கிழித்தெறியப்படும் கவிதைகள்










இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல்  – நாம்
எம் கவிதைகள் படித்தோம்

காலம் உருண்டு இச்சைக் கருவிக்கு
சண்டை போட்டபோது
கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள்

சாத்தான்களின் இவ்வுலகில் – இங்கு
யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை – ஆதலால்
எங்கள் கவிதைத் தாள்களை
அடிக்கடி இங்கே பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன.

அந்தர வெளியில் மிதந்து
காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும்
தலைகீழ் பட்சிகளாய்
எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன்
ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும்
முகர்ந்து பார்த்தபடி நகரும்  நிர்வாண நாய்கள்…

களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில்
புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு
குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து
குரல்வளை நசுக்கும் நகரத்து ஓநாய்கள்…

இரண்டகப்  பிண்டங்கள் உலவும் பெருநகரில்
கவிதைகள் பற்றிய தேடலில் – பிசாசுகள்
பேதங்கள் பார்ப்பதில்லை.
பிண்டம் ஒன்றே நோக்கெனக் கொண்டு
எங்கள் கவிதைகளை – அவை
எப்போது வேண்டுமானாலும்
நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன.

– தியா –

கருத்துகள்

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி