் தொடர்பாகச் சர்ச்சைகள் நிலவுகின்ற போதிலும் 17ஆம் நூற்றாண்டில் ‘கவிராஜவரோதயன்’ என்பவரால் பாடப்பட்டது என பேராசிரியர் சி.பத்மநாதன் கருதுகின்றார். ‘கவிராஜன், இராஜவரோதயன்’ என இருபெயர்கள் இந் நூலாசிரியருக்கு இருந்தன. எனப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளமை ஆய்வுக்குரியதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்