அப்பிள் பழமும் அம்முக் குட்டியும்

அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். 


அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. 


சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்த்தால் போதும் என்று நினைப்பான். யாழ்ப்பாண ரவுணுக்கு போறதெண்டால் அவனுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ அலுவல் இருக்குதெண்டு நினைக்கலாம். ரவுணுக்குப் போற போதெல்லாம் அவுஸ்ரேலியா அப்பிள்… அவுஸ்ரேலியா அப்பிள்…  எண்டு கூவிக் கூவி விப்பாங்கள். 


“அது கூடாத பழம்… மெழுகு பூசித்தான் விப்பாங்கள்…நீ சாப்பிடக் கூடாது ராசா” 


என்றபடி தாயோ கொய்யாப்பழக் கடையின் முன்னே போய் நிப்பாள். அவனுக்கோ அப்பிள் பழத்துக்கு ஆசைப்பட்டு ஒரு கொய்யாப் பழத்துடன் முடிந்து போகும் அன்றைய நாள்.


அமெரிக்காவில வீடு வாங்கி வீட்டுக்குப் பின் பக்கம் அப்பிள் மரம் நட்டு ஒரு பழம் எண்டாலும் புடுங்கிச் சாப்பிட்டிட வேணும் என்ற ஆசை இப்ப நிறைவேறப் போகுது என்பதில் அவனுக்கு நல்ல சந்தோசம்.


ஒரு அப்பிள் இந்த வருசம் பூக்கத் தொடங்கியதும் மனைவி சொல்லி விட்டாள் “இதுதான் பொம்பிளை அப்பிள் இது எனக்குத்தான் சொந்தம்” என்றவள் எந்த அறிகுறியும் இல்லாமல் அப்படியே நெடுத்துக் கொண்டு போன மரத்தைக் காட்டி “அதுதான் உங்கடை…” என்று முடிவாய் சொல்லி விட்டாள்.


அவளுக்கு அப்பிளைக் காயாகப் பிடுங்கி அதைத் துண்டுகளாக வெட்டி உப்புத் தூளில் தொட்டுச் சாப்பிடுவதெண்டால் அலாதிப் பிரியம். 


அப்பிள் பூக்கத் தொடங்கிய போதே நாற்பது டொலருக்கு மருந்து வாங்கி வந்து வைத்து விட்டான். பூக்கேக்கை, பிஞ்சு பிடிக்கேக்குள்ள, காய்க்கேக்கை எண்டு மூண்டு முறை மருந்தடிச்சு பாத்தாச்சு உந்தப் பூச்சித் தொல்லை மட்டும் குறையவில்லை.


ஊரிலை முற்றத்து மாதுளை காய்த்தபோது படிக்கிற புத்தகத்தைக் கிழித்து மாதுளங்காய்க்குச் சுத்திக் கட்டிப் பாதுகாத்த மாதிரி பேப்பேரை சுற்றிக் கட்டிப் பார்த்தான். 


இந்த அப்பிளைக் கட்டிக் காக்கிறது அவனுக்குப் பெரிய கஸ்ரமாக இருந்தது. ஒன்றன் பின் ஒன்றாகக் கொட்டி பதினோரு அப்பிள் காய்ச்ச இடத்தில இப்ப நாலு அப்பிள் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தது. “கன்னி அப்பிள் கனக்கக் காய்க்காது…” என்றார் அவனின் தெரிந்த நண்பர் ஒருவர்.


சின்ன வயசில ஒருநாள் பள்ளிக்கூடத்தில படிக்கேக்கை டீச்சர் சொல்லித்தான் தெரிஞ்சது, அப்பிள் பழம் மரத்தில இருந்து விழுறத வைச்சுத்தான் ஐசாக் நியூட்டனே ஈர்ப்புக் கொள்கையைக் கண்டு பிடிச்சார் எண்டு. 


அவனும் பெரிய விண்ணன் போல “அணில் கடிச்ச அப்பிளோ… காகம் கொந்தின அப்பிளோ டீச்சர்…” என்று கேட்டு விட்டான். 


டீச்சருக்கு அண்டைக்கு வந்த கோவத்துல பிரம்பால விட்டா ரெண்டு தொடையில அப்பிடியே அப்பிள் பழம் போல சிவப்பாய் ரெண்டு கோடு. அண்டைக்கு முடிவெடுத்தவன்தான் எப்பவாவது ஒரு நாளைக்கு தானும் ஆப்பிள் மரத்துக்கு கீழ படுத்திருந்து ஒரு தேத்தண்ணியாவது குடிக்க வேணும் எண்டு.


இன்னும் கொஞ்ச நாளிலை அவனுடைய கனவு நிறைவேறப் போற ஆசையில கோடைகால மலிவு விலைக்குப் போட்டிருந்த ஒரு சாய்மனைக் கதிரையை வாங்கி வந்து அப்பிள் மரத்துக்கு கீழே போட்டு பின்னேர நேரத்தில் வேலையால் வந்ததும் அப்பிள் மரத்தின் கீழே படுத்து இளைப்பாறத் தொடங்கினான். 


இன்றும் வளமை போலத் தேநீர் கோப்பையுடன் வந்து கதிரையில் இருந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு அப்பிள் காயைக் காணவில்லை. மூன்று காய்கள் மட்டுமே பாதி சிவப்பாகவும் பாதி பச்சையாகவும் பளுப்புக்கும் வெளுப்புக்கும் நடுக் கட்டத்தில மின்னிக் கொண்டிருந்தன. 


“என்னதான் காவல் காத்தாலும் இந்த வருசம் ஐசாக் நியூட்டன் ஆக முடியாது போல இருக்குது...” என்று நினைத்துக் கொண்டு தேத்தண்ணி குடிச்ச கப்பை கொண்டு போய்ச் சிங்கிலை வைத்து விட்டு வந்து கதிரையில் இருந்தபோது ஒரு தட்டில் துண்டுகளாக நறுக்கப்பட்ட அப்பிளுடன் மிளகாய்த் தூளும் உப்பும் கலந்து எடுத்து வந்து 


“அப்பா எங்கடை அப்பிள் மரத்தில புடுங்கினது… சாப்பிடுங்கோ…” என்று நீட்டினாள் மகள். தாயைப் போலவே அவளுக்கும் அப்பிளைத் துண்டுகளாக நறுக்கி உப்புத் தூளில் தொட்டுச் சாப்பிடுவதில் அப்படி ஒரு விருப்பம். எதுவும் சொல்லாமல் நானும் ஒரு துண்டு அப்பிளை எடுத்து உப்புத் தூள் பிரட்டிச் சாப்பிடத் தொடங்கினேன். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்