அழகிய ஐரோப்பா - 8

அழகோ அழகு


மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகி இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளம் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. 

தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மினிஸ்டர் பிரிஜ் என்ற இந்தப் பாலம். 
லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான பாலங்களில் இதுவும் ஒன்று. பிரித்தானிய பார்லிமென்ட், குயின் எலிசபெத் ஹால் என முக்கியமான இடங்களின் மையப் பகுதியாக இது உள்ளது. 
இங்கிருந்து லண்டன் பிரிஜ் போவதற்கு பல வழிகள் உள்ளன நாங்கள் கப்பலில் போவதென முடிவெடுத்தோம். 

அதைப் படகென்பதா கப்பல் என்பதா என்பதில் எனக்கு சிறு குழப்பம். படகுகளை விடச் சற்று பெரியதாகவும் கப்பலை விட சின்னதாகவும் கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பயணத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெரிய படகு அது… 

படகின் மேல் தளத்தில் இயல்பாக நின்று கொண்டும் உக்கார்ந்து கொண்டும் பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது நீச்சல் உடையணிந்த சிலர் விசைப் படகுகளின் எங்களை கடந்தும் குறுக்கறுத்தும் சென்றனர். அவர்களை பார்த்து ரசித்தபடி இருந்த என்னை;


“என்ன பார்க்கிறியள்…”  என்ற  என் மனைவியின் குரல் நினைவுலகிற்று அழைத்து வந்தது…

“பார்க்கிற திசை எல்லாம் அதுவே தெரிந்தால் நான் என்ன செய்ய…” 

“அந்தப் பாலத்தைப் பாருங்கோ எப்படி வடிவு…” எனக் கதையை மாற்றினாள்…

“சரி சரி… மார்பை மூடிக்கொள் சளி பிடிக்கப் போகுது…” என்றேன். 

அழகிய ஹங்கர்ஃபோர்டு பாலம் மற்றும் கோல்டன் ஜூபிளி பாலங்களுக்கு கீழே படகு ஒரு ரதம்  போல நகர்ந்து கொண்டிருந்தது. நீலக் கம்பளம் விரித்தது போல ஆகாயத்தின் நீல நிறம் தேம்ஸ் நதி எங்கும் அப்பிக் கிடந்தது. 
நதியின் இருமருங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பரவிக் கிடந்தன. பிரமாண்டமான ராட்டினங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றுக்கும் பஞ்சமில்லை… 

“லண்டன் பிரிஜ்க்கு இன்னும் எவ்வளவு தூரம்... “ என்றாள் பார்க்கும் ஆவலில் என் மகள்… 

“இன்னும் முப்பது நிமிடங்கள் ஆகும்” என்றார் அங்கிருந்த ஒருவர்.


வாட்டர்லூ பிரிஜ்,  பிளாக்ஃபைர்ஸ் பிரிஜ்,  மில்லினியம் பிரிஜ்,  சவுத்வார் பிரிஜ், கேனன் ஸ்ட்ரீட் ரயில்வே பிரிஜ் என அடுக்கடுக்காக ஐந்து பாலங்களைக் கடந்தபோதுஅருகில்  அழகிய லண்டன் பிரிஜ் எங்களை நெருங்கியது.

என் பிள்ளைகளுடன் இன்னும் சில பிள்ளைகள் கூட்டாக “ லண்டன் பிரிஜ் இஸ் ஃபோலிங் டவுண்…” என பாடத் தொடங்கினர். 

நானும் என் கண்ணில் பட்டதை எல்லாம் பல கோணங்களில் என் காமெராவுக்குள் கொண்டு வந்தேன். 

எல்லோரும் படகை விட்டு இறங்கி லண்டன் பிரிஜ் அடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கியதுதான் தாமதம் எங்கிருந்து வந்ததோ தெரியாது பேய் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. 


கண்ணாடி இழைகளால் அமையப்பெற்ற அழகிய பந்தல் போன்ற அமைப்புடைய இடத்தில் சென்று சேர்ந்தோம். அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டார்பெர்க் காஃபி ஷாப் எதிரே தெரிந்தது.

“எனக்கு பசிக்குது…” என்றான் மகன் 

“அவனுக்கு ஒரு டோனட் வாங்கி வரும்போது எனக்கு ஒரு காஃபி” என்றாள் என் மனைவி

 காஃபி ஷாப் மெனு கார்டில் ஸ்வீட் சாய் டீ இருந்தது. எனக்கு ஒரு ஸ்வீட் சாய் டீ சொன்னேன் தனக்கு காஃபி வேண்டாம் ஸ்வீட் சாய் டீ வேணும் என்றாள் என் மனைவி. 
“சாய் டீ நல்லாய் இருக்குதா” மனைவியைப் பார்த்துக் கேட்டேன்.

“ம்ம்ஹூம்…” எனத் தலையை ஆட்டினாள்

சாப்பிட்ட வரை போதும் என்று எழுந்தபோது மழை நின்று கருமேகங்கள் கலைந்து வானம் மறுபடியும் வெளுப்பானது. ஒருவிதமான குளிர் காற்று வீசத் தொடங்கியது. 

“சரி வாங்கோ விழுந்து எழுந்த பாலம் பார்க்க போவோம்” என்றேன்… 

“என்னது விழுந்து எழுந்த பாலம்… “ என்றாள் என் மகள் 

“லண்டன் பிரிஜ் ஐஸ் ஃபோலிங் டவுண்…” என்றேன் 


மீண்டும் குட்டிஸ் மூவரும் சேர்ந்து “லண்டன் பிரிஜ் இஸ் ஃபோலிங் டவுண்…” எனப் பாடத் தொடங்கினர். 

சுமார் ஒரு மணிதியாலத்துக்கு மேலாக மெல்லிய தூறல் விழும் மிக ரம்மியமான வானிலையில் பிடித்தமான குளிரில் மனதுக்கு மிகப் பிடித்தமான மிகவும் வேண்டப்பட்ட மனிதர்களுடன் நதிக்கரையில் லயித்திருந்தோம்.

பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. இத்துணை காலமும் படங்களில் மட்டுமே கண்டு ரசித்த அழகை கண் முன்னே காணும் போது சொல்ல முடியாத பேரானந்தம் எமக்குள்… 


குளிர் காற்று சற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது. வானத்தில் விண்மீன்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. பிள்ளைகள் லண்டன் பிரிஜ் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். 

கைகளை ஒன்றுடன் ஒன்று இருக்க கட்டிக் கொண்டேன். ஒரு காஃபியுடன் இங்கிருந்து வெளிக்கிடலாம். குளிருக்கு நல்லது என்றபடி புறப்படத் தயாரானோம். 

ஐந்து நிமிட நடை தூரத்தில் ரயில் ஸ்டேஷன் இருந்தது. நாங்கள் வந்த மறு நிமிடமே சொல்லி வைத்தாற்போல் ரயில் வந்து நின்றது. 

ரயில் புறப்பட்டது. இரவு நேர மின்னொளியில் கண்ணாடிக்கு வெளியே அகல விரிந்துகொண்டேயிருந்த லண்டன் மாநகரின் வீதியின் இரு பக்கமும் உள்ள பிரமாண்ட கட்டிடங்களையும் விரைவுச் சாலைகளையும் வெளிச்சத்தால் அதைப் போர்த்தியிருக்கும் மின் விளக்குகளையும் பார்க்கிறேன்வார்த்தைகளால் விவரிக்க முடியாத கண்கொள்ளா காட்சி அது. 

சுமார் அரை மணி நேரப் பயணத்தின் பின் வீட்டினை வந்தடைந்தோம். அன்றைய இரவு முழுவதுமாகவே தூங்க முடியவில்லை… அடிக்கடி ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி மஞ்சள் விளக்கொளி படர்ந்திருந்த இரவின் வீதியை உற்றுப் பார்க்கிறேன்… 

அதிகாலைச் சூரியனின் முதல் ஒளிக்கரம் தென்பட்டபோது மெதுவாக எழுந்து யன்னல் கண்ணாடியை திறந்த போது சில்லென்ற குளிர்காற்று முகத்தில் பட்டுத் தெறித்த போது மீண்டும் தேம்ஸ் நதியும் லண்டன் பிரிஜூம் மனதுக்குள் வந்து போனது… 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி