துணை

ந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத அதே தோற்றம். 


உடைய மாற்றிய பின் எல்லா உடுப்புக்களையும் வோசரில் தோய்க்கப் போட்டு விட்டுத் திரும்பவும் கைகளைக் கழுவினாள். பால் விட்டு நிறையச் சாயம் போட்டு ஒரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு பொட்டுக் கடலை டப்பாவுடன் பாடியோவுக்குப் போனாள். 


O/L முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவளை சரியாக இருபத்து வருடங்களுக்கு முதல் நல்ல சம்மந்தம் என்று 17 வயசில தாயும் தகப்பனும் கலியாணம் பேசி 28 வயசு மாப்பிள்ளையிடம் வெளிநாட்டுக்கு அனுப்பின போது அவள் நினைத்திருக்கவில்லை இப்பிடியெல்லாம் வெளிநாட்டிலை கஸ்ரப்பட வேண்டி வரும் என்று.


தேத்தண்ணியை இரண்டு மூன்று தடவைகள் ஊதிய பின் உறிஞ்சியவள் பொட்டுக் கடலையைக் கரண்டியால் அள்ளி வாயில் போட்டபடி இளையராசாவை காதுக்குள்ளெ தாலாட்ட விட்டபடி பாடியோவில் உள்ள சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தாள். 


வழமைபோல அந்த ஒற்றை முயல் வந்து பொட்டுக் கடலைக்காகக் காத்திருந்த போது. ஒரு கரண்டி பொட்டுக் கடலையை அள்ளி முயலுக்கெனவே அவள் வாங்கி வைத்திருந்த தட்டில் போட்டு விட்டு அது சாப்பிடுவதை ரசித்தபடி இருந்தாள். 


கலியாணமாகி வந்த புதிதில் ஒரு குட்டிப் பெண்ணாக இங்கு வந்தபோது அவளது உலகம் முன்பின் அறியாத அவளின் கணவனை மட்டுமே சுற்றியிருந்தது. 


மொழிதெரியாத ஊரில் யாரையும் அவள் அறியாள். கணவன் காட்டும் முகங்களையே உறவென நம்பினாள். ஆறு மாதங்களில் முதல் கரு அழிந்து... பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தபோது அவனைச் சுற்றிய அவளது உலகம் பின்னப்பட்டது. 


மகன் பல்கலைக் கழகம் போன பிறகு, வேலை… வீடு கூட்டிப் பெருக்குதல் என அவளுக்கு எல்லாவற்றையும் தனிமையில் செய்யவதே ஒரு போராட்டமாக இருந்தது. 


இந்த ஒரு அறை உள்ள  அப்பார்மெண்ட்டுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது. அவள் இங்கு குடி வந்து ஒரு நாலு மாதத்திலிருந்து அந்தப் பெட்டை முயலும் அவளின் நட்பு வட்டத்துக்குள் வந்து சேர்ந்தது. 


முதல் பழக்கத்தில் முயல் அவளுக்குக் கிட்ட வரப் பயந்தது. ஊரிலை காட்டு முயலை வேட்டையாடிக் காதிலை பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போறத்தைப் பார்த்திருக்கிறாள். 


அந்த முயல் “சூ” எண்டால் கண்ணிமைக்குறதுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தாண்டிடும் ஆனால் இந்த முயல் “சூ” எண்டால் ரண்டடி தள்ளிப் போய் நிண்டு திரும்பிப் பாக்கும். அதுக்குத் தெரியும் தன்னை ஆரும் அடிக்க முடியாது எண்டு. இந்த முயலைப் பார்க்கும் போதெல்லாம் “முயலாய் பிறந்தாலும் வெளிநாட்டிலை பிறக்க வேணும்...” எண்டு அடிக்கடி நினைப்பாள். 


முதலில் அவள் “சூ” என்று சொன்ன போது காதுகளை அகல விரித்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி வைச்சுக் கொண்டு அவளைப் பாத்ததுமே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 


“இப்பிடியெல்லாமா முயல்கள் இருக்கும்…” என மனதுக்குள் வியந்தாள். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் வேலையால வந்ததும் வராததுமாகப் பொட்டுக் கடலையும் தேத்தண்ணியுமாகப் பாடியோவுக்கு வந்து விடுவாள். 


அவள் வேலையால் வரும் நேரம் கூட அந்த முயலுக்குத் தெரிந்திருந்தது. அவளை அந்த வீட்டில் தேடும் ஒரே உயிர் அந்த முயல்தான். 


மகனிடம் இருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ குறுந் தகவல்களை அசைப்போட்ட படி முயலை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அந்த முயலுக்கும் இடையில் பாஷைகள் இல்லாமலேயே ஒரு விதமான தொடர்பாடல் நிகழ்ந்தது.


முயலுக்கு அரை மணி நேரம்தான்  அவளுடன் பேசப் பிடிக்குமோ என்னவோ வழமை போலவே சரியாக  அரை மணித்தியாலங்களுக்குள் அது வந்த வழியே போய் விட்டது. 


அவளும் இளைய ராஜாவுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு மகனுக்கு போன் எடுத்தாள். அவனுக்கும் 20 வயது முடிந்து விட்டது. பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக விடுதியில் தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. 


எப்போதாவது கிடைக்கும் விடுமுறைக்குத் தாயைப் பார்க்க வருவதுடன் சரி. ஆனால் ஒவ்வொருநாளும் இரவு என்ன வேலை இருந்தாலும் தாய் டெலிபோனில் கதைக்க வேணும் என்பது அவனது கட்டாய உத்தரவு. 


இலங்கை நேரம் சரியாக காலமை எட்டு மணிக்கு ஊரில் உள்ள தாய்க்குப் போன் எடுத்தாள். இதுவும் அன்றாட நிகழ்ச்சி நிரலில் வருவதுதான். மறுமுனையில்...


“ என்ன பிள்ள செய்யிறாய்…” 


“நான் இப்பதான் வேலையால வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு இருக்கிறேன்…”


“சாப்பிட்டியே பிள்ள…”


“இல்லையம்மா இனித்தான் சாப்பிட வேணும்…”


அடுத்ததாக என்ன என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் இதே பல்லவி... இதே சரணம் தான்.


“என்ன பிள்ள… எத்தின நாளைக்குத்தான் இப்பிடியே தனிய இருப்பாய்…”


“அம்மா உங்களுக்குக் கனக்க முறை சொல்லிட்டேன்… இனி உதைப்பற்றி என்னோட கதைக்க வேண்டாம் எண்டு…”

“என்ன பிள்ளை இப்பதான் நாப்பது வயசு… இன்னும் எத்தின நாளைக்குத்தான் தனிய இருக்கப் போறியா…” 


மறு முனையில் தாயின் விம்மல் சத்தம் கேட்டது. “ தாய் அழத் தொடங்கி விட்டாள் என்பது தெரிந்ததும், “சரி அம்மா நான் நாளைக்கு எடுக்கிறேன்…” என்றபடி தொடர்பைத் துண்டித்தாள். 


மகனுக்கு ஏழு வயதாக இருந்த போது கணவன் தன்னை விட்டுட்டு இன்னொருத்தியோட போனபோது, இன்றுவரை மனம் தளராமல் ஒரு பக்கம் மகனையும் வளர்த்தபடி இன்னொரு பக்கம் வேலை செய்து வைராக்கியமாக வாழ்ந்து வருகிறாள். 


கணவன் விட்டிட்டுப் போன இந்தப் பதினைந்து வருஷத்தில் அவளின் வாழ்க்கை எல்லாம் மகனைச் சுற்றியே இருந்தது. மகன் பல்கலைக் கழகம் சென்ற நாளில் இருந்து அவளுக்கு எதையோ வாழ்வில் இழந்ததைப் போல ஓர் உணர்வு. என்னதான் மகனுடனும் தாயுடன் போனில் கதைத்தாலும் எதையோ ஒன்றைப் பறி கொடுத்ததைப் போல உணர்ந்தாள். 


வளமை போலவே மறுநாள் வேலையில் இருந்து வந்தவள் தேத்தண்ணிக் கப்புடன் பொட்டுக் கடலையையும் எடுத்துக் கொண்டு பாடியோவுக்குப் போனாள். நீண்ட நேரமாகியும் முயல் வரவில்லை. 


ஏமாற்றாததுடன் வழமையான வேலைகளில் மூழ்கிவிட்டாள். வெள்ளி… சனி… இப்படியே இரண்டு நாட்களும் முயல் வராமல் போகவே அருகில் வழமையாக முயல் இருக்கும் சிறிய பூச் செடிகளுக்குள்… புல் வெளியில்… பற்றைகளில் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் முயலைக் காண முடியவில்லை.


“பாவம் தனி முயல்… ஆர் தேடுவார்… என்னைப் போலவே… இப்பிடித்தானே நானும் ஒருநாள்…” பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கி மேசையில் “டமார்” என்று வைத்தவள் யோசித்தபடி விறாந்தையிலேயே நித்திரையாகி விட்டாள். 


தேத்தண்ணிக் கப்பும் பொட்டுக் கடலையுமாகத் திங்கட் கிழமை சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி இருந்தாள். தேத்தண்ணியை உறிஞ்சியபடி புல்வெளியையே பார்த்திருந்தாள் இன்றும் முயல் வரவில்லை. 


செவ்வாய் கிழமை பின்னேரம் பொட்டுக் கடலையை எடுக்க மனமில்லாமல் தேத்தண்ணிக் கப்புடன் மட்டும் போய் இளையராசாவைத் தட்டி விட்டு கதிரையில் சாய்ந்தவளுக்கு அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை. 


முயல் மெல்ல மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தது. காதுகளை விரித்து முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி அவளைப் பார்த்தது. ஓடிப் போய் பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள். 


இதுவரை காலமும் தனிமையாக வந்த முயல் இன்று இன்னொரு ஆண் முயலையும் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தது. 


“ஒருவேளை அம்மா சொல்லுறது சரிதானா…” என்று மனதுக்குள் நினைத்தபடி பொட்டுக் கடலை டப்பாவைத் திறந்து தட்டில் கொட்டினாள். கலியாணமாகி வந்த புதுமணத் தம்பதிகளுக்கு விருந்தாக. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி