குழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் சவால்களும்

குழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் சவால்களும்


இருபதாம் நூற்றாண்டில் புத்தெழுச்சி பெற்ற துறைகளுள் குழந்தை இலக்கியமும் அடக்கம்.


“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ்….”

( தொல்; . செய்யு . 75)

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் செவிலிக்குரியதெனக் கொள்ளப்பட்ட ‘பிசி’வகை இலக்கியம் குழந்தை வளர்ப்புடன் சம்மந்தப்பட்டதென்பதை அறிய முடிகின்றது. ‘பிசி’ என்பது ஒருவகையான ‘விடுகதை’ அமைப்புடன் விளங்கிய இலக்கிய வகையாகும். பிசிக்கு விளக்கம் தந்த உரையாசான் ‘பேராசிரியர்’, “பிறை கவ்வி மலை நடக்கும்” (பிறைகவ்வி - தந்தத்தினை வாயில் கவ்வி , மலை நடக்கும் -யானை நடக்கும்) என உதாரணம் தந்தமை விசேடமானது.

இன்றைய தமிழ்ச் சூழலில் குழந்தை இலக்கியத்துக்கான வரவேற்பு எவ்வளவு தூரம் இருக்கின்றது? என்ற வினா இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் இயல்பாகவே எழுகின்றது. உலகில் குழந்தை இலக்கியங்கள் எங்கெல்லாம் செழுமையுடன் உள்ளதோ அங்கெல்லாம் சிறந்த சமூக உருவாக்கம் நிகழ்கின்றதென அர்த்தம் கொள்ள முடிகின்றது. இலங்கையில் கவிமணி.தேசிகவிநாகம்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், அழ.வள்ளியப்பா, வாணிதாஸன், பண்டிதர் க.வீரகத்தி, அம்பி, தமிழோவியன், புலவர் இளங்கோ போன்ற சிலர் குழந்தைக் கவிதைகளைப் படைத்துப் புகழடைந்தனர்.

ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, நறுந்தொகை போன்றவற்றையும் குழந்தை இலக்கிய வகைகளுள் சேர்ப்பது வழக்கம். பிரக்ஞை பூர்வமான அவ் எழுத்துக்கள் குழந்தைகளுக்கான புரிதலில் நின்று கொண்டு அவர்களின் மொழியில் படைக்கப் பட்டதா? என்பது முக்கியமான வினாவாகும். அறிவியல் நோக்கினையும் அதீத போதனைப் பண்பினையும் நிறைத்து ஒருவகையான எளிமைப் படுத்தப்பட்ட பாடல்களாக அவை படைக்கப் பட்டனவே தவிர அவற்றினைக் குழந்தைகளுக்குரியன என்ற நிலையில் முற்றுமுழுதாக ஏற்க முடியாதுள்ளது. குழந்தைகளுக்கான தரமான இலக்கியங்களில் குழந்தைகளின் களங்கமில்லாத மனம் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தை உள்ளத்துக்குத் திருப்பதி தரக்கூடிய பாடல்கள் தான் இலகுவில் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன.

நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை”, “கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா” போன்ற பாடல்களும் கவிமணி தேசிய விநாகம்பிள்ளையின் “எலிக் கலியாணம்”, “அப்பம் திருடின எலி” முதலியனவும் அம்பியின் “காகமும் நரியும்”, “அன்புள்ள அண்ணன்”, “நரியின் தந்திரம்" போன்ற பாடல்களும், கதைப் பாடல்களும் குழந்தைகளின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளன என்றுதான் கூறவேண்டியுள்ளது.

குழந்தை இலக்கியங்கள் என்று கூறும்போது பொதுவாக குழந்தைக் கவிதைகளும், கதைப் பாடல்களுமே எல்லோர் முன்னும் எழுந்து நிற்கின்றன. ஆக, பாடல்கள் தான் குழந்தைகளுக்கான இலக்கியங்களா? என்ற மற்றொரு வினாவும் இவிடத்தில் எழுகின்றது. கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எனப் பல்வேறு வகையான குழந்தை இலக்கிய வகைகள் உள்ளன. இன்று தொழிநுட்ப ரீதியில் உலகம் முன்னேறிவிட்ட நிலையில் ‘கார்ட்டூன்’ மூலமான சித்திரங்களும், நாடகங்களும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன.

சிலர் குழந்தைகளுக்கான இலக்கியங்கள் என்று மர்ம-துப்பறியும் கதைகளையும், திருடன்-பொலிஸ் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையும் எழுதிக் குவித்து குழந்தைகளை வியப்பில் ஆழ்த்துகின்றனர். வேறுசிலர் கனவான்கள், கற்பனைக்கும் எட்ட முடியாத மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் என தம் கதைகளில் கதை மாந்தர்களைப் படைத்து குழந்தை இலக்கியங்களை வெறும் வியாபாரப் பண்டமாக்கி விடுகின்றனர். இன்றைய சிறுவர் தொலைக்காட்சித் தொடர்கள் கூட இத்தகைய இயல்புகளுடன் தான் உள்ளன. இவை குழந்தைகளை எதிர்காலத்தில் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டும் சாதனங்களாகியும் விடுகின்றன.

கணினி-இணைய அலைகள் பல்கிப் பெருகிய இன்றைய நவீன யுகத்தில் எல்லா வகையான ஊடகங்களும் காலத்துக்கு ஏற்ற முறையில் தம்மை மாற்றியமைக்க முனைகின்றன. அதற்கு இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. எனவே, இந்த நவீன யுகத்தில் குழந்தை இலக்கியம் செல்வதற்கான பாதை எப்படி இருக்க வேண்டும்? அவற்றினை எவ்வாறு செம்மைப் படுத்தலாம்? போன்ற விடயங்களைக் குவிமையப்படுத்திய பின்னர் நவீனத்துவ மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தை இலக்கியத்தையும் புதுப்பிக்க முடியும்.

இங்கு குழந்தைகளுக்கான இலக்கியங்களை யார் படைக்க வேன்டும்? என்ற இன்னொரு கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் குழந்தை இலக்கியகாரருக்கு சமூகத்தில் மிகச் சாதாரணமாக அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. சிறப்பான குழந்தை இலக்கியகாரர்கள் பலர் தமது துறைகளைத் துறந்து மனம் சலித்து வெளியேறிய சம்பவங்களும் உண்டு. இளம் எழுத்தாளர்கள் பலரும் குழந்தை இலக்கியங்களைப் படைப்பது இல்லாதொழிந்து விட்டது. அவர்களுக்கான போதிய வரவேற்பின்மையும், உளவியல் அறிவுள்ள குழந்தை எழுத்தாளர்களின் வளப் பற்றாக்குறையுமே இதற்கான மூல காரணமாக இருப்பினும் குழந்தைகளின் வானொலி, தொலைக்காட்சி, சினிமா மோகமும் தடைக் கற்களாக முன் நிற்கின்றன.

முதியோரின் பக்குவப்பட்ட சிந்தனைத் திறனும் குழந்தைகளின் அகவய உணர்வோட்டங்களும் முட்டிமோதி மாறுபட்ட இரு திசைகளில் பயணிக்க தலைமுறை விரிசல் ஏற்படுகின்றது. இந்த விரிசல் நாளடைவில் எதிர் கலாசாரச் சிந்தனைகளை உள்வாங்கும் நிலைக்குக் குழந்தைகளைத் தள்ளிவிடுகின்றன. எனவே குழந்தை இலக்கியந்களைப் படைப்போர் படைப்பு முறைகளில் புதிய மாற்றங்களைப் பிரயோகித்துப் பார்க்கலாம். காடசி ஊடகங்களின் மூலம் குழந்தைகளை மகிழ்விக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கான இதழ்களை, புத்தகங்களை உருவாக்கி அதன்பால் குழந்தைகளையும் சிறுவரையும் கவர்ந்திழுத்து அவர்கள் மூலமாக இலக்கியங்களைப் படைக்கலாம். இதனால் அவர்களின் ஆழ்மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் குழந்தைகளுக்கான இலக்கியங்கள் அறம், போதனை போன்றவற்றினால் கட்டுண்டு, தீர்வுகளின் திசைகளைக் கண்டறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, மேலை நாடுகளில் காட்சி ஊடகங்களும், அவற்றுக்கிணையாக சிறுவர் இலக்கியங்களும் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழிலும் அத்தகைய ஒரு முயற்சி முடியாத காரியமல்ல. நவீன தொடர்பாடல் சாதனங்களின் உதவியுடன் பல புதுமையான உத்திகளைக் கையாண்டு ஏற்கனவே சொல்லப்பட்டபடி நவீனத்துவத்தினூடே அறம், போதனை போன்ற சுமைகள் இன்றி பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி குழந்தைகளின் மனதில் எதையும் வலிந்து திணிக்காது குழந்தைகளின் மொழியில் அவர்களின் ஈடுபாட்டிற்கு ஏற்ப குழந்தை இலக்கியங்களைப் படைப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி